என் செயல்களுக்கு காரணம் கேட்காதே, மறைந்துபோவேன் என்றாள் ஒருத்தி.
ஐவரல்ல... அறுவர். ஆனால் இதை ஊருக்கு உரக்கச்சொல்ல முடியாதே என்றாள் ஒருத்தி.
மூன்று வரம் கேட்டாள் ஒருத்தி.
பீஷ்மனின் தலை கேட்டாள் ஒருத்தி.
மாயமான் கேட்டாள் ஒருத்தி.
மணமானவன் மேல் (மூக்கு அறுபட) மையல் கொண்டு சினந்தாள் ஒருத்தி.
உன் கரம் பட்டாலே தீக்குளிப்பேன் என்றாள் ஒருத்தி.
ஒருவனின் தொடை ரத்தம் கேட்டாள் ஒருத்தி.
கொண்டு வந்ததை வழக்கம்போல் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றாள் ஒருத்தி.
அதனால் ஐவரின் மனைவியானாள் ஒருத்தி.
ஒருத்தியின் அம்பு பீஷ்மனை துளைத்தது.
ஒருத்தியின் ஆற்றாமை வாலியை வதைத்தது.
ஒருத்தியின் சிரிப்பு அரக்கு மாளிகையை எரித்தது, அவள் சேலையை உரித்தது. நூற்றுவரை அழித்தது.
ஒருத்தியின் கற்பு இலங்கையை எரித்தது, அவள்மீதான பேராசை இலங்கேசனை அழித்தது.
காவியங்கள் இந்த 'ஒருத்தி'களின்மீதே கட்டி எழுப்பப்பட்டன. களப்பலியானவனின் மனதைக்கவர்ந்தவளும், சக்ரவியூகத்தில் சிக்கியவன் மனையாளும் இந்த ஒருத்திகளில் அடக்கம்.
ஐவரின் தாய் பத்தினியா என எவரும் கேட்கவில்லை.
ஐவரின் மனைவி பத்தினியா என எவரும் கேட்கவில்லை.
(அக்காவியத்தின் மையம் வேறு.)
இன்னொரு காவியத்தின் மையம் கருதி, கற்புடை மனைவி பத்தினியா என ஊர் கேட்க, கட்டியவன் கேட்காமல் கேட்டது ஒற்றைக்கேள்வி, அக்கினிக்கேள்வி.
விடையாய் அக்கினிக்குள் அவள் புக, அக்கினியும் கற்பு பெற்றது அன்றுதான்.
அதன் பின்னான நாட்களிலெல்லாம் நின்றாடும் சுடரிலெல்லாம் சீதையின் உயிர்.
ஊதி அணைப்பது வேண்டாமே...
(அணைந்தபின் சுழலும் புகையில் இன்னும் பறக்கிறது கிழக்கழுகு...)
'எங்கெலாம் தலைவனின் நாமம் ஒலிக்கிறதோ அங்கெலாம் நானிருப்பேன்' என 'விடையறியும்' ஆவலில் காத்திருக்கும் வானரத்துக்கு இன்னமும் அந்தக்கேள்வி கன்னத்துள் அடைபட்டே இருக்கிறது...பயத்தாலோ பக்தியாலோ...
யுகங்களின் ஊடாக இரு காவியங்களையும் இணைக்க முடிந்த அக்குரங்குக்கு காவியங்களின் மையங்களோ, அக்கினியை ஏவிய மனித மனமோ புரிபடுமா என்ன?!
கருத்துகள்
கருத்துரையிடுக