இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்கள் 1970களிலேயே இருந்தன.
"இருந்தன", அவ்வளவே.
"இருந்தன", அவ்வளவே.
1991 இல் பொருளாதார தாராளமயமாக்கம் தொடங்கியதும் சூடு பிடித்த இவர்களது மார்க்கெட், இப்பொழுதுதான் சூடு குறையத்தொடங்கியுள்ளது. இந்த 1991-2018 காலத்தை (நான் ஒரு ஐ.டி நிபுணன், Inside man என்ற தகுதிகளில்) மூன்று தலைமுறைகளாக பிரித்து ஒரு குறுந்தொடராக உங்களுடன் பகிர்கிறேன். படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் :-)
1990-1999 முதலாம் தலைமுறை ஐ.டி சிகாமணி.
விசுவாசி.
1990களில் வசதியான பிள்ளைகளெல்லாம் கல்லூரியில் படிக்க அமெரிக்கா ஓடியபின் எஞ்சிய நடுத்தட்டு, அடித்தட்டு பிள்ளைகளின் பொருளாதார விடுதலைக்கும் வாழ்க்கை கனவுகளுக்கும் வலுவான தளம் அமைத்துத்தந்தது ஐ.டி துறை.
இந்திய மூளை, இந்திய உழைப்பு, இந்தியாவில். பயனாளர் அதை விற்பது உலகம் முழுதும் பன்னாட்டு கரன்சிகளில்; கொள்ளை லாபம்!
செல்வா, என் சக ஐ.டி ஊழியன், அறை நண்பன். இந்தியன் திரைப்பட வடிவேலு போல இவனது வீக்னெஸ் இவனது இடுப்புப்பகுதி். சின்னதாய் இரு விரல் கொண்டு விலாவில் மெல்ல குத்தினால் கூச்சம் தாளாமல், தப்பிக்க தன் சொத்தையே எழுதித்தருதல் / எட்டி உதைத்தல் / வசவு வார்த்தைகளில் குளிப்பாட்டுதல் இவற்றில் ஏதாவது ஒன்று அவனது ரீயாக்ஷனாக இருக்கும், மூடை பொறுத்து.
வேலை முடித்து அறை திரும்பி அவன் உடை மாற்றுகையில் நாங்கள் ரெடியாவோம். சட்டை கழற்றி, டி சர்ட்டில் இரு கரம் நுழைத்து உயர்த்தி, டி சர்ட் அவனது முகத்தை மூடும் அந்த நொடியில் துல்லிய தாக்குதல் நடத்துவோம்.
தாவி குதித்து, கண் தெரியாமல் காற்றில் கைகளால் துழாவி அடுத்த அட்டாக்கை தவிர்ப்பதா அல்லது சடுதியில் டி சர்ட்டை இழுத்து கீழிறக்கி குறும்பர்களை எட்டி உதைப்பதா என அவன் தடுமாறும் சில நிமிடங்களில் நாங்கள் சிரித்து புரையேறி வெளியில் ஓடியிருப்போம் (சிக்குனோம்னா செத்தோம்டோய்!).
அவனது பரம்பரையிலேயே முதல் முதலாக டை கட்டி, கோட் சூட் அணிந்து அவன் அமெரிக்காவுக்கு விமானம் ஏறும் முன்தின இரவு farewell டின்னர். உண்டு முடித்து நெகிழ்வாய் பேசிக்கொண்டிருக்கையில் அவன் பகிர்ந்த உணர்வுகள் இவை:
"1960 களில் கடும் உணவுப்பஞ்சம். நாங்கள் சிறு பிள்ளைகள். பழைய சோற்றுக்கஞ்சி இரவு உணவு. மூன்று வேளையும் அதுவே.
