செத்தும் கொடுத்தான்...
கூத்துக்கலையே மூச்சாக வாழும் ஆதிமூலம். 1950களில் கூத்தின்மேல் காதலாகி மேடை ஏறியவர், கூத்து நாடகமாய் தேய்ந்து இன்றைய சினிமாவிலும் கைபேசிகளிலும் சிரிப்பாய் சிரிப்பதை மௌனமாய் கடந்து, வறுமையிலும் கொள்கையோடு (லைவ் ஆடியன்சின் முன்தான் நடிப்பது, நடிப்புத்திறனின் மதிப்பு உடனுக்குடன் லைவ்வாக கிடைப்பதில் உள்ள ஆனந்தமே தன் இதயத்துடிப்பு) தனது எழுபத்தி மூன்றாவது வயதிலும் 'ஐயா' என்ற மதிப்போடு, சொற்ப பார்வையாளர்கள் முன் உயிரைக்கொடுத்து நடித்து, நடிக்கையிலேயே உயிர் விடுகிறார்.
வறுமையில் உழலும் மனைவி, அவசிய, அவசர ஆபரேசனுக்கு பணமின்றி பேரன், மகளின் இயலாமை கலந்த மௌனம், அவரை மிக நேசிக்கும் அவரது ட்ரூப்பின் சக கலைஞர்கள், அவரது நிழல்போன்ற உதவியாளர், அவரது மறைவு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதுகூட தெரியாத பொதுமக்கள், இவர்கள் எல்லோரையும் விட்டுப்போய்விடுகிறார்.
ஒரு மாதம் துக்கம் கடைபிடித்தபின் குழு கூடி, அவரது நினைவாக தொடர்ந்து நாடகங்கள் நடிக்க முடிவு செய்கிறது.
ஒத்திகை தினங்களில் ஒரு விந்தை நிகழ்கிறது. ஒவ்வொரு தினத்தில் குழுவின் வெவ்வேறு கத்துக்குட்டி நடிகர்கள் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்த, உதவியாளருக்கு பொறி தட்டுகிறது. 'இந்தக்கத்துக்குட்டிகளின் உள்ளிருந்து இயக்குபவர், நடிப்பவர், ஐயாதான், அவரது ஆன்மாதான்! கலைக்கு அழிவில்லை என்பது உண்மை' என உணர்பவர், தனது உணர்தலை வெளிப்படுத்தாமலே ஐயாவின் மனைவி, மகளை நாடகம் பார்க்க அழைக்கிறார். அவர்கள் பார்க்கும் தினங்களிலும் வெவ்வேறு காட்சிகளில் அக்குழுவின் வெவ்வேறு உறுப்பினர்கள் பின்னிப்பெடலெடுக்க, அவர்களுக்கும் புரிகிறது.
ஒரு முறை நாடகம் பார்க்க வந்த இயக்குநர் (ஐயாவின் பெருமையை உணர்ந்த) ஒருவர் அன்று மகாபாரத அர்ஜினனின் நடிப்பை வியந்து அந்த நடிகரை தன் புதிய பட நாயகனாக்கும் விருப்பத்தை தெரிவிக்கவும், அந்த நடிகர் இவரை ஐயாவின் உதவியாளரிடம் பேசச்சொல்கிறார்.
உதவியாளர் அந்த இயக்குநரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்; 'இன்னுமொரு காட்சிக்கும் தயவு செய்து வந்து பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்யலாம்' என.
அதுபோலவே இயக்குநர் பார்க்கும் தினத்தில் முந்தைய நாள் பெடலெடுத்த நடிகர், தடுமாறி நடிக்க, இன்னொரு நடிகர் அன்று அசத்தல் நடிப்பு தருகிறார்.
இயக்குநருக்கும் புரிகிறது நடிப்பது ஐயாவின் ஆன்மாதான் என்று.
ஆனாலும் அவரது நல்ல கதையின் மீதான நம்பிக்கையில் அந்த நடிகரையே நாயகனாக்கி ஐயாவின் குடும்பத்திற்கு பணம் கொடுத்து புக் செய்கிறார்.
ஐயாவின் உதவியாளருக்கும் படத்தின் கதை ஐயாவின் நடிப்புக்கான தீனி உள்ள கதை என உள்ளுணர்வு சொல்ல சம்மதிக்கிறார்.
நாடக ரிகர்சல், நாடக தினங்களில் மட்டும் ஐயா படங்களில் நடிப்பதில்லை என்ற புரிந்துணர்வோடு படம் வளர்கிறது. ஐயாவின் பேரனுக்கு ஆபரேஷனும் நல்லபடியாக நிகழ்கிறது.
படம் எகிடு தகிடு ஹிட்டடிக்க, நாயகனின் graph உச்சம் தொடும் வகையில் தொடர் பட வெற்றிகள். 'ஐயா நடிக்கும்' என்றே விளம்பரங்கள் வெளிவருகின்றன. ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சில வருடங்கள் இவ்விதமே நகர்கின்றன.
நாயகனுக்கு, உதவியாளர் பல படங்களை மறுப்பதும் சில படங்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதும் அறவே பிடிக்காமல்போய், உதவியாளருக்கு தெரியாமல் ஒரு கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்கிறார். உதவியாளரையும் அவமரியாதை செய்கிறார். உதவியாளர் ஒதுங்கிக்கொள்கிறார்.
பட ஷூட்டிங்கில் ஒரு எளிதான காட்சிக்கு கூட ஒழுங்காய் நடிக்க இயலாது தடுமாறும் நாயகனுக்கு தன் சாயத்தின் வெளுப்பை தானே 'கண்டு' பயம் வந்துவிடுகிறது.
வெவ்வேறு தயாரிப்பாளர்கள், 'ஒரு முறையாவது வெற்றிப்படம் பண்ணினால் வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாமே' என்ற கனவில் ஐயாவின் கால்ஷீட் கேட்டு அலைகின்றனர். உதவியாளர் சரியென்று சொல்லும் படங்கள், நேர்மையான படங்கள், ஐயாவுக்கான படங்கள், பெருவெற்றி அடைகின்றன. இடையில் கதை சொல்லி அனுமதி வாங்கி பின் இடைச்செருகல்கள் செய்யும் படங்களில் ஐயா ஒத்துழைப்பதில்லை. சில படங்கள் பாதியிலேயே நிற்க, அதில் மிக பாதிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாள அறிமுக நாயகன் முதலில் தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிடுகிறார். அவரது படம்தான் ஐயா கடைசியாக நடித்துக்கொண்டிருந்தது.
செய்தி அரசல்புரசலாய் கசிய, ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கொந்தளிக்க, ஒரு ரசிகர் பொதுநல வழக்கு போட (ஐயாவின் ஆன்மாவை மேற்படி தயாரிப்பாள நடிகர் கொன்றுவிட்டார் என), வழக்கு கோர்ட் படியேறுகிறது.
கோர்ட்டில் என்ன நிகழ்ந்தது? தீர்ப்பு என்ன?
தெரிஞ்சிக்க கள்ள ப்ரிண்டாவது பாருங்க பாஸ்! அப்படியாவது இந்த அற்புத அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்களேன்!
படத்தின் நீளம் (3 மணி நேரம்), தேவைக்கதிகமாக இழுக்கப்பட்ட சினிமா ஷீட்டிங் காட்சிகளை குறைத்திருந்தால் இதன் ரீச் வேற லெவலில் இருந்திருக்கும்.
விஜய் சேதுபதி - மூன்று மணி நேர படத்தில் 35 நிமிடங்களே வந்தாலும் மூன்று மணி நேரம் தாண்டியும் கனமாக நம் நினைவுகளில் கதையை நகர்த்துகிறார், கூடு விட்டு கூடு பாய்தல் போல :-) அசாத்திய நம்பிக்கை! தொடரட்டும்!
அர்ச்சனா - தேசிய விருது ஏன் என்பதை ஐயாவின் இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து தொடங்கும் சில நொடிகளில் உணர்த்திவிடுகிறார்; அதிலும் ஒரு ப்ரேமில் அவர் அவுட் ஆஃப் ஃபோகசில் இருந்தும்கூட!
நாடக ஒத்திகைகளில் ஒவ்வொருவராக கூடு விட்டு கூடு பாயும் காட்சிகள், அவர்களின் திறமைகள், அவுரங்கசீப்பின் நாடகம், கதையில் விரவிக்கிடக்கும் குறியீடுகள் (ஆளற்ற நாடக அரங்கில், ஐயாவின் இறப்பிற்குப்பின் பறக்கும் சிட்டுக்குருவிகள்!) - பாலாஜி தரணீதரன், கலைக்கு என்றும் அழிவில்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த தளம் தமிழுக்கு புத்தம்புதிது! வாழ்த்துக்கள்!!
லஷ்மி வசந்தாவின் இசையில், இரு ஆண்கள், படுக்கையறை தளத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஆடும் அந்த நடனத்தை elevate செய்திருக்கும் லெவல், மேஜிகல்!!!!
மௌலி - எங்கேய்யா போயிருந்தீர் இத்தனை வருடங்களாய்?! Awesome!
ஐயா - படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதை சில நிமிடங்கள் மட்டுமே உணரவைத்து, பார்வையாளர்களை அவரையே மறக்கவைத்த உங்கள் ஆளுமை, கலை தாகம், உயிரற்ற புகைப்படத்திலும் ததும்பும் கம்பீரம், அமைதி, hats off சீதக்காதி!
Amazing 🤝
பதிலளிநீக்கு