கோண்ட்வானா (Gondwana) என்ற பெருநிலப்பரப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இத்தியா, இலங்கை, மொரிஷியஸ், மடகாஸ்கர் அனைத்தையும் தாங்கி ஆப்ரிக்கா வரை நீண்ட, நீரில் மூழ்கிப்போன நிலப்பரப்பு...மேற்சொன்ன நாடுகள் மட்டுமே தப்பி மிதந்தவை.
இந்த பரப்பின் மிச்சமாய் இன்றும் இந்தியாவில் வாழும் கோண்டு பழங்குடியினர், சித்திரங்கள் மூலம் வாழ்வை வெளிப்படுத்துபவர்கள். அபூர்வமான சித்திரங்கள், மனதை மயக்கும் வண்ணங்களில். பறவைகள், மிருகங்கள், மரங்கள், மீன்கள் என பிண்ணிப்பிணைந்த இவர்களது ஓவியங்களில் மனிதர்களுக்கு மட்டும் இடமில்லை!
இயற்கையோடு ஒன்றி, கொண்டாடி வாழும் இவர்களது மகிழ்வின் வெளிப்பாடான இவ்வோவியங்களில் (அழிவின் கருவியாக ஆகிப போன) மனிதர் இல்லாதிருப்பது பொருத்தம்தானே?
ஆதி மனிதன் எந்த நிலப்பரப்பில் இருந்து தோன்றினான்? ஆரியமா? திராவிடமா? என்றெல்லாம் மரபியல் ஆய்வு செய்யும் நிபுணர்கள் இந்த மக்களின் கதையை, வேர்களை, மரபணுக்களை சீந்துவதே இல்லை (அவர்களுக்கு உண்மை தெரிந்ததனால்கூட இருக்கலாம்!)
ஐன்கார் சிங் ஸ்யாம்; கோண்டு தொல்குடி இளைஞன். மத்தியப்பிரதேசத்தில் நர்மதை நதி தீரத்தின் காடுகளில் ஒரு கிராமத்தில் வளர்ந்தவன். பூர்வகுடிப்பாடகன், ஓவியன்.
1980களில் டெல்லியில் ஒரு விற்பனை கண்காட்சியில் தான் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்த, விரைவில் கலைக்கண்கள் பல மொய்த்தன. அவனது ஓவியங்கள் பிரபலமாகி, வாய்ப்புகள் பெருகின, ஆதரிப்பவர்களும் பெருகினர்.
புலம் பெயர்ந்து, பெரு நகர ம்யூசியங்களுக்காகவும், ஆர்ட் காலரிகளுக்காகவும் வரையத்தொடங்கினான், சின்னூண்டு பேப்பர் முதல் மிகப்பெரிய சுவர்கள் வரை அவனது ஓவியங்கள் மிளிர்ந்தன.
அகில இந்திய வெளிச்சம், உலக வெளிச்சமாக மாற, 2000 ஆம் வருடம் ஜப்பானில் ஒரு ம்யூசியத்தில் resident artist என்கிற கௌரவத்துடன் (ஊதியம் சொற்பமாய்தான் என்றாலும்) Well Wishers மூலம் இடம் பெயர்ந்தான், ஓவியங்கள் வரைந்தான், வேற்று கலாசார, நில, தனிமையில் வாடினான், ஊர் திரும்ப விரும்பியும் 'இன்னும் ஒரு வருசம்தான், போய்டலாம்' என்ற சமாதானங்களால் துன்புற்று... தற்கொலை செய்துகொண்டான், அவனது ஓவியங்களில் தன் ஆன்மாவை பதித்துவிட்டு...
புலம் பெயர்தலின் வலி, இந்த தொல்குடி இளைஞனின் கலையை, வாழ்வை தின்றுவிட்டது.
இவனது திறமைகள் இல்லாவிட்டாலும்கூட பொருளாதார, சமூக மதிப்பீட்டு சிக்கல்களினால் புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் உணர்வர் இந்த வலியை.
கருத்துகள்
கருத்துரையிடுக