மௌனம் எனக்கொரு போதிமரம்.
விழித்திருக்கும் நொடியெலாம் மௌனம், மையிருள் வனம் போல.
உலகின் ஓசையனைத்தும் இதிலிருந்தே எழுந்து இதிலேயே அடங்கும், அடர் மௌனம்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த மௌனம்... முழுதாய் உள் நிரப்ப காது பொத்தி கண்கள் மூடி இதழ்களும் மூடி மூச்சு முட்ட மகிழ்வாய் தவிக்கும் பேரன்பு.
ஆழத்தின் ஆழம் காணமுடியாத நினைவு அடுக்களில் சிக்கி மீண்டு ஊற்றெடுத்து பொங்கிப்பெருகி ஓசையற்று வழிந்தோடும் அடர்மௌனம் என் கண்களின் வழியே.
இடையறாது வழியும் என் மௌனத்தின் மெல்லிய இரைச்சல் கேட்டு திறக்கும் சில விழிகளேனும்.
ஓசைகளற்ற ஓசை வழியே அவ்விழிகளை நிறைத்து உள்ளிறங்கி அவ்வுள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மௌனத்தை தட்டியெழுப்பி கதைகள் பல பேசும் என் மௌனம், மௌனமாகவே.
பேரன்பின் பெருமௌனத்தில் திளைக்கும் மோனப்பெருவெளி எங்கும் ஞானத்தின் களி நடனம், திளைப்பவர் விழிகளில் தீபமேற்றும்.
அன்பின் தரிசனம் சுடராடும் என் விழிகள் வழி, உன் விழிகள் வழி, உலகெங்கும் தீட்சை பெறும், மோட்சம் பெறும்.
மௌனம் நமக்கது போதிமரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக