உடற்சூடு தணிக்க ஆயிரம் உண்டிங்கு வழி.
புவி சூடு தணிக்க மரங்களால் மட்டுமே இயலும்.
மழைத்துளி வெறும் உயிர்த்துளி மட்டுமே.
மரம் புணர்ந்து குளிர்ந்த புவி வயிற்றில் மட்டுமே அவை இறங்கும். சூல் தரிக்கும்.
புணர மரங்களின்றி பூமி தரிசாகி வெம்பி பாலையாவது நம் கண்முன்னே கண்டும் மேகங்களை (மழைக்)கருவூட்ட முயல்வது அறிவியலின் சாதனை.
மரங்களைப்பிரிந்த பூமியின் பசலை (நோய்) கண்டும் துயரம் கொள்ளாது, வன்புணர்வாய் ஆழ்துளைகள் இட்டு நம் மோகம் தணிந்தபின் வசிப்பிடங்களின் கூரைகளில் தேக்கி அங்கிருந்து நீரிறைத்து வாழும் குலம் எங்கள் குலம்.
குலமானம் காக்க, இருக்கும் மரங்களையும் வேரோடு வெட்டுவது நம் சாதனை; குடிநீர் ஆலைகளும் இன்னபிறவும் அமைக்க நமக்கு நிலம் தேவையல்லவா!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்த நம் குலத்திற்கு "தாவர சங்கமம்" மட்டும் புரியாமல் போனதேன்?
கருத்துகள்
கருத்துரையிடுக