ஆயிரத்து முன்னூறு அடி உயரத்தில், அந்தரத்தில் காற்றில் ஆடும் கயிற்றில், இரு முனைகளிலும் கைது செய்ய காவலர்கள் காத்திருக்கும் சூழலில், பனிப்புகைமூட்டம் பார்வையை மறைக்க... ஒற்றைக்கம்போடு கயிற்றின் மீது ஒற்றைக்காலில் balance செய்து நிற்க, கயிற்றில் அமர்ந்து ஒய்வெடுக்க...நம்மால் முடியுமா?
முடியும் என்கிறார் லெ பெடிட். Audacity of Act, this is!
செயல் தைரியத்தின் உச்சம்!
அமெரிக்க இரட்டை கோபுரம் இன்று இல்லை.
லெ பெடிட் இன்றும் இருக்கிறார்.
Audacity of Hope, நம்பிக்கை தரும் தைரியம் என்ற புத்தகம் எழுதி ஒபாமா அதிபரானார்.
Audacity என்ற சொல்லுக்கு தைரியம் என்ற பொருளை நாம் எப்படி வேண்டுமானால் உணரலாம், லெ பெடிட் உணர்ந்த, வெளிப்படுத்திய விதம், அதன் உச்சம்!
Flashback:
1960களில் லெ பெடிட் தன் பதின் வயதில், அந்தரத்தில் கயிறு கட்டி நடக்கும் வித்தை பழகும் சிறுவன். France இல் வசிப்பவர். Philippe Petit என்பது முழுப்பெயர். பொடியன் போல சிறிய தேக அமைப்பு அவரது காரணப்பெயராயிற்று. லெ பெடிட் என்றால் பொடியன் என்று பொருள்.
ஒரு நாள் முடி வெட்டிக்கொள்ள ஒரு சலூனில் காத்திருக்கையில் செய்தித்தாளை புரட்டுகிறார். அதில் ஒரு துணுக்குச்செய்தி, 'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகப்மெரிய கட்டிடங்கள், Twin Towers, கட்டப்போகிறார்கள்'.
அவர் மனதில் ஒரு பொறி; 'என்றாவது ஒரு நாள் நான் இந்த கோபுரங்களின் இடையில் கயற்றில் நடப்பேன்'.
இன்னும் எழும்பாத அந்தக்கோபுரங்களின் இடையில் நடப்பது அவரை தூங்க விடாத கனவாக மாறிப்போக, தன் வசிப்பிடத்திற்கு அருகில் பயிற்சிக்களம் அமைக்கிறார். இரு குச்சிகளை பல நூறு அடிகள் இடைவெளியில் ஊன்றி இடையில் கயறு கட்டி அதில் Balance செய்ய கையில் ஒரு நீள்கம்பு மட்டுமே துணையாக, கயற்றின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அடிமேல் அடிவைத்து நடை பயிலுதல், தரையிலிருந்து 25 அடி/50 அடி/100 அடி உயரத்தில்.
கரணம் தப்பினால் மரணம்.
காதலியும் நண்பனும் உறுதுணையாய் நிற்க, பயிற்சி தொடர்கிறது.
இரட்டை கோபுரங்கள் எழும்ப எழும்ப லெ பெடிட் இன்னும் உயரமான கட்டிடங்களின் இடையில் 'நடை' பழகுகிறார். Notre Dame என்கிற உலகப்புகழ் ப்ரெஞ்சு சர்ச்சும் இதில் அடக்கம்.
Twin Towers திறப்புவிழா கோலாகலமாய் நடக்கிறது.
தன் கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டதென லெ பெடிட் தன் குழுவோடு அமெரிக்கா கிளம்புகிறார். திட்டமும் தயார். அந்த திட்டம் இதுதான்;
'Twin Towers இல் நுழையவே அனுமதி வேண்டும். பாதுகாப்பு சோதனைகள், கெடுபிடிகள் ஏராளம். எனவே, நாம் அனுமதியின்றி / பொய்யான அடையாள அட்டைகளுடன் உள்ளே நுழையப்போகிறோம்.
