துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது:
(அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-)
'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ...
கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட.
சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)!
நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வான்னு கண்ணை சிமிட்டக்கூட கேப் உடாம, ஒங்கைய பிடிச்சி, மிளகாய்த்தூள் வாசனய வச்சே கடைய கண்டு பிடிச்சிடலாம், ஒன்னால முடியுமா? ன்னேன். நீயும் துள்ளிக்குதிச்சி எனக்கு முன்னாடி ஓட ஆரம்பிச்சே!' ன்னார்.
அந்தக்கண்ணாடி, தங்க ப்ரேமில் ப்ரவுன் கலரில், இன்னும் என் மனக்கண்ணில் மறையாமல் நிற்கிறது! ஆனால் அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமோ வருத்தமோ துளியும் அன்றே இல்லை!
அப்பளமாவது கிடைக்குமேன்னு ஜொள்ளு ஒழுக போனா, மொத்த கும்மோணமும் அங்க நிக்கிது! ஒரு வழியா என்னை இன்னொரு கூட்டமில்லாத கடைக்கு அழைத்துச்சென்று அதில் பனையோலை காற்றாடி ரெண்டு ரூபாய்க்கு வாங்கித்தந்தார். அதை கையில் உயர்த்திப்பிடித்தபடி காறறைக்கிழித்து நான் ஓடுகையில் அது சுற்றிய வேகம்!!!!!! விமானத்தையே ஓட்டுவது போன்ற அந்த மகிழ்ச்சி இன்றுவரை அடி மனதில் ரசக்கப்பி போல!
இந்த நிகழ்வில் ஏராளமான உளவியல் முறைகளும் ஒரு வாழ்வியல் நெறியும் பொதிந்து இருப்பதை உணர்ந்தவர்களுக்கு இன்று சிறார்கள் மொபைல் / ஐபேட் வழியே அமேசானிலிருந்து பெற்றோர் அனுமதியின்றி ஆர்டர் செய்வதும், அவர்களின் பெற்றோர்கள் ஸ்விக்கியில் உணவு வாங்கி சாப்பிடுவதும் இன்னும் சில நாட்களுக்கு வருத்தம் தரும். அதன் பின்... பழகிவிடும்!
கருத்துகள்
கருத்துரையிடுக