42 உயிர்கள், என் சகோதரர்கள், போர் முனையில் இறக்கவில்லை; பணிக்கு திரும்பும் வழியில், கோழைத்தனமான, மிருகத்தனமான தாக்குதலினால்...
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற ஹமுராபி கால சட்டங்களால்/தண்டனைகளால் இவற்றை அணுக இயலாது. அவ்வாறு குரல் எழுப்புபவர்கள் எழுப்பட்டும், பயனிருக்காது.
குறைந்தது 50 வாகனங்கள், குற்றத்தடுப்பு வீரர்கள் பயணம் செய்யும் பாதையில் இது சாத்தியப்பட்டிருக்கிறது, இரு நாட்களுக்கு முன்பு துப்பு கிடைத்தும்...
ஆள்வது எவராக இருந்தாலும் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள், இயலாது, முயன்றாலும்... நிலப்பரப்பும் அரசியல் பொருளாதார இழைகளும் பிண்ணிப்பிணைந்த சிக்கல் இது. Standard Operating Procedure இதற்கும் உண்டு.
இத்தகைய நிகழ்வுகள் இந்திய நிலப்பரப்பில் எங்கு நிகழ்ந்தாலும் சரிசெய்யப்படவேண்டியவை, அது சுக்மாவில் என்றாலும், தூத்துக்குடியில் என்றாலும், மும்பையில் என்றாலும், காஷ்மீர எல்லையில் என்றாலும்.
நாம் எதி்ப்புக்குரல் எழுப்ப வேண்டியது இவை அனைத்திற்கும் எதிராகவே. நம் இறையாண்மை என்பது எல்லையில் மட்டும்தானா என்ன?
அமைதியாய், வேண்டுவோம், இறந்தோர் ஆன்மா இறையடி அடையவும், அவர்களது இறப்பு வீணாகக்கூடாது என்றும்.
இதையும் தாண்டி தீவிரமாய் ஏதாவது நாட்டிற்காக செய்ய விரும்பினால் வீட்டுக்கு ஒருவரை தேசம் காக்க அனுப்புவோம்.
பின் குறிப்பு: என் தமையன் எல்லைப்பதுகாப்புப்படையில் காஷ்மீரில் பணிசெய்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் ஒருவராய் சூடான் நாட்டின் Darfur நகரில் ஆறு மாதங்கள் ராணுவ குடியிருப்பு ஒன்றில் 'யார், எங்கிருந்து, எதற்காக, எப்போது சுடுவார்கள்' என்ற சூழலில் இருந்து திரும்பியவர்; தேசங்களை தாண்டியும் நீளும் நம் வீரர்களின் பணி. அவர்களது உயிர், நாடுகளின் ஆடு புலி ஆட்டத்தில் பலியாவது உலகம் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
பலியானது ஒற்றை உயிராக இருந்தாலும்கூட, தியாகத்துக்கு மதிப்பு சேர்ப்பது ஆள்பவர் கைகளில். யாரை ஆள்பவர் ஆக்குவது என்பது நம் கைகளில்...
எல்லையில் நம் கேளிர் சிந்திய இரத்தத்தி்ன் பிசுபிசுப்பு நம் ஆள்காட்டி விரல் மையாகட்டும் என வேண்டுகிறேன்...
கருத்துகள்
கருத்துரையிடுக