இலக்கை தாண்டிய தோட்டா; அட விவசாயம்! தோடா!!
துப்பாக்கியின் விசை சுண்டப்பட்டதும் இலக்கு நோக்கி சீறிப்பாயும் தோட்டா, இலக்கை துளைக்கையில் அதிலேயே மாட்டிக்கொள்ளும்; அல்லது, துளைத்தபின் விசையிழந்து விழுந்துவிடும்.
நம்மில் அநேகரின் வாழ்வு இவ்விதமே.
ஆனால், இலக்கை துளைத்தபின் அது தவறான இலக்கு என்ற புரிதலும், துளைத்து வெளியேறியபின்னும் விசை குறையாமல் உந்தினாலும், அந்த தோட்டாவின் பயணம் எப்படி இருக்கும்? எதை நோக்கி இருக்கும்?
ஐ.டி துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் பல, சில பல இலக்குகளை வெகு வேகமாக துளைத்தபின்னும் விசை குறையாதிருந்தால்... எங்கெங்கோ சுற்றி பின் வேளாண்மையில் ஐக்கியமாகி விடுகின்றன.
எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி விவசாயம், இவர்கள் செய்யும் வேளாண்மை, பிற்காலத்தில் தோட்டா வேளாண்மை (Bullet Agriculture) என்றும் அறியப்படலாம்.
'பத்து இருபது நாட்டு மாடு வாங்குறோம். பால் பண்ணை நடத்துறோம்; ஒன்லி A2 ப்ராடக்ட்ஸ'் என்பது முதல், 'பாலி ஹவுஸ் பண்றோம், வெள்ளரி / குடை மிளகாய் வளர்க்கிறோம், எக்ஸ்போர்ட் பண்றோம்' என்பது வரை, பணம் சம்பாதிப்பதை மையமாக வைத்தே சுழலும் இந்த தோட்டாக்கள், வேள் ஆண்மைக்கும் (வாழ்வியல்) வேள் வணிகத்திற்கும் உள்ள இடைவெளி தெரியாமல் / உணராமல் வணிக இலக்கில் நுழைந்து சிக்கி பெரும்பாடுபட்டு பிய்த்து வெளியேறி தோல்வியுற்ற உணர்வோடு வேறு இலக்குகளை நாடுகின்றன.
வேளாண்மை பொய்த்தால் வணிகம் கை கொடுக்கும். வணிகமும் பொய்த்தால் இறை கை கொடுக்கும் என்பதாக, இப்போது பல இடங்களில் இறையும் வணிகமாகி, இறைவணிகமும் தொடங்கியாச்சு... கோசாலைகள், பாபா ஆலயங்கள், அனுமன் ஆலயங்கள் என பல விளை நிலங்கள் இன்று பிழைப்புக்காக நிறத்தை மாற்றிக்கொண்டு காத்திழுக்கின்றன!
வேள் ஆண்மைக்குள் நுழைந்த தோட்டாக்கள் மட்டும் இறகு முளைத்து, விசை கூடி, ஆனால் இலக்கின்றி, தம் நிலத்தில் பறக்கும் பறவைகளோடும் காற்றில் உதிரும் இலைகளோடும் பறத்தல் பழகிக்கொண்டிருக்கின்றன. வாழ்வை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன!
தெளிவாய் பயணிப்பவர்க்கு நல்லதொரு வாழ்வியல் கண்டிப்பாய் கிட்டும் :-)
இப்படிக்கு,
இறகு முளைத்த தோட்டா!
பின் குறிப்பு:
இலக்கிற்கு ஆங்கில மொழியில் Bullseye என்று பெயர். சற்றே சிந்தித்துப்பார்த்தால் இந்த சொல்லின் குருதி தோய்ந்த பொருள் விளங்கும்.
"காளையை வீழ்த்த கண்ணைத்துளை!"
இது பெருநுகர்வு வாழ்வியலின் அடிப்படை.
மூக்கணாங்கயிற்றோடு காளையை பிணைத்த நம் பண்டைய வாழ்வியல் புரிந்தவர்கள், "இலக்கின்" பொருளையும் சரியாகவே புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக