'என் பெயர் ஜூவானிடா...'
பதினான்கு வயது சிறுமி. மேன்மையான குடும்பத்தில் செல்ல மகள்.
நிலப்பரப்பெங்கும் மழையின்றி கடும் வறட்சி. பயிர் கருக, கால்நடைகள் கொத்து கொத்தாய் நீரின்றி இறக்க, தலைவர்கள் (ஊர், மத, நாட்டு) கூடிப்பேசி முடிவெடுக்கிறார்கள்; 'தெய்வங்களுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம். நிவர்த்தி செய்தால்தான் மழை வரும், செழிப்பு வரும்.
இந்த ஊரில் தலைவரின் பெண் ஜூவானிடா, பக்கத்து ஊரில் தலைவரின் ஆண் குழந்தை. அதற்கு அடுத்த ஊரில்...' என 'விருப்பப்பட்டியல்' நீள்கிறது.
ஒரு வருடம் தள்ளி ஒரு 'நல்ல நாள்' குறிச்சாச்சி.
ஜூவானிடா வழக்கம் போலவே விளையாடித்திரிகிறாள். பெருஞ்சோகத்தை முகத்தில் காட்டாது மறைத்தபடி அவளது பெற்றோர் அவளுக்கு செழுமையான உணவுகளை வழங்குகின்றனர். ஊரும் கூடி அவளை ஊட்டி வளர்க்கிறது.
அவள் உண்டு உறங்கியபின்னும் உறக்கமின்றி தவிக்கும் அவளது பெற்றோர் இன்னும் ஒரு வருடம், ஏன்? வாழ்நாள் முழுதும், நிம்மதியாய் உறங்கப்போவதில்லை; 'நாட்டுக்காக என்றாலும்.... வலிக்கிறதே!'
பொழுதுகள் கரைய, பருவங்கள் மாற, வருடமொன்று உதிர்கிறது. அவளுக்கு 'நல்ல நாள்' குறித்த புரிதல் இருந்திருக்குமா? மனம் பக்குவப்பட்டிருக்குமா?
ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன?
நல்ல நாளும் வந்தாச்சி.
மேன்மையான வேலைப்பாடுகள் கொண்ட அற்புதமான ஆடை உடுத்தி, வாசனை திரவியங்கள் பூசி, வயிறு நிறைய நல்லுணவும், அதன்பின் அவளுக்கு தெரியாமல் பழச்சாறில் கலக்கப்பட்ட மது மற்றும் வலி நீக்கு மூலிகைகளும்...
விருந்து முடிந்து, இறைவேண்டி வழிபட்டு, குளிரான அந்த மலை முகட்டில் அவளை தனியே விட்டு விட்டு (சிலகாலத்திற்கு வேண்டிய உணவு, மற்றும் அவளுக்கு பிடித்த பொம்மைகள், பொருட்களையும் விட்டுவிட்டு) விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திசைகளும் பொடிபட வெளியேறும் ஒருகிளி
இறையெனும் மழை வரும் இனி எந்தன் பயிர் வரும்
ஞாபக வேதனை மீளுமோ
ஆடிய பாதங்கள் அன்பின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ பாடிடுமோ ….
என அவளை விட்டு நீங்கிய கூட்டத்தின் கதறல் அவள் காதுகளுக்கு மட்டும் கேட்காமல் ஏனைய மலைமுகடெங்கும் எதிரொளித்தது.
பதினைந்து வயது ஜூவானிடா காத்திருந்தாள், கண்களுக்கு அப்பாலும் இயங்கும் பெருவுலகம் காண, தன் கதை பகிற, கடவுளரை காண, ஏன் என் இனத்தை வஞ்சித்தீர் என வினவ, மெல்ல மெல்ல கண்களின் ஒளி விடைபெறும்வரை. அவளது கூக்குரல் கேட்கும் மலை முகடுகளெங்கும் ஆளரவமற்ற பனிப்பொழிவு, இடையறாத பனிப்பொழிவு.
ஜூவானிடா காத்திருந்தாள், 20 ஆயிரம் அடி உயர மலை முகட்டில், பனிப்பொழிவுற்கு அடியில், துளியும் வண்ணம் குறையாமல்.
ஐநூறு ஆண்டுகள்; ஐநூறு நெடிய ஆண்டுகள்... காலம் மண்டியிட்டது. அவளுக்கு உதவ முடிவு செய்தது.
அந்த ஆராய்ச்சியாளருக்கு தென்னமெரிக்க பனிச்சிகரங்கள் மீது காதல், பெருவிருப்பம்.
அன்று அவர் ஒரு மலை முகட்டுக்கு அருகில் இருக்கையில் திடீர் பனிச்சரிவு... சரியும் பனிப்பொதிவோடு அற்புதமான ஆடைகள் அணிந்த தேவதையொருத்தி சரியக்காண்கிறார்.
பதறி ஓடி தூக்கி விரைந்து... ஜூவானிடா மீண்டு(ம்) வந்தாள், உயிரில்லையென்றால் என்ன போயிற்று? அவள் காண விரும்பிய உலகு இன்று அவளைக்கண்டு வியந்து நிற்கிறது. காலத்தினூடான அவளது பயணம் அவளைக்கண்டவர் மனதில் உறைந்து நிற்கிறது. தென்னமெரிக்காவின் 'பெரு' நாட்டிற்கு சென்றால் நீங்களும் அவளை இன்று சந்திக்கலாம்...
அவளது பிறவிப்பயன் நிறைவுற்றதா என தெரியவில்லை, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவள் மீண்டு வந்து 'சொன்ன' அவளைப்பற்றிய, அவளது மக்களைப்பற்றிய, அவளது வாழ்நிலம் பற்றிய, அவளது இனத்தவரின் உடற்கூறு பற்றிய, இன்ன பிற செய்திகளும் நம்மோடே வாழும், நம் வாழ்வை ஏதோ ஒரு விதத்திலாவது வளப்படுத்தும்...
உங்களுக்கு பதினான்கு வயதில் உயிராய் நேசிக்கும் பெண் குழந்தை இருந்து, நீங்கள் ஜூவானிடாவின் தகப்பன்/தாயாய் இருந்தால்தான் இவளது கதை புரியுமா என்ன?
இவளது கதையை கேட்டு கண்ணில் நீர் கசியும் ஒவ்வொரு உயிரும் அவளை நேசித்த தொன்ம உயிர்களின் இன்றைய வடிவாய் இருக்கலாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக