மலக்குழி சுத்தம் செய்யும்போது மூச்சு திணறி 4 பேர் பலி.
பழுதடைந்த மின்கம்பத்தில் ஊழியர் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி கரியானார்.
எட்டு அடி உயர சாமி சிலைக்கு அபிஷேகம் செய்கையில் வழுக்கி இறந்தார் அர்ச்சகர்.
இது மூன்றும் இன்றைய நிகழ்வாக இருந்தால் உங்களை அதிகம் பாதிப்பது எது?
அர்ச்சகர் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் ஊடக வெளிச்சம் காரணமாக சில நாட்களுக்குள் திரட்டப்பட்டுள்ளது...
மின்சார ஊழியர், நிரந்தரப்பணியாளராக இருந்தால் மட்டுமே, அரசு இழப்பீடு கிட்டும். கரியானவர் அநேகர் கான்ட்ராக்ட் ஊழியர்கள்! (கஜா புயல் முடிந்து மின் சீரமைப்பு பணிகள் நடந்த இடங்களிலும் இந்த அவலம் நடந்தது...).
மலக்குழிக்குள் மரணித்தவர்கள் - அவர்கள் குடும்பம் பற்றி யாருக்கும் கவலையில்லை.
இது தினம் தினம் நடப்பதுதானே...
ஏன்? நாம் இப்படி சிந்திப்பது எதனால்??
காரணம், மழுங்கிப்போன நம் உணர்வுகளே.
பெருஞ்சோகத்திலும் நாவல்டி இருந்தால் மட்டுமே நாம் திகைப்போம்.
இதுவே வாரா வாரம் ஒருவர் இப்படி வழுக்கி விழுந்து இறந்தால் நாம் பதறமாட்டோம், பழகிப்போவதனால்.
நம் நாட்டில் புரையோடிப்போன பெரு வியாதி, Survivor Bias; 'அப்பாடா, நாம இன்னும் இருக்கோம், நமக்கு வேண்டியதை பெறுகிற வசதி இருக்கிறது!' என்ற மனப்பான்மை. இதற்கு வர்ணபேதம் கிடையாது.
மின் வாரியத்திலும் இன்றுவரை கான்ட்ராக்ட் ஊழியர்கள் பழுதடைந்த மின் கம்பங்களில் செப்பனிடும் பணியில் இருக்கையில் மின்சாரம் தாக்கி இறந்துபோவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது...
அடிப்படை பாதுகாப்பு வசதிகள்கூட இல்லாத, உயிரைப்பணயம் வைக்கும் தொழிலாய் இவை மாறிப்போனால் நமக்கென்ன? நம் வீட்டு மலக்குழி காலியாகணும், கழிப்பறையில் விளக்கு எரியணும்...
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதை சந்திரனில் ஆட்களை இறக்குவதற்கு பயன்படுத்துவதா அல்லது மலக்குழிகளில் / மின்கம்பங்களில் நம் குடிமக்கள் இறப்பதை தடுக்க பயன்படுத்துவதா என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம், அரசுகள் வழியே, நம் வாக்குகள் வழியே...
ஸ்வச் பாரத்தில் கட்டப்பட்ட லட்சக்கணக்கான மலக்குழிகள்... அட போங்கப்பா, அவற்றை மக்கள் பயன்படுத்தினால்தானே அவை நிறையும் என்கிறீர்களா?!
கருத்துகள்
கருத்துரையிடுக