எரிபொருள் விலை வானேறினால் என்ன?
பயணம் குறைப்போம்.
விளைபொருள் விலை வானேறினால் என்ன?
உணவை குறைப்போம்.
நன்னீரின் விலை வானேறினால் என்ன?
அருந்துவதை குறைப்போம்.
விளைநிலங்களில் விமானமிறங்கினால் என்ன?
விதைப்பதை குறைப்போம்.
ஈர நாட்களையும் வெப்பம் சுட்டால் என்ன?
நடமாடுவதை குறைப்போம்.
பூமியை ஞெகிழி* மேய்ந்தால் என்ன?
நம் பங்கை செவ்வனே சேர்ப்போம்.
அமிலமழை பொழிந்தாலென்ன?
வேதியியல் கற்போம்.
பேச்சுரிமை எழுத்துரிமை புதைக்கப்பட்டால் என்ன?
(கண்ணீரில்) மௌனாஞ்சலி செய்வோம்.
ஒரு கூட்டிற்குள் புலனடக்கி உறங்கும் நமக்கு
விழித்திருக்கையிலும் இது சாத்தியப்படாதா என்ன?
மொத்தமாய் நம் அடர்மௌனம் நம்மை கவ்வுகையில்கூட அண்டமுழுதும் ஒலிக்கும் (நம்மனைவரின்) பேரிதயத்துடிப்பை என்ன செய்வோம்?
நிறுத்திக்கொள்வோம்!
ஏனெனில் நாம் சுதந்திரப்பறவைகள்.
முடிவெடுக்கும் உரிமை நம் பிறப்புரிமை. அதை யாரும் பறிக்க விடோம்!
(*ஞெகிழி - ப்ளாஸ்டிக்)
கருத்துகள்
கருத்துரையிடுக