நான் பாட்டுக்கு பள்ளிக்கூடம் போனமா, விளையாண்டமா, வீட்டுக்கு வந்தமா, படிச்சமான்னு (மெய்யாலுமே அப்டிதான்!) சிவனேன்னு சுத்திகிட்டிருந்தேன். ரேடியோ கூட கிரிக்கெட் கமென்ட்டரிக்கு மட்டும்தான்.
திடீர்னு ஒரு நாள், சேனல் கரகரன்னு மொணகவும் வேற ஸ்டேஷன் ட்யூன் பண்ணலாம்னு திருப்புனா, அன்னைக்கு புடிச்சது இந்தப்பிசாசு.
தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்னு ஒரு குரல்.
எப்படி உள்ளே எறங்கிச்சின்னே தெரில இன்னைய வரைக்கும் உச்சிய புடிச்சி உலுப்புது!
அப்படி ஒன்னும் perfect ஆன குரலும் கிடையாது, வல்லின மெல்லின உச்சரிப்பு சிக்கலும் கூட (இவரோட 'ர', பெரிய 'ர' ஆனா 'ற' இல்ல!, உடுங்க பாசு, இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணா புரியாது, அனுபவிச்சி கேக்கணும்!)
டேப் ரெகார்டரெல்லாம் அப்ப wish list ல கூட இல்லைங்க... உங்களுக்கு நம்புறதுக்கு கூட கஷ்டமா இருக்கலாம்... அப்பல்லாம் wish list ஏ இல்லைங்க!!!! அந்த மாதிரியான ஒரு இளவட்ட கூட்டம் வாழ்ந்த காலம்!
அப்பலேந்து மார்க்கோனி கணக்கா ரேடியோவ திருகி திருகி, பிசாச தேடி, ரேடியோ knob கழண்டாலும் விடுறதில்ல!
யாருன்னு தெரியாது, ஊரேது தெரியாது ஆனாலும் அந்தக்குரல், அந்தக்குரல்!
எங்கள் மண்ணின் மாயவித்தைக்காரர் தன் பறக்கும் கம்பளத்தில் இவரை ஏற்றிக்கொள்ள, வரிசையாய் அற்புதமான பாடல்கள், அற்புதமான இசையில்! ஒரு நிலப்பரப்பு மொத்தத்தையும் சடுதியில் பிடித்துக்கொண்டது இந்தப்பிசாசு!
ஒரு இனிய மனது இசையை அழைத்துச்சென்றபோது அந்த கதையின் நாயகி, அவளும் பாடகி, எவ்வளவு மென்மையான மனதுடையவள் என்பதை, இந்த பிசாசுக்குரல் இம்மி பிசகாமல் நம்முள் கடத்தியது.
மீன்கொடி தேரில் நம்மை ஏற்றி இளம் காதலர்களின் மையலை கேட்பவருள் இவர் கடத்த, 'ஜிவ்' வாகி கம்பளத்தின் நுனிகளைப்பிடித்துக்கொண்டே பறந்தன பல லட்சம் இதயங்கள்.
ஞான் ஞான் பாடணும் என வலம் வந்த இந்தப்பிசாசுக்கு வேப்பி்லையடித்து (சினிமா பொழப்பு நிரந்தரமல்ல, அரசு உத்யோகமே சிறப்பு!) பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக்கி அழகு பார்த்தது வாழ்வு. அவருக்கு அதில் ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை என்று பின்னாளில் ஒரு உரையாடலில் கூறியிருந்தார்.
அவர் குரல் வழி பயின்ற பிள்ளைகள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
பிசாசின் துரத்தலென்னவோ இன்றுவரை தொடர்ந்து வருகிறது, துரத்த மனமில்லை, துரத்த எண்ணமுமில்லை. ஏனெனில், இவரது பாடல், தெய்வீக ராகம்!
கருத்துகள்
கருத்துரையிடுக