முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரை சொர்க்கம்!



இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்...


நினைவு தெரிந்த நாள் முதலே சினிமா என்னை வசீகரித்தது.

கிருஸ்தவ பள்ளியில் மதிய நேரம் வெள்ளித்திரை கட்டி ஸ்வாதி நட்சத்திரம் காட்டினார்கள். இன்னொருமுறை முத்துராமன், 'ஆனந்தமானது, அற்புதமானது, நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' என்றார்.

பின்னொரு நாளில், 'மான்களும் சொந்தம் தேடையில் இந்த மானிடன் செய்த பாவம் என்னவோ!' என சிவாஜி ஏசுவிடம் மன்றாடினார்.

சற்றே பெரிய பையனானபின் சிவாஜி தருமியைப்பார்த்து உறுமியது முதல் 'தூங்காத கண்ணென்று ஒன்று' வரை தொடர்ந்து பின் பாலசந்தர், நாகேஷ், ஜெய்சங்கர், கர்ணன் என வளர்ந்தது (கர்ணன், ஹாலிவுட் கௌபாய்சையே மெரட்டியவர், கேமரா ஆங்கிளிலும் ஹாலிவுட்டை மிஞ்சிய க்ளோஸ் அப்கள், அது ஹீரோ முகமாகவும் இருக்கலாம், ஹீரோயின் "     " ஆகவும் இருக்கலாம்! நாயகிகளை 'தாராளமாய்' காட்ட அவரது சென்சார் போர்டு மெம்பர் பதவி உதவிற்று. வீட்டில் பொய் சொல்லி இவரது ஜம்பு படம் பார்த்த என் தோழர்கள் அனைவர்க்கும் சில தினங்கள் காய்ச்சல்!!!).

இடையில் சிவராத்திரி / சொர்க்கவாசல் திறக்கும் நாளின் முந்தைய இரவொன்றில் அபிராமியின் அணிகலன் வானில் பௌர்ணமியான படம், அநீதியை அம்மன் / காளி / மகமாயி வெல்லும் படம் என கண்முழித்து தியேட்டரில் பார்த்து சாமியாடியபடி வீடு வந்தால் அப்பா ஆடிய சாமியாட்டத்தில் அம்மாவுக்கு அருள் வந்திடுச்சி, "யாரக்கேட்டு அவன ராத்திரி பூரா வெளில சுத்தவிட்ட???"!

அம்மாவின் அரவணைப்பின் பின் ஒளிந்துகொண்டு அப்பாவின் பேரன்பை ரசித்த விலைமதிப்பற்ற தருணம் தந்த சினிமா வாழ்க!


பொதுவாக என் மனசு தங்கம் என ஒரு காளையனை கண்டபோதே சப்பாணியையும் கண்டு, இருவருக்கும் ரசிகனான அபூர்வ சிலரில் நானும் ஒருவன் (பரட்டை, காளையனானபின்தான் ஈர்த்தார் :-)

பதின் வயதில் மக்கள் என் பக்கம் என்ற மெகா ஹிட் சத்யராஜ் மல்டி ஸ்டாரருக்கு ஆண்கள் கூட்டம் அலைமோத, நானும் என் உறவு சகாக்களும் பெண்கள் க்யூவில் முண்டி நின்றதை இன்னொரு உறவு எங்கள் வீட்டில் காறித்துப்ப மானம் கப்பலேறியதாய் நொந்து திரிந்தோம் சில காலம். இன்று உறவுகள் யாராவது, 'லேடீஸ் கவுண்டர்ல முண்டியடிச்சி டிக்கட் வாங்குன பயதானடே நீ!' என என் குழந்தைகள் மத்தியில் கேலி செய்கையில் மனம் குதூகலிக்கிறது...

படிப்படியாய் திரைப்படங்களோடு வளர, அநேகமாய் எல்லா ஹீரோக்களையும் பிடித்துப்போயிற்று; நல்லவன் வெல்வான் என்ற கற்பிதத்தால்கூட இருக்கலாம் :-)

கமலஹாசன் தன் வித்தியாச நடிப்பால், ரஜினி தன் ஒரே மாதிரியான நடிப்பால், இருவரையும் ஸ்பெஷலாய் ஒரு பிடி கூடுதலாய் பிடித்துப்போனது.

