ஆடையில்லா தீபாவளி!
ஒரு மாதம் முன்னையே குதூகலம்.
பள்ளியிலிருந்து வந்தவுடன் அப்பாவின் கை பிடித்து துள்ளல் நடையில் கடைக்கு போய் மொரமொரப்பான வாசனையான துணிகளை ஆசையுடன் தடவிப்பார்த்து நீலமும் வெள்ளையும் ஊடாடும் (அதாங்க check டிசைனு!) சட்டைத்துணியும் கரும்பச்சை அரைக்கால் டவுசர் துணியும் அளந்து கிழிச்சாச்சு.
டெய்லர் கடைக்கு போகையில் துள்ளல் அதிகமாச்சு. மனக்கண்ணாடியில் விதம் விதமாய் போஸ் கொடுத்துக்கொண்டே நடந்தேன்.
'கொஞ்சம் லூசா தைங்க டெய்லரே, வளர்ற பையன்' அப்பா வாஞ்சையோடு சொல்ல டெய்லர் அளவெடுத்தார். அதென்னவோ தெரியாது, இடுப்பை சுத்தி அளவெடுக்கையில் கிச்சு கிச்சு மூட்டின மாதிரி ஒரு நெளி :-)
கிளம்புகையில் முத்தாய்ப்பாய் அப்பா சொன்னார், 'இடுப்பும் கொஞ்சம் லூசா, நாடா (suspender) வச்சி தச்சிருங்க, கழலாம தோள்பட்டைல நிக்கும்'.
மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், ரயில்வெடி, பாம்பு மாத்திரை, ரோல் கேப்பு, துப்பாக்கி, ராக்கெட் இத்யாதி, ஒரு நீநீநீநீள ஊதுபத்தி :-)
பையை ஆனந்தமாய் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் அடுப்படியிலிருந்து தேன்குழல் வாசம்! பண்டிகை தினங்களை உற்சாகமாக ஊரே கொண்டாடும் சூழலில் கால்கள் பஞ்சுப்பொதிகளாய் மாற, என் வயதினர் அனைவரும் குதிநடைதான்!
'ட்ரஸ் எப்போப்பா வரும்?' என நான் காலையில் கேட்கும் தினங்களில் எல்லாம் அப்பா தவறாமல் மாலையில் டெய்லரை பார்ப்பார்.
ஊரான ஊருக்குள்ள ஒரே ஒரு டெய்லர் என்ற ரேஞ்சில் மலைபோல குவிந்திருக்கும் வெட்டுண்ட துணிகளுக்கிடையிலிருந்து டெய்லரின் குரல் மட்டும் கேட்கும், 'அப்பறமா வாங்க, ரெடியாயிடும்'.
தீபாவளிக்கு முந்தைய இரவு அப்பா வேலை முடித்து வீடு வந்தபோது சோர்வாக இருப்பதாக பட்டது. 'அப்பா, ட்ரஸ் வந்திடுச்சா?' என்றேன்.
'டெய்லர் கடைல நெருப்பு புடிச்சிடுச்சாம்டா, துணியெல்லாம் எரிஞ்சி போய்டுச்சாம்...' என்று அம்மா சன்னமாக சொன்னார்.
அப்போதெல்லாம் எங்கள் ஊரில் ரெடிமேட் ஆடைகள் கிடையாது. துணி எடுத்துதான் தைப்போம்...
அந்த தீபாவளி புத்தாடையின்றி கழிந்தது. ஆனாலும் தீபங்களின் ஒளியிலோ, பட்டாசுகளின் அதிர்விலோ, பலகாரங்களின் இனிப்பு, காரத்திலோ குறையொன்றுமில்லை!
ஆடை கிடைக்காத ஏக்கம் சில நொடிகள் இருந்திருக்கலாம். என் சோகம் என் பெற்றோருக்கு தந்த வருத்தம் அதை உடனே மாற்றியிருக்கலாம். ஆனால் அன்று இரவும் மிக மகிழ்வோடு தேன்குழலும் முள்ளு முறுக்கும் உண்டு உறங்கியது நினைவிலிருக்கிறது.
அதன்பின் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் இது மட்டும் நினைவிலிருந்து அகலவில்லை.
இன்றைய பெருநுகர் உலகில் 'காத்திருத்தல்' என்றால் என்ன என்றே அறியாத தலைமுறைக்கு இந்தப்பதிவு புரியாமல் போகலாம். ஆனால் எனக்குப்புரிந்த ஒன்று, இன்றைய பண்டிகைகளில் அன்றைய மகிழ்வு இல்லை...
கருத்துகள்
கருத்துரையிடுக