லாபத்திற்கு ஈடான தமிழ் சொல் கேட்டிருந்தேன், நேற்று.
குவிந்த விடைகள் எதுவும் ஈடான சொல்லை தரவில்லை. ஆனால் பங்கேற்பு அபாரம்!
ஈடு, மிகை ஈடு, உபரி, வரசல்(!), வரும்படி, கந்தாயம், ஆதாயம், பலன்... இவை எதுவும் profit / லாபத்திற்கு மாற்று சொற்கள் அல்ல.
எவ்வளவு முயன்றாலும் தமிழில் லாபத்திற்கு இணையான சொல் கிடையாது!!!!!!!
ஏன் தெரியுமா?
நம் 'முன் தோன்றி மூத்த குடி'க்கு லாபம் என்ற கோட்பாடே இல்லை. இல்லாத ஒன்றுக்கு சொல் மட்டும் எப்படி இருந்திருக்கமுடியும்?
சுருக்கமாய் விளக்குகிறேன்(!).
தமிழர் வாழ்வியல், தேவைக்கான உற்பத்தி என்பதாகவே இருந்தது. உற்பத்தி செய்யத்தேவையான உதவிகள் (services / சேவை என்ற மொழிபெயர்ப்பெல்லாம் உதவி என்ற சொல்லின் நிழலைக்கூட தொட முடியாது!) வழங்குவோர், அதற்கு ஈடாக (மாற்றாக) விளைச்சலில் ஒரு பகுதியை மகிழ்வோடு பெற்றனர்.
உருக்கு கருவிகள், வேளாண்மைக்காக தேவைப்படும்போது கொல்லர் தனக்கு கிடைத்த விளைபொருளை உருக்குக்கு ஈடாக தந்து வாங்கி தளவாடம் செய்வார். தளவாடத்தை வேளாளரிடம் தந்து பின்னாளில் விளைபொருளாய் பெறுவார்.
விளைபொருள் என்பது அறுவடைக்கப்புறம்தானே; 'அதனாலென்ன, வட்டியோடு தா' என்று சொல்லமாட்டார். பொறுமையோடு காத்திருப்பார். ஏனென்றால் வட்டி என்ற சொல்லும் அவர் வாழ்வியலில் இல்லவே இல்லை :-)
செருப்பு தைப்பவராக இருக்கட்டும், ஆடை நெய்பவராக இருக்கட்டும், வெளுப்பவராக இருக்கட்டும், ஏன், நாவிதராக இருக்கட்டும், செய்த உதவிக்கு ஈடு பெற்று வாழ்ந்தனர். விளைவிப்பவர்கள், இவர்கள் எல்லோருடைய உதவியும் பெற்று, விளைவித்து, உதவிக்கு ஏற்ப பகிர்ந்து, அவர்கள் எல்லோருக்கும் உதவுவர்!
இப்படி, சிற்றூருக்கு சிற்றூர் உதவி வழங்குவோர் இருந்தனர். ஆனால் இதில் எந்த உதவியும் வணிகமாக பார்க்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
பண்ட மாற்று முறை இருந்தவரையில் 'வணிகம்' என்ற ஒன்றே இல்லை!
லாபம் என்பது வணிகம் தோன்றிய அன்று பிறந்த பாப்பா.........
வணிகத்தை முந்திய நமது முதுவாழ்வியலை காட்சிப்படுத்திய மொழியான நமது செம்மொழி தமிழில் அதை ஒத்த சொல் தேடுவதா?
போங்கு....இது....தப்பாட்டம்.
தப்பாட்டம் என நான் இங்கு குறிப்பிடுவது இந்தப்பதிவை அல்ல; நம் நிகழ்வாழ்வை!
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியலின் பெரும்பதிவு, 'நம்' வாழ்வியலின் பெரும்பதிவு!
பின்குறிப்பு : இன்றைய பெருநுகர் உலகில் இன்னும் எஞ்சி வாழும் தொல்குடிகள் ஏராளம். இவை அனைத்தின் மொழிகளிலும் இன்றுவரையில் லாபத்திற்கு ஈடான சொல் இல்லவே இல்லை!
Sirappu
பதிலளிநீக்கு