முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மண்ணு கண்ணு!


மண்ணுல உடம்பு உருண்டு பொறண்ட வரைக்கும் நல்லாதான் இருந்தோம்.

கால் வெரலு நிலத்தில பதிய பதிய நடந்தவரைக்கும் நல்லாதேன் போய்கிட்டு இருந்தது.

உடம்பு மேல உடுப்பு ஏறிகிச்சி.

காலுக்கு செருப்பு வந்தது. 

காலுக்கு செருப்பு மாதிரியே நிலத்துமேல கல்லு தரை வந்தது.

கல்லு தரை மேல டைல் வந்தது.

டைல் மேல கார்பெட் வந்திச்சி.

கார்பெட் மேல சோபா / சேர் / கட்டில் வந்திச்சி.

அது மேல மெத்தை வந்திச்சி.

இப்புடி ஒண்ணொன்னா மனுசன மண்ணுலந்து பிரிச்சிகிட்டே போவ, கொள்ளுத்தாத்தாவ அந்நியமா பாக்குற கொளந்த மாதிரி மண்ணையும் அந்நியமா பாத்து...ஸ்பூன்லயும் ஃபோர்க்லயும் பிட்சா தின்னு பழகிட்டு கோக்கு குடிச்சிகிட்டு போங்கு ஆட்டம் ஆடிகிட்டு கோக்குமாக்கா ஆக்கிப்புட்டோம் வாழ்க்கைய.

ஆடி அலுக்குறதுக்கு முன்னயே அம்புட்டும் ஒத்துக்காது போவச்சொல்லோ அடிச்சி பிடிச்சி டாக்குட்டராண்ட ஓடுனா... அந்தாளு அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுல்லாம் பண்ணி... பலான பலான மாத்திர மருந்தெல்லாம் முளுங்கியும் சொஸ்தமாவத போயி நாட்டு வைத்தியர தேடி புடிச்சா அந்தாளு நாடி புடிச்சி பாத்துகிணு...

'அரிசிக்கஞ்சி குடி. அதும் ஒத்துக்கலண்ணா கம்மங்கூழு குடி' ன்னு தொடங்கி,

'மெத்தைல படுக்காத, கார்பெட்டை கடாசிட்டு கட்டாந்தரைல உருண்டு கிட'

'டைலு சூடு அல்லாங்காட்டி குளிர்ச்சி, பிரிச்சிடு'

'கல்லு தரை ஆவவே ஆவாது. உடச்சி கடாசிடு'

'செருப்பில்லாம நட, உடம்புல உள்ள உறுப்புங்களுக்கெல்லாம் சூச்சுமம் உள்ளங்கால்ல கீது' 

'சூரிய வெளிச்சம் ஒடம்புல படோணும். அதனால் என்ன பண்ற, கோவணம் மட்டும் கட்டிகினு தெனமும் ஒரு மணி நேரம் வெயில்ல கெட' 

இப்படி  'டேக் டைவர்சன், டேக் டைவர்சன்'னு நவத்தி படிப்படியா நாம தொடங்கின நல்ல எடத்துக்கே கொண்டாந்து நிறுத்திட்டாப்ல!

"அடங்கொய்யால! அப்ப வியாதிய வாங்குறதுக்காவவா இம்புட்டு செலவு பண்ணி நம்ம மண்ணுலந்தே அந்நியமானோம்' னு ஞானோதயம் வந்தவன்லாம் நல்லா கீறாம்ப்பா!

அதாகப்பட்டது மக்களே, எத்தனை லேயர போட்டு பிரிச்சாலும் ஒரு ஸ்டேஜில ஒத்துக்காத போயி... 
ஒண்ணொன்னா உருவசொல்லோ மறுக்காண்டியும் மண்ணுல கால வச்சா தப்பிப்போம். இல்லன்னாலும் மண்ணுலதானே முடியணும், அப்ப மண்ணு...கணக்க நேர்பண்ணிடும்!

தாய்மொழி மறந்தாச்சு.

தந்தை தொழில் மறந்தாச்சு.

அவங்க வாழ்ந்த வாழ்வியல தொலச்சாச்சி...

அதோட இன்னொன்னையும் நமக்கே தெரியாம தெனந்தெனம் தொலச்சிகினே கீறோம்...

இந்த பதிவ படிக்கிறவங்க இன்னக்கி நைட்டு தட்டில விழுகிற சாப்பாட்டில, மண்ணுலேந்து வந்தது இன்னா? மத்தது இன்னா? அதெல்லாம் எங்கேந்து வந்துதுன்னு தெரிஞ்சி சாப்பிட்டாலே போதுங்ணா! போதுங்க்கா!
தொலச்சது இன்னான்னு கண்டுபுடிச்டலாம் :-)

பதிவு இன்னும் முடிலபா. அப்பால இன்னொரு முக்யமான மேட்டரு கீது!

KFC - Kentucky Fried Chicken எனும் உலகளாவிய மாமிச உணவு நிறுவனத்தின் மலேசிய கிளைகள் பலவற்றை (100+ in number) அந்த நிறுவனமே இந்த வாரம் மூடத்தொடங்கியிருக்கிறது. அங்கு நிலவும் மந்தமான பொருளாதார சூழலால் இந்த தற்காலிக மூடல் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனாலும் உண்மையான காரணம் என்ன தெரியுமா? 

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மலேசிய நாட்டில் அங்குள்ள இஸ்லாமியர்கள் பெரிய எண்ணிக்கையில் KFC நிறுவன உணவுகளை புறக்கணிக்கத்தொடங்கியுள்ளனர். இதனால் கல்லா கட்ட முடியாமல் தடுமாறும் நிறுவனம், செலவினைக்குறைக்க தற்காலிக மூடல்களை அறிவித்துள்ளது.

அவர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்? 

தம் இன மக்கள் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய படைகளால் தாக்கப்படுவதாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்க நாடு முழு பக்கபலமாய் நிற்பதாலும், KFC நிறுவனம் ஒரு. அமெரிக்க நிறுவனம் என்பதாலும்!

அதாகப்பட்டது மக்களே, ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒரு இனத்துக்கு இன்னல் ஏற்பட்டால் ஒரு உலகளாவிய நிறுவனத்தின் வணிகத்தையே முடக்கும் ஆற்றலை கொண்டிருக்கும் நம் உலக மக்கள், உலகெங்கும் இயற்கை வளங்களின் மீது வன்கொடுமை செய்து கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தையும் புறக்கணித்து முடக்க இயலும்தானே?!

அப்புறம் ஏன் நாமெல்லாம் ஒரு ஆணியும் புடுங்காம கீறோம் மக்களே?!

பூமி உருண்டை வெகு வேகமாய் வகை வேகுண்ணு வெந்திகினே கீதாம்.

'இன்னும் துண்ற பக்குவத்துக்கு வர்லபா'னு கறி சோறு சாப்பிட பந்தியில் கதையடித்து காத்திருக்கும் கூட்டமாகிப்போவதற்கா நம் பரிணாம வளர்ச்சி?

நாம் பந்தியில் காத்திருக்கும் கூட்டமல்ல, அண்டாவில் வெந்துகொண்டிருக்கும் கறியே நாமதான்னு உணரக்கூட முடியாத போதையில் நம்மை முழுகடித்திருக்கிறது பேராசைப்பெருநுகர்வுக்கலாச்சாரம்!

வெளங்குமா?!


பேரன்புடனும் பெருங்கவலையுடனும்,
பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...