என் காதல் கதை என்னவாக இருக்கும்?
எந்த வயதில் தொடங்கியது என்று நினைவில்லை...
பார்க்கும்போதெல்லாம் பரவசக்கிளர்ச்சி.
'என்ன வண்ணம், என்ன நேர்த்தி, என்ன செழுமை?! ஏயப்பா!!!!'
ரசிப்பு வியப்பாக மாறி வியப்பு காதலாய் மாறி... வனப்பென்னவோ கூடிக்கொண்டே...
அற்புதங்களின் பிறப்பிடமாய் கண் முன்னே நடமாடுகையில் நெகிழாமல் இருக்க முடியுமா?!
சில சமயங்களில் ஒப்பற்ற வனப்புடன், சில சமயங்களில் சோர்வாக, இன்னும் மற்ற சமயங்களில் வெறுமையாய்... பருவ மாற்றங்கள் புரியத்தொடங்கியபின் எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகோ அழகு!
வெறுமையிலிருந்து வனப்புமீண்ட பருவத்தில் மேனியிலிருந்து நீளும் ஆடைகளின் மேலே விழுந்து குதிரைபோல புரளவேண்டுமென பெருவிருப்பம் தோன்றும். சில முறை மகிழ்வாய் புரண்டுமிருக்கிறேன், குதிரையாக மாறியதான உணர்வில்.
இப்படியாக காதல் கொழுந்து விட்டெறிய, உரையாடத்தொடங்கினோம், மௌனமாய், சில நேரங்களில் பல மொழிகளிலும்கூட.
நீளும் உரையாடல், விழித்திருக்கும் நேரமெல்லாம்... சுட்டெரிக்கும் வெயிலில், குளிர்நிலவு இரவில், நிலவற்ற இரவுகளில் மின்மினிப்பூச்சின் துணையோடு, தூக்கத்தை முடிந்த வரையில் தள்ளிவைத்து என.
பேசுவது எம்மொழியானாலும் நேசம் உணர்த்தக்கூடிய மொழியாகவே அனைத்தும்.
காணுமிடமெலாம் காதல், காதல், காதல்!
காணுமிடமெலாம் காதல், காதல், காதல்!
என் வசிப்பிடம் மாறினாலும் காதல் மாறவில்லை. தொலைதூரம் சென்றாலும், மலை கடல் பல கடந்தாலும், தொற்றித்தொடர்ந்தது. தொடர்கிறது, துளிராய், இலையாய், அரும்பாய், பூவாய், காயாய், கனியாய், விதையாய், விதைக்குள் வேராய்.
இதில் எந்த அடுக்கை தொட்டாலும் எம் காதல் வழியும் அதனுள்ளிருந்து.
இதில் எந்த அடுக்கை தொட்டாலும் எம் காதல் வழியும் அதனுள்ளிருந்து.
இணைசேர்ந்து வாழும் காதலர்கள் நெடுங்காலம் மகிழ்வாய் இசைந்திருந்தால் இருவரின் முகமும் கூட ஒத்த சாயலாய் மாறிவிடுமாம். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்...
நானும் மரமாவேன்!
நானும் மரமாவேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக