"பசு மாடு வெஜிடேரியன்பா! உடான்சு உடாதே" என்றான் நண்பன்.
'அதானே!' என நீங்களும் ஆமோதிப்பது புரிகிறது. ஆனால்...
இரண்டாம் உலகப்போரில், இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய டெக்னாலஜி இல்லாததால், கார்ப்பெட் பாமிங் எனப்படும் 'வெடிகுண்டு மழை', போர் விமானங்களில் எதிரி நாட்டின் மீது பறந்து கீழுள்ள நிலப்பரப்பில் போர்வை போர்த்துவது போல நெருக்கமாக குண்டுகள் வீசுவது (சாகிறவன் எதிரி நாட்டான்தானே) மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட திட்டம். கணக்கற்ற குண்டுகள், நிலத்தை சூழ்ந்துள்ள கடல் பரப்பிலும் விழுந்து தொலைத்தன.
போர் முடிந்து வணிகம் மீண்டும் தலை தூக்கையி்ல், கடல் வணிகம் மட்டும் 'குண்டு' பயத்தில் தடுமாறியது. வலை வீசி மீன் பிடிப்பது போல, குண்டுகளை பிடித்தாலென்ன என்ற ஐடியா யாருக்கோ தோன்ற, பெருவிசைப்படகுகளின் இடையில் விரித்துக்கட்டிய, பெரிய கண்கள் கொண்ட முரட்டு வலைகளில் கடல் மடியை சல்லடை போல் சலிக்க, குண்டுகள் ஏராளமாய் மீன்கள் போல வலையில் மாட்ட, அப்புறப்படுத்துவது எளிதாயிற்று.
ஒரு கட்டத்தில் குண்டுகள் குறைந்துபோக, இந்த நுட்பத்தை சற்றே சீர்திருத்தி (பெரிய கண்களுடைய வலைக்கு பதிலாய் மிக மிக சிறிய கண்களுடைய வலை) இன்று வரை ஆழ்கடலை சலித்து சலித்து டன் டன்னாய் கடல் மீன்கள் பிடித்து புட்டியில் அடைத்து உலகம் முழுதும் கல்லா கட்டத்தொடங்கினர்.
(இந்திய இலங்கை மீனவர்களின் எல்லைப்பிரச்னையில் இந்த இழுவை மடிகள், அதாவது Trawlers, இன்றுவரை மிக முக்கிய இடம் வகிக்கின்றன...)
அவ்வாறு சலிக்கையில் ஏராளமாய் பிடிபடும் குஞ்சு மீன்களுக்கு சந்தையுமில்லை, விலையுமில்லை. அதனாலென்ன என்று இந்த மீன்களையெல்லாம் கூழாய் அரைத்து, காயவைத்து பொடி செய்து பெரிய பெரிய கேக்குகளாய் மாற்ற, புது வணிகம் உண்டாச்சி. இந்த கேக்குகள், கால்நடை உணவில் அதிகமாய் கலக்கப்படும் மலிவு விலை உணவுப்பொருளாய் ஆனது.
இன்று சந்தையில் கிடைக்கும் கால்நடைத்தீவனம் உண்டு பால் சுரக்கும் எந்தப்பசுவும் 'நான், வெஜிடேரியன்!' என்று காம்பு தட்டி சொல்லும் வாய்ப்பை இழந்த நான் வெஜிடேரியன் மாடுகளே!
'நான் சுத்த சைவம்! என்ன செய்வேன் இப்போ?!!' என்கிறீர்களா? தீர்வும் எளிதே!
உலகில் மனிதரைத்தவிர வேறு எந்த உயிரும் இன்னொரு இனத்தின் பாலை தேடிப்போய் பருகுவதில்லை!
கருத்துகள்
கருத்துரையிடுக