"
தூக்கம் பிடிக்கவில்லை.
தூங்க முடியவில்லை.
கண் மூடிய நொடிகளிலெல்லாம் காலத்தின் கொடுங்கனவுகள் கூத்தாடும்; உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையிலும்கூட பதறவைக்கும்.
கனவல்ல அவை, நிஜத்தின் எச்சங்கள்.
வெட்டுப்பட்டு, குத்துப்பட்டு, மிதிபட்டு, அறுபட்டு, எரிபட்டு, மூச்சுத்திணறி, புதைபட்டு... கூட்டம் கூட்டமாய் வீழ்வதாய் கனவுகள்... உறங்கவிடாத கனவுகள்...
அமைதியாய் மகிழ்வாய் உற்றமும் சுற்றமுமாய் வாழ்வான வாழ்வு வாழ்ந்தவர்கள். வண்ணங்களும் இசையுமாய் வாழ்வு, உயிர் வளர்த்த வாழ்வு, செழித்த வாழ்வு... சிதைந்த வாழ்வு...
ஏனிந்தக்கனவுகள்? ஏனிந்த அழிவு? எதனால் அழிந்தோம்? ஏன்? ஏன்? ஏன்?
கனவுகளில் என்னவோ விடைகள் மட்டும் கிடைப்பதே இல்லை...
எத்தனை தலைமுறையாய் இந்த முடிவற்ற போர்?
ஆனாலும் போராடுவேன். மீண்டும் என் உற்றமும் சுற்றமும் வளர்ப்பேன். உயிர் தழைக்கும், மகிழ்வு மீளும். இன்று எனதே! நாளை நமதே!!
"
பெருநகர வீடொன்றில் கற்கள் பதித்து பூசி மெழுகிய தளத்தின் சிறு வெடிப்பில், கான்க்ரீட் உலகின் பாரம் சுமந்தவண்ணம் உறங்கிக்கிடந்த கானகத்தின் விதையொன்று கனவு கலைத்து கண்விழித்தது...
Excellent
பதிலளிநீக்கு