கோடை விடுமுறைக்கு கிராமத்து வீட்டிலே குஞ்சு குளுவானெல்லாம் சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கையிலே, விடுமுறைக்கு ஒரு விசேஷமாவது வீட்டில் கண்டிப்பாக நடக்கும். மூன்று கட்டு வீட்டில் நாங்களெல்லோரும் நிறஞ்சுகிடக்க, கையில் குச்சியோடு சில மாமாக்கள் / அத்தைகள் / சித்தப்புகளின் கடுங்காவல் வளையத்துக்குள் கொல்லையில் விறகடுப்பு மூட்டி லட்டுகளும் ஜாங்கிரிகளும் ரெடியாகும். மோப்பம் பிடித்து ஒரு தற்கொலைப்படையும் ஒரு காரியசித்தி படையும் கிளம்பும். தற்கொலை படை கடுங்காவல் வளையத்தில் தானாகவே சிக்கி டைவர்சன் க்ரியேட் பண்ணும் சில நிமிட கேப்பில் ஏராளமான லட்டுகளும் ஜாங்கிரிகளும் அடுக்கின தட்டுகளிலிருந்து களவாடப்படும். வெற்றிக்களிப்பில் ஓவராய் தின்று சில மணி நேரத்துக்குள் "வயிறு வலிக்குது" என சில பக்கிகள் கதற, கிராமத்து டாக்டரை மருந்து புட்டிகளோடு கடத்திவர ஆள் அம்பு பறக்கும்.

வயிற்று வலிதாளாது சில பக்கிகள் 'என்னத்த தின்ன? மரியாதயா சொல்லிடு! இல்லாட்டி உம்மாச்சி கண்ண நோண்டிடும்!' என்ற மிரட்டல் ப்ளஸ் நங்குன்னு ஒரு கொட்டு வாங்கியபின்  வாக்குமூலம் கொடுக்க, காரியசித்தி படைக்கும் பேரேடு நடக்கும்!

'அடங்க மாட்றாங்க இவனுங்க!' என கடுங்காவல் படை தலை சொறிய, ஐடியா அண்ணாசாமி உறவு ஒன்று ஆபத்பாந்தவராய் குரல் கொடுக்கும்; 'பேசாம டென்ட்டு கொட்டாய்க்கு முதலாட்டத்துக்கு அனுப்பிறலாம்... வேல இங்கண நிறைய கெடக்கு....இவனுங்கள மேய்க்கிறதுக்கு...நானும் போறேன்!' என :-)

தரை டிக்கட்டு, சேர் டிக்கட்டு என்ற இரண்டே வகுப்புகள் கொண்ட கொட்டாயில் சேர் டிக்கட்டுகளையெல்லாம் பெண்டு பிள்ளைகள் ஆக்கிரமிக்க, கோபத்தில் கொதிக்கும் பசங்களை இன்டர்வல்ல தேன் மிட்டாய் என்பதாய் கங்காணி உறவு தாஜா செய்ய, வீரர்கள் மண் தரையில் அணிவகுப்போம் (லைட் வெளிச்சம் இருக்கும்போதே எடம் புடிச்சிடணும்; அப்பதான் மண் தரையில வெற்றிலைச்சாறு கரை இல்லாத இடமா புடிக்கலாம்).

இப்படி ஒரு மாலை நாங்கள் பார்க்கச்சென்ற படம் ஜெகன்மோகினி! பேய் பிசாசெல்லாம் காலை நீட்டி விறகாக எரித்து சமையல் செய்ய எவ்களுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிப்போச். படம் முடித்து வீட்டுக்கு போய் வயிறு முட்ட தயிர்சாதமும் தேங்காய் துகையலும் உண்டு ஒரு சொம்பு தண்ணி குடித்து, படுத்தால்... பாதி இரவில் ஒண்ணுக்கு முட்டி முழிப்பு வர, சொந்த பந்தமெல்லாம் குறட்டையிட்டு தூங்க, திரையில் அடுப்பெரித்த பேய்களெல்லாம் எங்கள் மனக்கதவை பிராண்ட, திண்ணைக்கு பத்தடி வெளியில் இருக்கும் வேலியருகில் ஒண்ணுக்கடிக்க தைரியமின்றி கட்டாந்தரை படுக்கையிலேயே நெளிந்துகொண்டிருந்தோம், கோழி கூவி முதல் ஆள் எழுந்திருக்கும் வரை!

'என்ன ஆச்சு இவனுங்களுக்கு?! அம்புட்டு பயலும் இவ்ளோ காலங்காத்தால போர்வைய கூட மடிக்காம இந்த ஓட்டம் ஓடுறானுங்க!!!!' என அங்கலாய்த்து நகரும் அந்த சித்தப்புக்கு தெரியுமா எங்கள் வேதனை!!!!!

தாய்மாமா ஒருவர் எங்கள் டவுன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஆங்கிலப்படத்துக்கு அழைத்துச்செல்வார்; பொதுவாக ப்ரம்மாண்ட காட்சியமைப்பு, லொகேஷன் மற்றும் பெண்களுக்காகவே ஓடிய படங்களுக்கு :-)

இடையில் 'தீ' மாதிரி சிவந்த கண்களுடன் விஜய்காந்த் என்ட்டராக, அவர் படங்களையும் பார்த்தோம், அந்த நிகழ்வு நிகழும் வரை;
"
அதாகப்பட்டது, தம்பி தங்கக்கம்பி என்ற படத்தில் இவர் நடிச்சாரா, அதப்பாக்க நாங்க போனமா, டிக்கட்டு வாங்க ஜென்ஸ் க்யூவில நின்னமா, முந்தின ஷோ முடிஞ்சு கொஞ்சமே கொஞ்சம் பேரு கண்ணெல்லாம் செவந்து வெளில வந்தாங்களா, வந்தவங்க எங்கள பாத்ததும் ப்ரீஸ் ஆயி நின்னாங்களா, 'என்னன்னே படம் எப்புடி?' ங்கிற மாதிரி நாங்க லுக்கு வுட, அதுல ஒருத்தன் பக்கத்தில தொங்கின வேப்ப மரக்கிளைல ஒரு குச்சிய ஒடிச்சி... வச்சாம்பாருங்க ஒரு அடி!

'எவனாவது இந்தப்படத்தப்போயி பாக்கலாமுன்னு தியேட்டர் பக்கம் வந்தீங்க, டங்குவார அத்துருவேன்! ஓடிடுங்க!!!' ன்னான்.

சிட்டா ஓடிட்டோம். அடுத்த வாரம் ஆனந்த விகடன்ல விமர்சனம் படிச்சதக்குப்பறம்தான் புரிஞ்சது பாவிப்பய ஒரே அடியில எங்கள எவ்ளோ பெரிய ஆபத்திலந்து காப்பாத்திருக்கான்னு!!!
"

சிறு வயது பள்ளி நாட்களில் யாராவது சினிமா தியேட்டர் ஆபரேட்டரின் தயவில் சில ஃபிலிம் துண்டுகளை காசு கொடுத்து வாங்கி வருவர் (ஃபிலிம் ரீல் ஓடையிலே கட்டானால் ஓட்டி ஓட்ணுவதற்காக கட்டான பகுதியில் சில சென்டிமீட்டர் நீளத்திற்கு வெட்டி ஒட்டுவார்கள். அப்படி வெட்டி ஒட்டிய துண்டுகள் நாவிதர் கடை தலைமுடி குப்பை போல குவிந்திருக்கும். அள்ளி வெளியே வீசுகையில் எடுத்து வந்த நண்பர்களும் உண்டு. வெட்டி ஒட்டிய ரீலில் ஒரு எடிட்டிங் எஃபக்ட் வரும்போது திரையில் கதாபாத்திரங்களின் சில வசனங்களும் ஸ்கிப்பாகி ஆடியன்சிடமிருந்து ஆபரேட்டருக்கு வசவு வார்த்தைகள் பறக்கும்
...). அந்த துண்டுகள் ஆக்டிவாக எக்சேஞ்ச் ஆகும். பள்ளிக்கூடத்தில் இயற்பியல் பாடம் தந்த அறிவோடு நாங்கள் அட்டை டப்பா + பல்ப் உதவியுடன் ப்ரொஜக்டர் செய்து, பல்ப் எதிரே துளையிட்ட ஓட்டை வழியே வரும் வெளிச்சத்தில் துண்டு ஃப்ரேம்களை காட்டி சுண்ணாம்பு சுவர்களில் விழும் பிம்பத்தை கண்டு குதிப்போம். நவராத்திரி கொலுவின்போது கும்மோணத்தின் பக்கத்தாத்து மாமா ஒருவர் 8 எம் எம் ப்ரொஜக்டரில் ஏதோ ஒரு கருப்பு வெள்ளை காவியத்தை காண்பிக்க, இடையில் அந்து போன ரீல் துண்டை வாங்க அந்த வீட்டு கோபுவுக்கு எங்கள் சொத்தையே (பள பள பம்பரம், கோலி குண்டுகள் இத்யாதி) தந்திருக்கிறோம்.

வயது வந்த பின் வயதைக்கெடுக்கும் படங்கள், தொலைதூர தியேட்டரில் என நம்ம நடவடிக்கை அப்பப்போ மாறிப்போனாலும் சினிமாவின் ஈர்ப்பு பெருகிக்கொண்டுதான் இருந்தது.

அதன் பின் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் இன்று நம் உள்ளங்கையில், சினிமா சுருங்கிப்போக, இந்த மாற்றங்களின் ஊடாக வாழ்ந்த என் தலைமுறைக்கு மட்டும் எங்கள் சினிமா அனுபவங்கள் நினைவுச்சுரங்கமாய், இதழோர புன்னகையாய், உறவுகளோடு /சகாக்களோடு உரையாடுகையில் வெடிச்சிரிப்பாய்... தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அந்த மரபின் தொடர்ச்சியாக இன்று இரவுகூட நம் இந்திய கிராமங்களில் நம் தேச சகோதரனோ சகோதரியோ சிவராத்திரி விடியும்வரை கண்விழித்து படங்கள் பார்ப்பதும் தொடரலாம்.

சினிமா பாரடைஸ்!

பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...