வருட விடுமுறைக்காக இயூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு கிளம்புமுன்னர் என் நண்பர்கள் யாராவது, 'நீ இன்னும் ஒரு மாசத்தில அடுத்த ஊரில் இருக்கிற முதியோர் இல்லத்தில ஜட்டியோட நிக்கப்போற!' என சொல்லியிருந்தால், 'good joke!' என அதிர்வாய் சிரித்து நகர்ந்திருப்பேன்...
'அப்பா, நாங்களே வந்திடுவோம். நீ கூப்பிட வராதே' - நான்கு வயது மகள் 'பேசும் தெய்வமாய்' திரும்ப திரும்ப சொல்லிச்சென்றாள், அவள் அம்மாவோடு, ஒரு உறவினர் வீட்டுக்கு.
'நேரம் ஆச்சிம்மா. இருட்டா இருக்கு. நானே போய் அழைச்சிட்டு வரேன்'.
கிளம்பி நாற்பது அடி நடந்திருப்பேன். என்ன இடறிற்று என்று உணர்வதற்குள், எழுவதற்குள், கை உடைந்து...தொங்கியது.
'பாத்து வரக்கூடாதாப்பா!' என உதவிக்கு ஓடி வந்த இருவரில் ஒருவர், 'ஒரு நிமிஷம். அப்படியே இருங்க. அப்டியே உருவி விட்டுர்றேன்'. மறுப்பதற்குள் கையை பிடித்து ஏதோ செய்ய... முன்னும் பின்னும் வலியே இல்லை; ஆனால் கை திருப்ப மூளை இட்ட கட்டளை கைக்கு சேரும்முன் எங்கோ தொலைந்தது...
சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா, என் குரல் கேட்டு வெளியே வந்து... உள்ளே ஓடி தோசை திருப்பி ப்ளஸ் டவலோடு திரும்பி, கையில் உடைந்த இடத்தில் தோ.திருப்பி வைத்து துண்டால் கட்டி... ஆட்டோவில் மருத்துவமனை வந்தாச்சு.
X ரேயில் எலும்பு மூன்று துண்டுகளாய் (ஒரிஜினலாய் 2, உருவி விட்டதில் 3 ஆச்சு என பின்னர் தெரிந்தது).
தோசை திருப்பி வைத்து இம்மொபலைஸ் செய்தது great presence of mind என அப்பாவிடம் பகிர்ந்த டாக்டர்,
காலையில் ஆபரேஷன் என முடிவு செய்ததும் அட்மிஷனுக்கு உள்ளே நடக்கையில் எதிரே ஸ்ட்ரெச்சரில் மூட்டையாய் கட்டி, யாரோ... அவர் குடும்பத்தின் ஓலம் மனதை கிழித்தது. 'தென்ன மரத்தில காய் பறிக்கிறப்ப, அப்டியே தலைகுப்புற விழுந்து... மூளை செதறிப்போச்சு...' என யாரோ யாரிடமோ விளக்கியது காதில் விழுந்தது. சகுனம் பாக்கிறவங்களுக்குதானே சங்கடம் என தாண்டினேன்.
'சார், மோதரம், வாட்சு எல்லாம் களட்டிருங்க. முடிய ஷேவ் பண்ணனும்' என்றவரின் உடையெல்லாம் ரத்தச்சிதறல்...
'மொத்த ஊரும் பைத்தாரப்பயலுக; வண்டில மோதிகிட்டு சாகிறானுக. எந்தாலி அறுவுது' எனப்புலம்பிக்கொண்டே சிரைத்தவரை வினோதமாய் பார்த்துக்கொண்டே சில மாத்திரைகளை விழுங்கினேன். தூங்கிப்போனேன்.
காலையில் ஆபரேஷன் தியேட்டருக்கு போவதற்குமுன் கலங்கிய கண்களுடன் அம்மா, பின்னே ஏழுமாத சாய்ந்த வயிறுடன் என் மனைவி என பார்த்து புன்னகையுடன் ஸ்ட்ரெச்சரில் நகர்ந்தேன். நினைவு தப்புமுன் நினைவுக்கு வந்தது இரண்டு; 1. முழுக்க முழுக்க அந்த நொடியில் மட்டுமே (in the moment) கவனத்துடன் கூட நடந்த அப்பாவின் முகம். 2. நெடுநாட்களாய் நினைக்காதிருந்த இறையிடம் ஒரு சிறு விண்ணப்பம், 'என்னை மீண்டும் கண்விழிக்கச்செய்'.
ஆபரேஷன் முடிந்து நினைவு திரும்பி மலங்க மலங்க கண் விழிக்க, அவுட் ஆப் ஃபோகஸில் மனைவி முகம்.
ஃபோகஸ் ஆனதும் கண்ணீர் தெரிந்தது. தைரியமளிப்பதாய் நினைத்து சோர்வாய் சிரிக்க முயன்றேன், அனஸ்தீசியாவின் lingering effect, தடுத்தது.
'யங் மேன்! செக்மென்டல் ஃப்ராக்சர். ப்ளேட் வச்சி நட் போல்ட் போட்ருக்கம். கொஞ்சம் பெரிய ப்ளேட்' என்ற டாக்டரிடம் தயங்கியபடி சொன்னேன்; 'அடுத்த வாரம் இயூரோப் ரிட்டர்ன் ஆகணும் டாக்டர். லீவ் முடிஞ்சிடுது. தையல் பிரிக்க நாளாகுமா?'
சிரித்தபடி டாக்டர் சொன்னார், 'staple பண்ணிருக்கம். டோன்ட் வொர்ரி. கிளம்பறதுக்குள்ள ரிமூவ் பண்ணிடலாம்'.
என் டவுன், எனக்கு ஆச்சரியம் தந்தவண்ணமே இன்றளவும் இருக்கிறது. Hi tech ஆபரேசன் என்று பின்னாளில் இயூரோப்பிய டாக்டர் வியந்நபோது மகி்ழ்வாயிருந்தது; 'that too at one tenth of the cost here!' என அவர் வியந்தபோது இறுமாப்பாய்கூட இருந்தது.
'யங் மேன். இந்த மாதிரி ஆக்சிடென்ட்ஸ்ல கொலாட்டரல் டேமேஜ் நிறைய. மசில்ஸ், நெர்வ்ஸ் எல்லாம் கட் பண்ணிதானே bone அ fix பண்றாங்க. ரெகவரி டேக்ஸ் டைம்' என்ற அந்த டாக்டர், எனக்கு எழுதிய ப்ரிஸ்க்ரிப்ஷனில் இருந்தது ஒரே ஒரு முகவரி மட்டுமே; மருந்துகள் எதுவுமில்லை!
அது அடுத்த ஊரில் இருக்கும் ஒரு முதியோர் இல்ல முகவரி!
நீச்சல் குளத்தில் உடற்பயிற்சி, ட்ரெய்னர் உதவியுன், ஆபரேசனிலிருந்து கையின் திறனை மீட்டெடுக்க! தண்ணீரிக்குள் புவியீர்ப்பு விசை வேலை செய்யாது. இலகுவாய் பயிற்சியை முயலலாம்.
பின் குறிப்பு:
எஞ்சிய மூன்று பிரசவ மாதங்களை, எவர் துணையுமின்றி, வேற்றுமொழி நாட்டில் கழித்தது, மாவுக்கட்டு கையை தொட்டிலில் கட்டி (sling) அவ்வண்ணமே பிரசவ அறையில் மனைவியுடன் இருந்து, பிறந்த குழந்தையை ஒற்றைக்கையில் கவனமாய் தூக்கி கொஞ்சியது, முதியோர் இல்லத்தில் தொடர் பயிற்சியால் கை மீண்டது என வாழ்வு அதன் போக்கில் ஓடிக்கொண்டே சென்றது. இன்று பிரசவத்திற்கு முன்/பின்னான களேபரங்களை, உறவுகளின் சப்போர்ட்டை, அதை அதீதமாய் பயன்படுத்திக்கொள்ளும் இன்றைய தலைமுறை பெற்றோரை, அவர்களது குழந்தைகளை இன்றுவரை வளர்த்தெடுக்கும் அவர்களது பெற்றோரை, என காண்கையிலெல்லாம் புன்முறுவல் பரிமாறிக்கொள்ள எனக்கும் என் வாழ்க்கைத்துணைக்கும் நம் ஊரில் வாய்ப்புகள் ஏராளம் :-)
எலும்பு முறிந்தால் ஒட்டிக்கொள்வது போல வாழ்வியல் முறிந்துபோனால் ஒட்டுமா? காலம்தான் விடை தரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக