அம்மா என்றால்
ஈர மனது, ஈர விழிகள்.
மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், கவலை, கோபம்...உணர்வுகள் எதுவானாலும் விழி தளும்பும், கண் சுரப்பிகள் செயல் இழந்த பின்னும்.
இவரது ஈர விரல்கள் பட்ட... பட்ட மரமும் துளிர்க்கும். மனிதர்கள் மட்டும் ஏனோ இதை உணர்வதில்லை என்ற வேதனை, தளும்பும் மனதில் கூழாங்கற்களாய் மூழ்கிக்கிடக்கும்...
எண்ணிக்கையில் பெரிய குடும்பத்தின் குலக்கொடி, அநேக உடன்பிறப்புகளுக்கு மறு தாய், மருந்தாய்... வாழ்வின் முதிர் தினங்களிலும் இன்று வரையிலும் இந்த மருந்து நிற்காது பெருக, மகிழ்வாய் சில, கசப்பாய் பல என உறவுகள்..
கால வெள்ளத்தின் இழுப்புக்கெல்லாம் அசைந்துகொடுக்காத இவரது வாழ்க்கைத்துணை (அம்மாவை விட பெரிய 'மருத்துவர்') பெரிய வரமாய், சாபமாயும் கூட...
நெடிய வாழ்வில் காலம் தந்த வேடங்களை, சுமைகளை, பூங்கொத்துக்களை, விருப்பு வெறுப்பின்றி சுமந்துகொண்டு இன்றும் உரையாடிக்கொண்டிருக்கிறார் தன் 'வளர்ப்புகளுடன்'...
இவரைப்பற்றி முழுமையாக அறிய இவரது கரங்கள் பட்ட தாவரங்களை மட்டுமே கேட்கவேண்டும், (எனக்குக்கூட முழுதாய் தெரியாது). அவரது வாழ்வின் கதை கேட்டு இவை மகிழும், வாடும், அழும், சிரிக்கும்...
பல முறை ஊர் சென்று திரும்பும்போதெல்லாம் கதை கேட்கும் ஆவலில் அவரிடமிருந்து பல பூச்செடிகள் பெற்று வருவேன்.
நான் கொணர்ந்த அச்செடிகள், 'என்ன இருந்தாலும் அவர் போல வருமா' என அவரை விட்டு பிரிந்த சோகத்தில் வாடி விடை பெற, மிஞ்சிய செடிகள் சொல்லும் கதையின் மொழி புரிபடவில்லை முழுதாய் இன்னும்.
நான் உணவுக்காடுகள் வளர்ப்பதாய் அவரிடம் என் அனுபவங்களை பகரும் அரிதான நொடிகளில் அவர் கண்களில் ஒரு ஒளி படரும்...
அவரது ஆன்மாவே இங்கு பூத்துக்குலுங்க, என் காடு எம்மாத்திரம்?!
என் ஆன்மாவின் மீது மெலிதான போர்வையாய் அவரது பேரன்பு, சமயத்தில் இதமாய், சமயத்தில் வியர்வை கசகசப்பாய், என் இருப்பு வரையில் இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக