பழைய உலகில் சுவர்களில்லை (அல்லது)
மரபணு மாற்றிக்கொண்ட குரங்கு!
சுவரை வைத்துதான் சித்திரம் என்ற முதுமொழி நமக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்.
பெருஞ்சுவர்கள் எழுப்பி அவற்றின்மீது பெரிய சித்திரங்களை வரையும் முனைப்பில் நாம்.
பழைய உலகில் சுவர்கள் இல்லை. இருந்தவை எவை என இருந்தவர் யாரும் அறிய முற்படவும் இல்லை.
தலைக்குமேல் கூரை, அதை தாங்க சுவர் என நாம் தொடங்கியபோது, மரங்களிலிருந்து இறங்கியிருந்தோம்.
என் சுவர் உனதல்ல, சுவர் காக்கும் நிலப்பரப்பும் உனதல்ல என விதிகள் 'வகுத்தோம்'. வகுபட்டது வாழ்வு.
நம்மை எல்லைகள் பிரித்தன, எல்லைகள் சேர்த்தன. எல்லைக்குள் வாழ்வதற்கும் எல்லை வகுத்தோம், 'சரி' 'தவறு' ன்று. வகுத்ததை காக்க புதிய விதிகள் சமைத்தோம்.
சமைத்தது எதுவும் நொதிக்கும்தானே. வீணாகிப்போன விதிகளை அகற்றி புதிய விதிகள் சமைக்கும் வாய்ப்புகளை மட்டும் புறம்தள்ளி, "நொதித்ததை காக்க" புதிய புதிய விதிகள், முயற்சிகள் என நம் வாழ்வியலை அனுதினமும் மாற்றிக்கொண்டே போகும் நமக்கு மரபணு என்று ஏதாவது மிச்சமிருந்தால் அது கிளைக்கு கிளை தாவ உதவும் நம் வாலாக மட்டுமே இருக்கும்...
பழைய உலகின் சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டவை அல்ல. ஏனெனில் அங்கு சுவர்களே இல்லை...
நதியென்றும் மலையென்றும் கடலென்றும் பறவையென்றும் அருவியென்றும் விலங்கென்றும் செடியென்றும் கொடியென்றும் மரமென்றும் மீனென்றும் ஏனைய பிறவென்றும் முடிவற்ற சித்திரங்கள், வியப்பின் உச்ச விசித்திரங்கள்.
(அந்த சித்திரங்களுள் ஒன்றான நாம் மட்டும் தனித்தனியே சுவர்கள் செய்து தனித்தனியே வரைந்துகொள்ளும் நம் தனி உலகு; என்னது உனதில்லை என்பதாகவே...)
இத்தனை விசித்திரங்களும் கண்டு கவலையுறும் ஒற்றை ஓவியமாக நமது வாழ்வு...
நம்மை சுற்றிச்சூழ்ந்து நொடியில் நிறம் மாறும் இந்த (வி)சித்திரங்களை கண்டு களிக்க நேரமின்றி, ஆர்வமும் இன்றி நாம் நம் சுவர்களில் வரைந்துகொண்டே இருக்கிறோம் நமக்கே நமக்கான சித்திரங்களை... ஏனெனில் நமக்கு சுவர்கள் அவசியம்!
பின் குறிப்பு:
இந்தப்பதிவில் இடம்பெற்றிருக்கும் முதல் ஓவியத்தை வரைந்தவர் உலகப்புகழ் அமெரிக்கர் Andy Warhol. மற்ற ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தவர், Pockets Warhol, ஒரு குரங்கு!
கருத்துகள்
கருத்துரையிடுக