குமார 'சம்பவம்' அல்லது "தண்ணி"யில் தள்ளாடிய மரம்!
குமார் தண்ணி அடித்திருந்தான்.
மிக போதையில் இருந்தான்.
ஃபைனல் இயர் ஹாஸ்டலர்களுக்கு இது பழகிய காட்சி.
ஆனால் அவர்கள் பழகாத திருப்பம் ஒன்று இந்த காட்சியை இப்போது யாருமே எதிர்பாரா விதத்தில் மாற்றப்போகிறது.
குமாரின் ஊறுகாய் நண்பன், சற்று நிதானத்தில் இருந்தவன், மாடிப்படியில் குரல் கேட்டு எட்டிப்பார்க்கிறான்.
ஹாஸ்டல் வார்டனும் ப்ரின்சியும் இரட்டையர்போல் ஒன்றாய் கை வீசி கால் நகர்த்தி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.
'டேய் கொமாரு! ஓடுடாஆஆஆஆஆஆ' என்ற அலறலோடு அவன் மாடியிலிருந்து கீழே குதிக்க, கீழே கிரிக்கெட் ஆட்டம் தடைபட்டு கவனம் மாடியை நோக்கி திரும்ப,
குமாரு குத்துமதிப்பாய் காற்றில் கைகளால் துழாவி எதையோ பற்றிக்கொண்டிழுப்பதாய் நினைத்து எழ முயற்சிக்க,
வார்டனும் ப்ரின்சியும் மாடியில் நுழைய...
போதையில் மூழ்கிய குமாரின் மூளையில் எங்கோ சிவப்பு விளக்கு சுழல,
அபாயம் என்ற ஒற்றை உணர்வு உந்தித்தள்ள, தன் சக்தியை ஒன்றுதிரட்டி மாடிச்சுவரின் மேல் காலூன்றி ஏறி...
அருகிலிருந்த இளவயது மரத்தின் கிளையை தாவிப்பிடித்து ஏறி, மாடிக்கு வெளியே தரையில் இறங்குவதாய் எண்ணி எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் அந்தக்கிளை மாடிக்கு உள்ளேயே வளைய, அவனும் தப்பித்ததாய் நினைத்து குதிக்க, குதித்து புரண்டு எழுந்தவன் தலை நிமிர்த்தி பார்க்கையில் ப்ரின்சி தெரிய,
"ஐயய்யோ இங்கயும் வந்திட்டாரே!!" ன்னு மறுபடி அதே மரக்கிளையில தாவி ஏறி... இறங்க...
இந்த முறை வார்டன் முகம் தெரிய,
'"அவரு விட்டாலும் இவரு தொரத்துறாரே?" எனப்பதறி மீண்டும் அதே கிளையில் தாவி ஏற...
எத்தனை முறை முயன்றாலும் அது குமாரை மீண்டும் மீண்டும் அதே மாடியில் இறக்கிவிட்டது போதையில் அவனை இன்னும் குழப்ப,
வேடிக்கை பார்க்கும் தலைகள் பெருக... சிரிப்பு அங்கிருந்து அலை அலையாய் சிதற,
ஒரு கட்டத்தில் ப்ரின்சியும் வார்டனும் பதவி மறந்து சிரிப்பில் சேர்ந்துகொண்டு குமாரை கைத்தாங்கலாய் அவனது அறையில் பத்திரமாய் கொண்டு சேர்த்து சென்றது காலேஜில் வைரலாச்சி!
நம்ம குமாரோட நண்பன், மாடியிலிருந்து வீரமாய் குதித்தவன், பல நாட்கள் மப்பி்ல் மாடியில் மல்லாந்து படுத்து யோசித்து கண்டறிந்த மகத்தான விஷயம், "தோடா! அப்பப்ப பாட்டில்ல மிச்சமாற கொஞ்சூண்டு சரக்க எல்லாம் அந்த மரக்கிளைலதான கொட்டுனோம்! அதான்!!!!!!".
இந்த குமார சம்பவத்தின் நாயகன் இன்று ஒரு பெருநகரில் ஸ்டெடியான ஒரு ரியல் எஸ்டேட் மேக்னட்!
கருத்துகள்
கருத்துரையிடுக