அப்பா கழனி வேலை முடித்து பின்னிரவில் வீடு வந்து அடுப்படியில் கஞ்சிப்பானையினுள் கரண்டியை விட்டு துழாவுவார். காலிப்பானையின் அடிப்பகுதியில் கரண்டி ஸ்க்ரீச், ஸ்க்ரீச் என தேயும் ஓசை கேட்டு அவரது அம்மா, எங்கள் பாட்டி, திண்ணையிலிருந்து குரல் கொடுப்பார், 'எய்யா, தண்ணி குடிச்சிட்டு படுய்யா. காலைல அடுத்த வீட்டில கேப்பை வாங்கி ஆக்கித்தாறேன்'... அமெரிக்கா போய் நல்லா ஒழைக்கணும், வீடு நிறைக்க நல்லது செய்யணும்."
செல்வா இன்றும் அதே துறையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மதிப்புமிகு வேலையில், விசுவாசமாய் உழைத்துக்கொண்டிருக்கிறான்.
1999-2008 இரண்டாம் தலைமுறை ஐ.டி சிகாமணி.
சுகவாசி.
1990 களில் வீட்டுக்கு ஒரு அண்ணா / அக்கா / மாமா / சித்தி / அத்தை / மச்சினன் என ஏதாவது ஒரு உறவு ஏற்கனவே ஐ. டி துறை / மேல்படிப்புக்கு என வெளிநாடுகள் சென்று அந்த மண்ணின் வியப்புகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய, இரண்டாம் தலைமுறை ஐ.டி சிகாமணிகள் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு வேலையில் அமர்ந்தனர். எக்சேஞ்ச் ரேட், எந்த நாட்டில சேமிக்க வாய்ப்பு அதிகம் போன்ற விபரங்கள் இவர்களுக்கு அத்துபடி.
ஷ்யாம், இந்த தலைமுறை இளைஞன். வேலையில் கெட்டி (மாம்ஸ் அமெரிக்காலேந்து சொன்ன டி.பி.2 கோர்ஸ முன்னாடியே முடிச்சிட்டமுல்ல!). அவ்வப்போது போன் செய்து இந்திய ஐ.டி கம்பெனிகளின் கஞ்சத்தனம் பற்றி புலம்புவான், 'என்னா இன்க்ரிமென்ட்டு குடுக்கிறானுங்கோ!' என்ற சலிப்புடன்.
ஒரு பின்னிரவில் ஷ்யாமிடமிருந்து போன். உற்சாகமான குரல். 'நாப்பது பர்சன்ட் இன்க்ரிமென்ட். பிஞ்ச் யுவர்செல்ஃப் மேன்!. நைட்டு பதினொன்னரைதான ஆகுது. இப்பவே கிளம்பறோம். ட்ரீட்டு, பெசன்ட் நகர் கோஷி ரெஸ்ட்டாரன்ட்ல, நான் சூப்பரா இருக்கும். அப்டியே அதோட ஓனரோட ஒரு போட்டோ எடுத்துக்கலாம். பாட்சால ரஹினியோட தோஸ்த்தா வருவாரு, ஞாபகமிருக்கா?!'.
ட்ரீட்டின்போது அவன் சொன்ன நாப்பது பர்சன்ட் ரகசியம், 'சொனாட்டா சாப்ட்வேர்ல அப்ளை பண்ணி முப்பது பர்சன்ட் இன்க்ரிமென்ட்ல ஆஃபர் புடிச்சேன். மறு நாள் எங்க H. R அ மீட் பண்ணேன். பாஸ் நான் க்விட் பண்றேன்னேன். அடுத்த மூணு வாரத்தில ப்ராஜக்ட் டெலிவரி டெட்லைன், அமெரிக்காக்கு. ஆடிப்போய்ட்டானுங்க. என்ன பண்ணினா இருப்பே? ன்னாங்களா, சொனாட்டா ஆஃபர் லெட்டர டேபிள்ல போட்டேன். மேலே இருபது பர்சன்ட் ன்னேன். பத்துக்கு ஒத்துக்கிட்டானுங்கோ. இவனுங்க பணத்தையா தறானுங்க? டாலர்லதான வாங்குறானுங்க!' என்றான்.