இரு கோபுரங்களுக்கு இடையில், 1300 அடிகள் (ஆம்! ஆ. யி. ர. த். து. மு. ன். னூ. று. அ. டி. க. ள். ) உயரத்தில், காற்று பிய்த்து உதறும். அதைத்தாங்கும் அளவுக்கு ஆடாமல் தொங்கும் வலுவான இரும்புக்கம்பி வேண்டும். அத்தகைய கம்பியின் எடை பல நூறு கிலோக்கள் இருக்கும். அதையும் உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.
அந்தக்கம்பிக்கயற்றை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு கோபுரத்திற்கு வீசுவதற்கு ஏதாவதொரு கருவி வேண்டும்.
அதையும் யாருக்கும் ஐயம் எழுப்பாமல் உள்ளே கொண்டுசெல்ல வேண்டும்.
அந்தரத்தில் கயிற்றில் நடக்க balancing pole, நீள்கம்பு, அதையும் உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.
இந்த சாகசத்தை ஆவணப்படுத்த Still Camera அல்லது Video camera என ஒன்றையாவது உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.
அதிகம் காற்றில்லாத அதிகாலையே சரியான தருணம். அதற்கு முன்னரே உள்ளே சென்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, காத்திருக்கவேண்டும், யாருக்கும் சந்தேகம் வராதவண்ணம், யார் கண்ணிலும் படாமல்.
ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் லெ பெடிட்டும் அவரது குழுவினரும் அதுவரை நியூயார்க் வந்ததும் இல்லை, இரட்டை கோபுரங்களை கண்டதுமில்லை!!!
நினைக்கவே தலை சுற்றுகிறதா, Man on Wire என்கிற BBC ஆவணப்படம், ஆஸ்கர் வென்ற படம் பாருங்கள். மயிர்க்கூச்செறிதல் உறுதி!
(நிகழ்வின் நாயகர்களை பேசவைத்து, பேட்டியெடுத்து, பழைய ஒளி நாடாக்கள், சில மீளுருவாக்கங்கள் - reconstructed scenarios என நம் கண் முன்னே விரியும் காட்சிகள், வாவ்! வேற லெவல்! லெ பெடிட்டின் குழு தங்களோடு எடுத்துச்செல்லமுடிந்த photo camera வினால் எடுத்த புகைப்படங்கள், இந்த நிகழ்வை நேரில் பார்த்த மக்கள், கோபுர உச்சிக்கு விரைந்து லெ பெடிட் ஐ கைது செய்ய முயன்ற காவல் அதிகாரிகளின் வாக்குமூலங்கள்... 'மனுஷனா இவன்! கயித்துல நடந்து என் கைக்கெட்டுற தூரத்தில வருவான், பிடிச்சிடலாம்னு நினைக்கிறப்போ மறு பக்கம் நடப்பான். சார்! இடையில அம்மாம் உயரத்தில கயித்துல குந்திகினு ரெஸ்ட் எடுத்துகுறான் சார்! பல நூறு அடி கீழ தரையே தெரியாம பனிமூட்டம், எங்களுக்கு இன்னா பண்றதுன்னே புரியல' என்பதான பதிவுகள் மூலம் அமெரிக்காவும் ஏனைய உலகமும் இவரை அறிந்துகொண்டது அன்று...)
ஆயிரத்து முன்னூறு அடி உயரத்தில், அந்தரத்தில் காற்றில் ஆடும் கயிற்றில், இரு முனைகளிலும் கைது செய்ய காவலர்கள் காத்திருக்கும் சூழலில், பனிப்புகைமூட்டம் பார்வையை மறைக்க... ஒற்றைக்கம்போடு கயிற்றின் மீது ஒற்றைக்காலில் balance செய்து நிற்க, கயிற்றில் அமர்ந்து ஒய்வெடுக்க...நம்மால் முடியுமா?
முயும் என்கிறார் லெ பெடிட். Audacity of Act, this is!
பின்குறிப்பு: youtube இல் இந்த டாக்குமென்டரி கிடைக்கிறது. சென்ற ஆண்டு வந்த Hollywood படம், இந்த ஒரிஜினலின் நிழலைக்கூட தொடமுடியாது :-)
இப்பாேது நான் படித்த கதையும், கதை சாெல்லப்பட்ட விதமும் கூட வியப்பூட்டுகிறது! ஒரிஜினல் இன்னும் நன்றாகத்தான் இருக்க வேண்டும்!! பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு