குப்ப மேட்டரு!
நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த உயிரற்ற எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா? (அடிச்சது யாரு? சிங்கம்ல!!!)
குப்பை என்ற சொல், நாகரீக வாழ்வு இந்த உலகுக்கு தந்த புத்தம்புதிய சொல்.
மீந்ததை (எஞ்சியதை) உண்டு வாழ பல்லுயிர் இருக்கும்வரை அதுவும் உணவாகிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? எப்படி குப்பையாச்சி?
நம் உடலும் உணவே, யாருக்கோ! என்றவகையில்தான் இந்த உலகில் அனைத்து உணவுகளும் படைக்கப்பட்டன, உண்ணப்பட்டன, பன்னெடுங்காலம்.
வீட்டுக்குப்பின்னால் எருக்குழி (note: குப்பைக்குழி அல்ல!) எடுத்து, வீட்டில் மீந்ததை அதில் சேர்க்க, 'மீந்தது' அனைத்தும் பலகோடி உயிர்களுக்கு உணவாகி, அதன் பின் மீந்தது மீண்டும் பயிருக்கு எருவாகி, இலையாய் காயாய் கனியாய் நமக்கு உணவாகி என இடைவிடாத மறுசுழற்சியில் (recycling).
சைக்கிளை உலகம் கண்டுபிடிக்கும் முன்னரே ரீசைக்கிளை வாழ்வியலாக கொண்டவர் நாம். இன்று குப்பையாகிப்போனது நம் வாழ்வு.
'எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னா கேப்பாருக்கு எங்க போச்சி புத்தி?' என்பதும் நம் சொலவடைதான்.
நாமோ அதையும் தாண்டிய வியத்தகு விந்தைகளை நம்பி ப்ளாஸ்டிக் எருமை முதுகில் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
வாயில் நுழையும் ப்ளாஸ்டிக் ப்ரஷ்ஷிலிருந்து 'துடைக்கும்' காகிதம், 'உறிஞ்சும்' அட்டைகள் என நவ துவாரங்களோடும் ப்ளாஸ்டிக் உறவாட, குப்பையோடு குப்பையாய் நாமும் காற்றில் அலைகிறோம்...
'கல்' அறைகள் கட்டி மண்ணிலிருந்து நம்மை நாமே பிரித்துக்கொண்டது போல உணவையும் உண்பவரிடமிருந்து ப்ளாஸ்டிக் 'சுற்றி' பிரிக்க, நம்மைப்போல் ப்ளாஸ்டிக்கை கழற்றி எறிந்து உணவை உண்ண முடியாத விலங்குகளும் பறவைகளும் 'வாய்க்கெட்டியது வயிற்றுக்கெட்டவில்லையே' என்று பட்டினியால் மாள, நம் குப்பை உண்பாரில்லாமல் அலை அலையாய் பரவ, இந்த அலையில் சிக்கி நம் சுற்றமும் (காக்கை குருவி எங்கள்...) சூழலும் (நீள் கடலும் மலையும்...) வதைபடுவதை காணச்சகியாது, நம் கண்ணுக்கெட்டா தொலைவில் டம்ப்பிங் யார்ட் எனப்படும் புதைகுழிகளில் நம் குப்பையை அரசு எந்திரங்கள் சுமந்து நட, நட்டது முளைக்க, முளைப்பதும் குப்பையாகத்தானே இருக்கும்?!
அப்பனென்றும் அம்மையென்றும் கொட்டிவைத்த ஞானக்குடுவைகள் நாம், அறம் தொலைத்த வாழ்வில் மயிர் உதிர்ப்பது போல குப்பை உதிர்த்து நாட்களை கழிக்கிறோம்.
பிணந்தின்னிக்கழுகுகளை குப்பை அழிவில் இருந்து காக்க நண்பர் ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடமிருந்து நான் புரிந்துகொண்டது இது:
மனிதர்கள் உட்கொள்ளும் வேதி மருந்துகள், நம்மை நம்பும் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் நாம் கொடுக்கும் வேதி மருந்துகள், இந்தக் கழுகுகளுக்கும் காகங்களுக்கும் பேதியை உண்டாக்கி கொல்கின்றனவாம்.
காக்க காக்க! |
இயற்கையின் மறுசுழற்சியில் இறந்த பேருயிர்கள் அனைத்தையும் நாற்றம் நம் மூக்கை தொடுமுன் உண்டு அகற்றும் ஒரு உயிர்க்கூட்டம், நம் வாழ்வுச்சங்கிலியில் ஒரு இன்றியமையாத கண்ணி, நம் மருந்துகளால் அழிக்கப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா?
கழுகுகளும் காகங்களுமற்ற உலகு நேர்ந்தால் விளைவு என்ன ஆகும் தெரியுமா?
நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா?
Fact. Need to work on these things at large.
பதிலளிநீக்குVishnuvarthanan
Thank you.
பதிலளிநீக்குIf we dump food waste without plastic packing, they will be completely eaten away, however rot they may be...
What about கஞ்சித்தொட்டி, வீதிக்கொன்று, மனிதரல்லாத ஏனைய உயிர்கள் உண்டு வாழ!
Arumai
பதிலளிநீக்கு