முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரும்பாண்டிக்கு புறப்பட்ட பூதகணங்கள்!

ஆவணம். 

தமிழகத்தில் தஞ்சை தாண்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி என நூல்பிடித்து போனால் பேராவூரணி தாண்டி வருகிற ஒரு சிறு கிராமம்.

அங்குமேல்நிலைப்பள்ளி ஒன்று, கோ எட். தமிழ் மட்டுமே பயிற்று மொழி (ஆங்கிலம்கூட தமிழில்தான்!!). படிப்பைத்தாண்டி அவ்வப்போது கீரமங்கலம் வீ.ஆர்.கே தியேட்டரில் பாடாவதி திரைப்படம் ஏதாவது பார்க்க அழைத்துச்செல்வார்கள். அதுவே பெரிய விஷயமாய் பேசப்படும் :-)

இப்படியான ஒரு சூழலில், 'மாத்தி யோசி மனோகரா' என நானே ஒரு டூர் ப்ரோக்ராம் ஆர்கனைஸ் செய்கையில் நான் எட்டாம்ப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.

'பெரும்பாண்டிக்கு யாரெல்லாம் வரீங்க?! ஒலகத்திலயே ரொம்ப அற்புதமான எடமாம். சோலையும் ஆறும் அருவியுமா இருக்குமாம். போறதே ரொம்ப சி்ரமமாம், போனவங்களுக்கு திரும்பி வரணும்னே தோனாதாம். பஸ் டிக்கட்டு 25 பைசாதானாம்' என நான் வகுப்புத்தோழர்களிடம் அறிவித்துவிட்டு விளையாடப்போய்விட்டேன்.

வாயுள்ள பிள்ளை பரப்பும் என்பதாய் நான் கேம்ஸ் பீரியட் முடிந்து வரும்முன்னே பெரும்பாண்டி வைரலாச்சு.

அஞ்சாம்ப்புலேர்ந்து பத்தாம்ப்பு வரை பெண்டு பிள்ளைகளெல்லாம் சேதி கேள்விப்பட்டு பெயர் பதிய என் வகுப்பில் திரளவும், அடுத்த பீரியடுக்கு பாடமெடுக்க வந்த புவியியல் ஆசிரியரால் வகுப்புக்குள் நுழைய முடியாது கடுப்பாகி கைக்கு கிடைத்த முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்து 'என்னடா நடக்குது நாட்டுல?!' என உருட்டி முழித்து வினவவும், அடி வாங்கிய பையன் 'பெரும்பாண்டியாம் சார். சூப்பரான எடமாம். டூர் போறாங்களாம். நானும் அவன்ட்ட பேரு குடுக்கலாம்னு வந்தா...இப்ப்ப்டி அடிக்கிறீங்களே சார்' என அழுதுகொண்டே முடிக்கவும் நான் வகுப்புக்குள் நுழையவும் டைமிங்கோ டைமிங்கு!

புவியியல் ஆசிரியர் உள்ளூர்க்காரர். அவர் இந்த ஊரின் பெயரை அதுவரையில் கேள்விப்பட்டதே இல்லை. ஆனாலும் கௌரவத்துக்காக, 'பெரும்பாண்டிதான, அப்பறமா பேரு குடுக்கலாம் கிளம்பு' ன்னு அவன அனுப்பிட்டு, விந்திய மலையின் புவியியல் சிறப்புகளை பட்டியல் போட்டுட்டு கிளம்புறாரு. 

வகுப்ப விட்டு வெளிய போனவரு ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சிட்டு, 'இங்க வா' ன்னு என்ன கூப்பிடவும், வேகமாக ஓடுனனா, 'எலேய்! கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?' ங்கவும், 'ஆஹா!' ன்னு 'ஆமாம் சார், ஆமாம்' னு தலைய ஆட்டினேன்.

'சரிடா, என்னக்கின்னு சொல்லு, நானும் வரேன்' னு சொல்லிட்டு போய்ட்டாரு.

எனக்கு வயிறு கலங்கி ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, மூணுக்குன்னு என்னன்னமோ ஃபீலிங்கு!

பைய அவரு பின்னாலயே போயி, அவரு ஆசிரியர் அறைக்குள்ள நொழையவும், தயங்கி தயங்கி உள்ளே போயி, "சார், சார்... பெரும்பாண்டிங்கிறது... சுடுகாடு சார்! இன்னிக்கி காலைல ஸ்கூலுக்கு வர்றப்போ ஒருத்தர பாடைல தூக்கிட்டு போனாங்களா, அப்ப ஒருத்தரு மப்புல 'பெரும்பாண்டிக்கே போய்டியேடா பாண்டி! ஒன்ன நா இனிமே எங்கடா பாப்பேன்?' னு அழுது சலம்பவும், பக்கத்தில நடந்துகிட்டிருந்த ஒரு தெரிஞ்ச பாட்டிகிட்ட, 'ஏன் பாட்டி, அவரு பாக்கணும்னா பெரும்பாண்டிக்கு போய் பாக்கவேண்டியதான, ஏன் இப்படி அழுவுறாரு?' ன்னு கேட்டனா, அந்த பாட்டி சிரிச்சிகிட்டே 'மயானம்' பா அது. அங்க போனவங்க திரும்ப முடியாது' ன்னு சொல்லிட்டு நடைய எட்டி போட்டு போய்டுச்சி.

கேட்டத நம்புறதுக்கு கஷ்டமா இருந்ததா, நெசந்தானான்னு போய் பாக்கவும் ஆசை, தனியா போகவும் பயம். அதான்...செட்டு சேக்கலாம்னு பாத்தா... நீங்களும் வரேன்னு சொல்றீங்களே' ன்னு திக்கி திக்கி சொல்லி முடித்தேன்.

ஈயாடவில்லை சிவந்துபோன அவர் முகத்தில்!

'மான்களுக்கு விரித்த வலையில் சிக்கிய சிங்கமாய்' பிடரியை சில முறை சிலிர்த்துக்கொண்டபின்... அடிப்பார் என ஓடத்தயாராக நின்றால்... இடி சிரிப்பு சிரிக்கிறாரு மனுசன்! 

நெசமான சிரிப்புதானான்னு சில நிமிஷம் கேப்பு விட்டு நானும் சேர்ந்து சிரித்தேன்!

வகுப்புக்கு மீண்டு வந்து, 'பெரும்பாண்டிக்கு சின்னப்பசங்க எல்லாம் போமுடியாதாம். வயசாஆஆஆஆனவங்க மட்டும்தான் போலாமாம். அதனால டூரு கேன்சல்ட்' என சோகமாய் அறிவித்தாலும், மனதில் மரணத்தை வென்றது போல ஒரு மகிழ்ச்சி!

இலவச இணைப்பு:

நான் ஒரு கதை சொல்லி என்பது எனக்கு 10/11 வயதிலேயே தெரிந்துவிட்டது. செவன் ஸ்டோன்ஸ் விளையாடி முதுகெல்லாம் பந்தடி வாங்கி, இளைப்பாற ஒரு கொய்யா மரத்தில் நானும் என்னை விட சிறுவன் ஒருவனும் கால்களை தொங்கப்போட்டுக்கொண்டு கதை பேசுகையில், திடீரென :டேய், ஒன்ன அமெரிக்காக்கு அழைச்சிட்டுப்போவட்டுமா இப்பவே? எங்கிட்ட ஒரு மந்திரக்கம்பளம் இருக்கு' என ஆரம்பிக்கையில் அமெரிக்காவுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது எனக்கு!

அடுத்த பத்து நிமிடங்கள் என் கற்பனைக்கு சிறகு முளைக்கவும்... இரண்டு விஷயங்கள் நடந்தது:


1. அந்த சிறுவன் அவனது கற்பனையில் நான் சொன்ன தூரதேசத்தில் பயணம் செய்யத்தொடங்கிவிட்டான் என அவனது கண்களை பார்த்தே உணர முடிந்தது!

2. திடீரென அவனது கண்களில் தோன்றிய பயம்! 'தனியே அமெரிக்காவில் நான்! அம்மா அப்பாகிட்ட சொல்லிக்கலையே!! தேடுவாங்களே, காணாம அழுவாங்களே!!!' என்ற பயம்!

'எனக்கு பயமா இருக்கு; நான் வீட்டுக்கு போறேன்' என்று பதிலைக்கூட எதிர்பாராமல் குதித்து ஓடியவன் அதன் பின் ஆறு மாசத்துக்கு நாங்கள் செவன் ஸ்டோன் விளையாட ஆள் பிடிக்கையில் எல்லாம் தலைமறைவாய் திரிந்தான் :-)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...