பால்யகால சகி
------------------------
அக்கட பூமியின் 'கதா' நாயகன்!
மஜீதும் சுகறாவும் பால்ய காலம்தொட்டு நட்பு. பருவத்தில் காதலாகி, பொருளாதார மலை ஆழத்தால் சேரமுடியாது, மஜீது வீட்டை விட்டு வெளியேறி தேசாந்தரியாக, அவனது குடும்பத்தொழில் நசித்துப்போக, அதற்குள் சுகறாவை 'ஆக்கங்கெட்டவனொருவன்' நிக்காஹ் செய்து பெண்டாண்டு பல்லுடைக்க, அவள் வறுமையில் வாடும் பிறந்த வீட்டில் தான் தனியாய் சுமந்த பழைய சுமையே மேல் என திரும்ப, நாடோடி மஜீதும் வீடு திரும்ப, இப்படி ஏதேதோ ஆகிப்போனபின்பு, இவர்கள் நட்டு வளர்த்த தோட்டச்செடிகளோடு இவர்களது நேசம் 'விட்ட இடத்திலிருந்து' துளிர்க்க, வறுமையால் கன்னிமை மாறாத சகோதரிகளை மணம் செய்து கொடுக்கவேண்டி மஜீது திரும்ப பயணப்படுகிறான். பணம் சேர்த்து கடமைகளை கரை சேர்த்து பின் சுகறாவோடு இணைய திட்டம்.
பணியிடத்தில் வரும் வருவாயை ஊருக்கு அனுப்பி, பாதை தெரியுது பார் என்ற நம்பிக்கை வருகையில் ஒரு விபத்தில் ஒரு காலை...
ஊருக்கு தெரிவிக்காமல் வேறு ஏதேதோ வேலைகளை முயன்று பிடிமானம் கிடைப்பதற்குள் ஊரிலிருந்து கடிதம்... காத்திருந்து காத்திருந்து, நோய்ப்பட்டு முற்றியும் அவனை கவலை கொள்ளச்செய்யவேண்டாம் என மறைத்து, இறக்கும் வரையில் அவன் வருவானா என ஏங்கி எதிர்பார்த்து சுகறா மரித்துப்போன செய்தி சுமந்து...
காதல் கதையென்றாலே மகிழ்ச்சி அல்லது முறிவு என்பதை தாண்டி ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இஸ்லாமிய கேரள சூழலில் ரத்தமும் சதையுமான உணர்வுகளால் இந்த கதையை எழுதியவர் வைக்கம் முகமது பஷீர். அவரது முதல் நாவல் இது; பால்யகால சகி!
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு (அதற்குபின்னரும்) நல்ல இலக்கியத்தை நேசிப்பவரின் சகாவாக இவர் ஆகிப்போனதன் காரணம், உணர்வில் தோய்ந்த எழுத்து!
அவன் கடமைக்காக பணம் சேர்க்க தூரநிலம் கிளம்புகையில் சுகறா காதலால் கசிந்துருகிய மனதோடு ஏதோ சொல்கிறாள். சூழ்நிலை சப்தங்களால் மஜீதுக்கு கேட்கவில்லை. அவள் இறந்தபின் 'அன்று இவள் சொல்ல வந்தது என்னவாக இருக்கும்?' என சிந்தித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு தெரியாதா என்ன?!
மஜீதே என யாராவது அழைத்தால், இவர்தானோ என திரும்பிப்பார்ப்போம், இந்தக்கதையை படித்தபின்!
காதலை இவர் அணுகும்விதம் அலாதி. ஆனாலும் எனக்கு மஜீதின் மீது கடும் கோபம். பல ஆண்டுகள் தொடர்பின்றி சுற்றித்திரிந்து வீடு மீள்கையில் சிறுவயதிலேயே பெண்களை மணமுடிக்கும் சமூகத்தில் இவனுக்காக்காத்திருப்பாள் என்ற ஏமாற்ற எதிர்பார்ப்பு கொண்டவன் என்பதாலும், 'ஏன் ஒரு கடிதம்கூட போடலே மஜீதே? என பெரிய விழிகளில் நீரோடு சுகறா கேட்கையில் 'தோணல' என ஒற்றை வார்த்தையில் கடந்ததாலும்!
"ஒண்ணும் ஒண்ணும் சேர்த்தா பெரிய ஒண்ணு!" அதற்கான நதிமூல விளக்கம்... ஈ சேட்டன் வேற லெவலானு!
கருத்துகள்
கருத்துரையிடுக