வாகனத்தில் தொலைதூரப்பயணம் (long drive) செல்லும்போதெல்லாம் பயண தூரம் முடிவதற்குள் குளிரூட்டப்பட்ட வாகனத்துக்குள்கூட என் கண்ணோரம் சில கண்ணீர் துளிகள் கசியும்...
"
ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்குவதே இசை. எட்டாவது ஸ்வரம் என்று ஒன்றே கிடையாது; வாய்ப்பே இல்லை. இசையமைப்பாளர்கள் எல்லோரும் இந்த ஏழு ஸ்வரங்களை மாற்றி மாற்றிப்போட்டுதான் காலம் தள்ளுகிறார்கள்.
இசைக்கு ஏகபோக உரிமை என்று யாரும் கிடையாது. உலகில் மிகப்பல இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். பெயர்கள் சொல்ல வாழ்நாள் போதாது.
இசை தருபவன், தந்தவுடன் அடுத்த வேலைக்கு நகர்கிறான். அது கேட்பவர் மனதில் எழுப்பும் அதிர்வுகளுக்கும் கேட்பவர் மனக்கண்ணில் விரிக்கும் காட்சிகளுக்கும் இசை தந்தவன் பொறுப்பல்ல; கேட்பவரே பொறுப்பு.
இசைக்கடலில் எழும் அலைகளில் திரளும் நுரைகளில் ஒரு குமிழளவுகூட நான் சாதிக்கவில்லை.
"
இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு இசைமேதை சொன்னது; ஒரு முறை கூட நிலை பிறழாமல். இன்னும் ஒருபடி மேலே போய் அவர் சொன்னது 'எனக்கு இசை தெரியாது'!
'திமிர பாத்தியா? பெரிய இவன்னு நினப்பு. கர்வி! அகங்காரன்!' என பலர் அறிவு பூர்வமாய் தூற்றினாலும் கண்டுகொள்ளாது நம் உணர்வுகளோடு உறவாடிக்கொண்டிருக்கும் இவர், இசையின் இலக்கணங்களை, மரபை உடைத்தெறிந்து அதை நம் ஆன்மாவோடு இழையவிட்ட மந்திரவாதி.
Experiential technology (உணர்விக்கும் தொழில் நுட்பம் - டிவியில் ரோஜா காண்பிக்கையில் உங்கள் அறையில் ரோஜா வாசம் வீசவைப்பது) யில் அரிச்சுவடிகளைக்கூட தாண்டாத தொழில்நுட்ப உலகில் நுட்பமான உணர்வுகளை இசையின்வழி நூலிழை பிசகாமல் நம்முள் கடத்த இவருக்கு அந்த பழைய ஏழு ஸ்வரங்களே போதுமானதாக...
எண்ணிக்கைக்குள் அடங்காத நம் உணர்வுகள் அனைத்திலும் பிண்ணனியாகவோ அல்லது முண்ணனியாகவோ ஊடாடும் இவரது இசைக்கோவைகள் எப்படி நம் உணர்வுகளோடு கச்சிதமாய் ஒவ்வொரு முறையும் பொருந்திப்போகின்றன?
"ஆன்மாவை உடலிலிருந்து உருவிப்போடக்கூடிய ஆலாபனை" என ஒரு நிகழ்ச்சியை தொகுத்த நடிகர் பார்த்திபன் இவரது இசையின் வலிமையை முன்னறிவிப்பு செய்தபின் வந்த பாடலின் தொடக்க ஆலாபனை (நான் தேடும் செவ்வந்திப்பூவிது) என் ஆன்மாவை ஊடுருவியதை உணரமுடிந்தது.
வாகனத்தில் தொலைதூரப்பயணம் (long drive) மேள்கொள்ளும்போதெல்லாம் பயண தூரம் முடிவதற்குள் குளிரூட்டப்பட்ட வாகனத்துக்குள்கூட என் கண்ணோரம் சில கண்ணீர் துளிகள் கசியும், இதழோரம் புன்னகையோ குறுஞ்சிரிப்போ அல்லது சீழ்க்கை ஒலியோ (விசில்) வந்துபோகும்... பழகிய பாதை, பழகிய பயணம் என்றாலும் திடீரென ஒலிக்கும் ஒற்றை வயலினின் மனதைப்பிசையும் ஓசை, புல்லாங்குழலில் அடைபட்ட காற்று துளை வழியே வழி்ந்தோடும் ஓசை, ஒரு ஆலாபனை, ஒரு ஒரு ஒரு... சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை அனைத்தையும் அமைதியாய் தந்துவிட்டு, Nothing but wind, How to name it என்று நம்மோடு சேர்ந்து 'சூப்பர் மேஜிக்' என தானும் வியந்து இன்றுவரை அதன் மூலத்தை தேடிக்கொண்டே இருக்கும் இந்த எட்டாவது ஸ்வரம், நம் மண்ணின் ஸ்வரம், நம் மண்ணுக்கு மட்டுமே சொந்தமான வரம்!
How to name it? சொல்லுங்கள் ராஜாவே!
கருத்துகள்
கருத்துரையிடுக