2008 ல் லேஃமன் ப்ரதர்ஸ் என்கிற வங்கிக்குழுமத்தையும் மக்களின் பலகோடி சொத்துக்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட சப் ப்ரைம் க்ரைசிஸ் என்கிற போங்காட்டத்தில் எப்படியோ தப்பிப்பிழைத்து இன்று அமெரிக்காவில் இன்சூரன்ஸ் ப்ராடக்ட்ஸ் விற்றுக்கொண்டிருக்கிறான். காதல் மனைவி வெள்ளைக்காரி. ஏரிக்கரையருகில் வீடு. படகு கூட வாங்கப்போவதாய் சொன்னான்.
சுகவாசி!
2009-2018 மூன்றாவது தலைமுறை ஐ. டி சிகாமணி.
யுவன் - இவன் வேற லெவல்.
வெளிநாடுகளுக்கு ஐ.டி துறை மற்றும் மேற்படிப்புக்கு சென்று, பல மாற்றங்களை சந்தித்த ஒரு தலைமுறையை கிட்டப்பார்வை பார்த்தே தெளிவாகி, அந்த தலைமுறை தமக்கு தந்த பொருளாதார மேம்பாட்டை ரசித்தவண்ணம் இந்த தலைமுறையினர் பெரும்பாலும் யு. ஜி படிக்க அமெரிக்கா, ஐரோப்பா, சைப்ரஸ் என உலகம் முழுவதும் பரவும் ரகம்.
'யு நோ, மை மாம் இஸ் அ டாக்டர் இன் யு. எஸ். மை டாட் இஸ் என்ஜினியர் இன் போயிங். நான் இங்க ஸ்கூலிங் பண்ணனுமாம், கல்சுரல் எக்ஸ்போஷருக்காகவாம். ஐ ஆம் அல்மோஸ்ட் டன். இதாலில டிசைனிங் கோர்ஸ் யு. ஜி அப்ளை பண்ணிருக்கன். ஐ டோன்ட் ஈவன் நீட் ஸ்காலர்ஷிப்?' என்பதாக...
இடையில் முதல் தலைமுறை சிகாமணிகள் சில ஆண்டுகளாகவே ஒருவர்பின் ஒருவராய் இந்தியா திரும்பி பெரும்பாலும் இயற்கை விவசாயத்தை விரும்பி செய்து வருவதும், இதை கண்டு / கேட்டு / படித்து அறிந்த இரண்டாம் தலைமுறை சிகாமணிகள் ஊரில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு போன் செய்து 'கிராமத்தில இருக்கிற நிலத்த விக்கவேணாம். பக்கத்தில யாரும் வித்தா, விலை கூடன்னாலும் யோசிக்காம வாங்கிடுங்க. நான் வந்திடுவேன் சில வருஷத்தில' என வேண்டுகோள் வைப்பதும் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மூன்றாம் தலைமுறை சிகாமணிகள் -
'டாட், மாம், நீங்க உலகம் சுத்திட்டு இந்தியால செட்டில் ஆய்ட்டீங்க. விவசாயம்தான் பண்ணுஙேங்கினீங்க. ஆர்கானிக்தான் பெட்டர்னு உசுர வாங்குறீங்க. லெட் மி என்ஜாய் லைஃப், ஓ கே?'
இவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் முந்தைய தலைமுறைகளின் சிகாமணிகளுக்கு இல்லவே இல்லை!
எழுத்தாளுமை திரு. சுஜாதா அவர்கள் 90களின் ஐ.டி அமெரிக்க NRI கள் X + 1 சின்ட்ரோமில் உழல்வதாக எழுதியிருந்தார் ('அடுத்த வருசம் கண்டிப்பா இந்தியா போய்டணும்'. அடுத்த வருசம் என்பது இவர்களுக்கு எப்பவுமே அடுத்த வருசம்!).
ஐ. டி துறையில் இல்லாமலேகூட, இந்தியாவின் இயலாமைகள் பற்றிய வெறுப்பில் ஊறிய மூன்றாம் தலைமுறை சிகாமணிகள் இந்தியாவுக்கு திரும்ப வருவது கேள்விக்குறியாகவே தெரிகிறது...
கருத்துகள்
கருத்துரையிடுக