வேர்த்திரள்
காகமொன்று விதை உமிழ்ந்து விதைத்ததிந்த கானகம்,
வளர்ந்த நாளில் வந்த (பறவைக்)கூட்டம் வாழ்த்திடும்,
நூறு நூறு நூறு வேர்கள் முளைத்திடும்.
பறவையோடு சேர்ந்து வந்த வாலிருந்த வானரம்,
மரமிறங்கி வால்கழற்றி வாள்சுழற்றி மரங்கள் வெட்டும்போதெலாம்,
வீழ்ந்ததிங்கு அங்குமிங்கும் அங்குமிங்கும் எங்குமெங்கும் கானகம்...
வீடிழந்த பறவைக்கூட்டம் விதைசுமந்து வேகமாய்,
இறகுவீசி காற்றிலேறி கடிதுசென்று தூரமாய்,
பெரும்பரப்பில் உயி'ரெச்ச'விதைகள் லட்சவிதைகள் தூவுமே.
புதிய நிலத்தில் பழைய விதைகள்
புதிய வேர்கள் பதிய பதிய
உயிர் முளைத்து மரங்களிங்கு வளர்ந்திடும்,
விதையுதிர்த்த பறவைக்கூட்டம் மனமகிழ்ந்து தங்கிடும்,
மரமறுத்த மனிதக்கூட்டம் மீண்டும் மீண்டும்
வெற்றியின்றி முயன்றபோதும் கானகங்கள் நீண்டிடும்.
வேர்த்திரளின் உயிர்முடிச்சு விதைவயிற்றில் விதைவயிற்றில்
புதைந்ததறிந்த மனிதக்கரங்கள் ஆய்வகத்தில் மரபணுக்கள்
வெட்டியொட்டும் அவலம் கண்டும் பதைத்திடாது வேர்த்திரளும்
கனிவுடனே கனிவுடனே மனிதமூச்சு காத்திடும்
இலைவழியே காய்வழியே கனிவழியே பகிர்ந்திடும்,
வெட்டும்கூட்டம் வெட்டாக்கூட்டம் பாகுபாடு இன்றியே...
காடு இன்றி வீடு இல்லை விடியலில்லை என்ற பெரிய உண்மையை
மனிதர்மட்டும் மனிதர்மட்டும் மறந்ததிங்கு எங்கணம்?
கருத்துகள்
கருத்துரையிடுக