எச்சரிக்கை 1: இந்த தேசத்தின் இறையாண்மையை நேசிப்பவர்கள் மட்டும் படிக்கவும்.
எச்சரிக்கை 2 : இது ஒரு குறுந்தொடர்.
எச்சரிக்கை 3: உங்கள் ஆன்மாவை இத்தொடர் உறுதியாய் புரட்டிப்போடும்!
############
1800களில் கிழக்கிந்திய கம்பெனி தேயிலை வளர்க்க நம் காடுகளை வெட்டி வீழ்த்தத்தொடங்கியபோது தொடங்கிய யுத்தம் ஒன்று இன்றளவும் தொடர்கிறது...
காடு, தொல்குடியினரின் வீடு. காடு, இவர்களது வாழ்வாதாரம்.
கோண்டு, குஜ்ஜர், என வடக்கில் தொடங்கி இருளர், தோடர் என தெற்குவரை, இவர்களின் வீடுகள் ஏராளம்.
ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் அனைவரது வீடுகளிருந்த காடுகளும் தேயிலை தோட்டங்களாக மாறிப்போக, கலவரங்கள் வெடித்து, பரவி, அடங்கி, பரவி...
வீடிழந்த தொல்குடியில், காடு தாண்டி வேறு ஒன்றும் அறியாதவர், பலர் தேயிலை தோட்ட கூலி / அடிமை / கொத்தடிமைகளாக மாற, இன்னும் பலர் காட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான வரையப்படாத எல்லைகளில் வழிப்பறிக்கொள்ளை முதல் மூலிகை, தேன், சுள்ளி விற்று வயிறு வளர்க்க, கம்பெனி பறித்த தேயிலைகள் பத்திரமாய் சந்தைக்கு போவது கடினமாச்சி (இவர்கள் வழியே தேயிலை கள்ள சந்தைக்குப்போகிறதாம்).
கம்பெனி ஆதிக்கப்பகுதிகளில் இப்படி 'அடாவடி(!)' செய்பவரை கைது செய்து, வழக்கு பதிந்து, சிறையில் அடைத்து, வெளி வந்தவர்களை தொலைதூர ஒதுக்குப்புறங்களில் முள் வேலிகளுக்குள் குடியமர்த்தி... கம்பெனிக்கு மூச்சு வாங்கியது.
தேயிலை மீதான காதல், அதிகார வெறி, வேறுபட்ட வாழ்வியல் பயின்ற சூதுவாதில்லாத மக்கள்... கம்பெனிக்காரர்களை இதையெல்லாம் செய்யவைத்தது. Criminal Tribes Act என சட்டங்கள் இயற்ற வைத்தது. குறிப்பிட்ட சமூகங்கள் அனைத்தும் குற்றவாளிகள். அவர்களது குழத்தைகள், மனைவி, பெற்றோர், உற்றார், உறவினர், நட்பு வட்டம் என அனைவரும் குற்றவாளிகள் என குற்றப்பரம்பரைகள் உருவாக்கப்பட்டன, அந்த சமூகங்களில் பிறக்கும் குழந்தைகளும் பிறவிக்குற்றவாளிகள் என முத்திரை குத்தின சட்டங்கள். குடியிருப்பு தாண்டி எங்கு செல்லவேண்டுமானாலும், என்ன வேலைக்காக என காவல் நிலையத்தில் தாக்கல் செய்து, அனுமதி கிடைத்தால் போகலாம்.
கிடைக்காதபோது மீறிப்போனால்?
போன இடத்தில் வாழும் மக்கள் இவர்களை கண்டவுடன் காவல் நிலையத்திற்கு ஓடி, தெரிவிக்கவேண்டும்.
தவறு செய்தால் தண்டனை கடுமை.
சரி, காட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்டவர்களை நாட்டார் என்ன செய்தனர்?
தொல்குடிகளின் காடுகளை விளை நிலங்களாக்கினர்.
தொல்குடியினரின் வாழ்வில் பொய், புரட்டு, பித்தலாட்டமில்லை, எளிதில் நம்பிவிடும் அப்பாவிகள். நல்ல அடிமைகள் என, நில உரிமையாளர்கள் தம் நிலங்களில் குத்தகை பணிக்கு அமர்த்தினர். வானம் பொய்த்து குத்தகைக்கு வழியில்லாத காலங்களிலும் குத்தகை கட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி களவை கைவிட்ட குடிகளை மீண்டும் களவு செய்ய தூண்டினர்; "களவாண்டதில் இருந்து குத்தகை கட்டிவிட்டு மிச்சத்தில் பிழைத்துக்கொள், போலீஸ் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்"
ஐயாயிரம் மக்கள் கொண்ட ஒரு குற்ற சமூகம், 'நாங்கள் மீண்டும் களவுத்தொழில் செய்யமாட்டோம்!' என போரடி நீதிமன்றப்படிகள் ஏற... ஐயாயிரம் பேரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்!
வேறு வழியின்றி களவுக்கு திரும்பியவர்கள் இன்று வரை (160 ஆண்டுகள் கழிந்தும்) களவு வழியே வாழ்கின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நாம் நெஞ்சம் கதை பதைக்க சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்த்தது, இவர்கள் கதையைத்தான்!
தொடரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக