பண்டங்கொரு கோவிலிருந்தது.
கோவிலில் நந்த வனமிருந்தது.
வனம் நிறைய பூவிருந்தது.
பூ நிறைய தேனிருந்தது.
தேனருந்த தேனி வந்தது.
பூவுண்ண பூச்சி வந்தது.
பூச்சி உண்ண பறவை வந்தது.
வழி நெடுக மரமிருந்தது.
இவை தங்க கூடு தந்தது.
மழை நிறைய ஈர்த்து தந்தது.
மரமருகே வயலிருந்தது.
வயலில் பல பயிரிருந்தது.
தேனியும் பறவையும் சூல் சேர்த்தது.
வயல் நிறைய கதிர் விளைந்தது.
எல்லா வீட்டிலும் வயிறு நிறைந்தது.
மனதில் நன்றி பெருகி வழிந்தது.
ஊர் கூடி குதூகலித்தது.
தேரிழுத்து பொங்கலிட்டது.
இன்றங்கே (கோவிலில்) தளமிருக்குது.
பளபளப்பாய் விளக்கிருக்குது.
தல மரம் பூ வனம் எங்கிருக்குது?
கான்க்ரீட் தளமிட்டு பூசி மெழுகிய, தாவரங்களற்ற கோவிலின் உள்ளே, சோகம் ததும்ப இறை உறைந்திருக்க, இறைசோகம் உணராது நாமும் நம் வேண்டுதலின் சுமைகளை ஏற்றிக்கொண்டே இருக்கிறோம் சிறு குழந்தைகள் போல...
அபிஷேகங்களால் கரைக்க இயலாத இறைசோகத்தின் மீது விழும் ஒவ்வொரு இலையும் மலரும் வலி மிகுந்ததாகவே இறை உணரக்கூடும்.
மகிழ்வான இறை மட்டுமே வரங்கள் தருமாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக