கன்ட்ரோல் யுவர்செல்ஃப், பூச்சி!
(இதய பலஹீனமானவர்களர படிக்கவேண்டாம்!)
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது பழமொழி.
பல்லி இல்லா வீட்டில் குடியிருக்கவேண்டாம் என்பது முதுமொழி :-)
பல வருடங்கள் முன்பு, வீடு வாங்கவோ வாடகைக்கோ தேடும் சூட்சுமமான பெரிசுகள், ஒரு வீட்டுள் நுழைந்தவுடன் கவனிப்பது பல்லிகள் இருக்கிறதா என்பதைத்தான்.
வீடு எவ்வளவு பிடித்திருந்தாலும், எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் பல்லி இல்லையென்றால் டீல் இல்லை.
இன்னும் எஞ்சியிருக்கும் இம்மாதிரி சூட்சுமக்காரர்களின் பல்லி பிரியம் குறித்து கேட்டால், 'பல்லி கூட இருக்காத வீட்டில மனுசன் இருப்பானா?' என பதில் கேள்வி வரும்.
பெஸ்ட் கன்ட்ரோல்!!!!!
'ஹலோ, பெஸ்ட் கன்ட்ரோல்?. எங்க வீட்ல பல்லி, எர்ம்பு, ஈ, பூச்சி எல்லாம், எல்லாம் வர்து. யூ காட் எனி சொல்யூஷன்?' என கௌதம் கார்த்திக் வாய்சில் கால் பண்ணினால், மறுமுனையின் பதில், 'ஆமாங்க, ஆமாம். ஒரு முறை சேனிடேஷன் பண்ணா சில வருஷத்துக்கு பல்லி, பூச்சி எல்லாம் மூச்சி கூட காட்டாது. ஜஸ்ட் டூ ஹவர்ஸ். தௌசண்ட் ரூபீஸ் ஃபார் கிட்சன். அதர் ப்ளேசஸ் எக்ஸ்ட்ரா'.
அநேகர் அன்றே / அடுத்த நாளே வரச்சொல்வோம்.
அவர்களும் நாம் கை காட்டிய இடங்களில் கண்ணுக்கெட்டாத இடங்களில் சில வஸ்துகளை வைத்துச்செல்வர்.
'நோ எஃபக்ட்ஸ் ஆன் யூ பீப்பிள். கில்ஸ் ஒன்லி பல்லிஸ் அன்ட் இன்செக்ட்ஸ்' என, நீங்கள் கேட்டால், கேட்டால் மட்டுமே சொல்வர்.
அது என்ன மாதிரியான வஸ்து, அதன் மூலப்பொருட்கள் என்ன? போன்ற சீரியசான கேள்விகளை நீங்களும் கேட்கப்போவதில்லை. அவர்களும் எதிர்பார்ப்பதில்லை; அவர்களுக்கு விடைகளும் தெரியாமலே இருக்கும். அவர்கள் வெறும் ஃபுட் சோல்ஜர்ஸ் மட்டுமே!
சிறிய கொசுவை ஒழிக்க நாம் நம் அறைகளை நிரப்பும் புகை வளையங்கள் நம் நுரையீரல்களை மெல்ல மெல்ல இறுக்குவதை உணராத நாம் (ஜன்னலெல்லாம் சாத்தினாதான் நிறைய கொல்லுமாம், நம்மையும்தான்!), ஆனந்தமாக கொசுவற்ற இரவுகளை உறங்கி கழிப்போம்.
கொசு மருந்தே நுரையீரலை நசுக்கும் என்றால் Hit தொடங்கி பெஸ்ட் கன்ட்ரோல் வஸ்துக்கள் வரை நம்மை 'வைத்து செய்யும்' என்பதை கூட அறியாத நிலையில் நாம்...
பல்லி மேட்டருக்கு வருவோம்.
வீட்டுக்கு உள்ளே பல்லிகள் இருந்தால், பூச்சிகளும் கொசுக்களும் குறையும் / ஒழியும். ஏனெனில் பல்லிகள் அவற்றை உண்டு வாழும்!
"வீட்டுக்கு உள்ளே... பல்லி.... சரி.... வெளியே கொசு உள்ளவரை வீட்டுக்குள்ள வரத்தானே செய்யும், நம்மை கடிக்கத்தானே செய்யும்?!" என டெங்கு டிங்கு டான்சாடி நாம கேப்பமுல்ல!
வீட்டுக்கு / கட்டிடத்திற்கு வெளியே வாதாமரம், சிங்கப்பூர் செர்ரி என்கிற சர்க்கரைப்பழ மரம் போன்றவை இருந்தால் கொசுவின் ஆயுள் ப்ளஸ் ஆதிக்கம் குறையும்!
'ஏய், இது என்ன கதை?' என முறைப்பதை நிறுத்தி மேல படிங்க பாஸ்!
இந்தப்பழ மரங்களை தேடி இரவில் வவ்வால்கள் வரும். அவை பழங்களுக்கு சைட் டிஷ்ஷாக கொசுக்களை வேட்டையாடி உண்ணும் :-)
பாக்டீரியா முதல் யானை வரையிலான பல்லுயிர்ச்சங்கிலியின் ஒரு சிறு கண்ணியான நாம் மட்டும் 'ஆத்தா என்னை உள்ள வச்சு பூட்டு' என்கிற ரேஞ்சுக்கு நம்மை தனிமைப்படுத்த முயன்று, அந்த முயற்சியில் குறுக்கிடும் எந்த உயிரையும் நம் உயிரைக்கொடுத்தாவது கொல்லாம விடுறதில்லன்னு நம் உடல் மீதும் நம் சுற்றுப்புறத்தின் மீதும் நடத்தும் டெட்லி கெமிகல் வார், நம்மை வெற்றிபெற வைக்குமென்று இன்னும் நம்புகிறீர்கள்?
மேன் அனிமல் கான்ஃளிக்ட் என்பது கானக எல்லைகளில் மட்டுமே, மனிதர்க்கும் யானைகள்/புலிகள்/சிறுத்தைகள் போன்ற பேருயிர்களுக்கும் இடையில் நடப்பது மட்டுமே என்று நம்மை நம்ப வைத்தது யார்?!
நம் வீட்டுக்குள் கொசுக்களோடும் பல்லிகளோடும் நாம் நடத்தும் நித்ய யுத்தமும் அவ்வகைதானே!
மிருகங்கள் அடித்து இறக்கும் மனிதர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கும் இழப்பீட்டில் ஒரு பைசா கூட வீட்டுக்குள் நாம் நடத்தும் யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டால் கிடைக்காது!!!!
'கொழப்பு கொழப்புன்னு கொழப்புறியே! எனக்கு பல்லின்னாலே பயம். வவ்வால்... உவ்வே! என்னதான் செய்றது?' என்கிறீர்களா?
வருங்காலத்தில், நம் தலைகளில் பொருத்திக்கொள்ளக்கூடிய ஆண்ட்டனாக்கள் விற்பனை ஆகும். அது வெளியிடும் ஒலிக்குறிப்பு, நாம் புழங்கும் இடங்களில் சுற்றும் கொசுக்களை ஜஸ்ட் இன் டைம் டெக்னாலஜி போல அந்த நிமிடத்தில் அங்கிருந்து துரத்தும்.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் செயற்கை சாக்லேட்டுகள் சந்தைக்கு வரும். ஏனெனில், கொக்கோ மரங்களில் மகரந்தச்சேர்க்கை செய்வதற்கு கொசுக்கள் இல்லாமல் அம்மரங்கள் காய்ப்பதையே நிறுத்தியிருக்கும்!
பல்லுயிர்ச்சங்கிலியில் நம் இருப்பு அறிந்து, தெளிந்து, இணக்கமாய் இருந்துவிட்டுப்போவது மட்டுமே நிரந்தர தீர்வு! போனால் போகிறது என கொசுவலை வேண்டுமானால் கட்டிக்கொள்ளலாம். அதுவும்கூட பல்லிகளும் வவ்வால்களும் நம் வாழ்வின் அங்கமாக ஆகிப்போன பின்பே!
சிந்தனைக்கு ஒரு கேள்வி: நம் நாட்களின் ஹைஜீன் (தூய்மை) அதிகமாக அதிகமாக நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவது ஏன்?!
பின்குறிப்பு: 'வை யு ரைட் இங்லீஷ் வோர்ட்ஸ் வெர்பாடிம் இன் டமில் மேன்?! இட் டசின்ட் ஜெல் யார்!' என்பவர்களுக்கு மட்டும் பதில்:
தமிழ் தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது சரளமாய் ஆங்கிலத்தில் பேசுவதும் இம்மாதிரிதான், டசின்ட் ஜெல்....
Superb and factual
பதிலளிநீக்கு