சேந்தன்குடிக்காட்டில் இன்று விதையாய் - மரம் தங்கசாமி...
ஐந்து ஆண்டுகள் முன் என் பால்ய தோழன், உறவினன் வீட்டுக்கு (பெருமகளூர், பேராவூரணி அருகில், பேராவூரணி, பட்டுக்கோட்டை அருகில், பட்டுக்கோட்டை, தஞ்சை அருகில்) சென்றபோது, 'இன்று நேரமி்ருந்தால் சேந்தன்குடி போகலாமா?' என்றான்.
'அங்க மரம் தங்கசாமின்னு ஒருத்தர், மரங்கள உயிராய், சாமியாய் கொண்டாடுபவர். போலாமா?'
மரங்கள் மீதான என் பேரன்பை உணர்ந்தவன், அழைக்கிறான். நானும் என் அண்ணனும் அவனுடன் கிளம்பினோம்.
ம.தங்கசாமியின் மகன் எங்களை ஒரு சாலைப்பிரிவில் சந்தித்து தோட்டத்துக்கு (வனத்துக்கு!) அழைத்துச்சென்றார்.
வயதான மனிதர் (அப்போது 76 வயதாம்), பார்வை துல்லியம், நடையில் தளர்வில்லை, எதிர்கொண்டு வரவேற்றார்.
'ஒங்க குலசாமிய கும்பிட்டுக்குங்க' என்று அங்கு ஒரு சுவரை காட்டினார். அதில் ஆள் உயர நிலைக்கண்ணாடி மட்டுமே! அதில் தெரிந்த எங்கள் பிரதியை வணங்கி உள்ளே சென்றால், எங்களை உள்வாங்கிக்கொண்டது வனம்!
நெடிதுயர்ந்த பலா, வேம்பு, மா, சந்தனம், வேங்கை, இன்னும் பல வகை மரங்கள், எலுமிச்சை, கொய்யா, பலப்பல பழ மரங்கள், தரையெங்கும் மூலிகைச்செடிகள்...
பரவச உணர்வுடன் சுற்றி சுற்றிப்பார்த்தோம், கண்கொள்ளுமட்டும்!
மாம்பழம் ஒன்றை அவர் மகன் மரத்திலிருந்து பறித்துத்தந்தார். அற்புதமான சுவை, என் வாழ்நாளில் கண்டிராத சுவை... விதையின் மேலோடு கூட விடாமல் கரண்டித்தின்றேன்!
சுற்றி சுற்றி வருகையில் இருட்டியதால் மட்டுமே அங்கிருந்து நகர்ந்தோம். அவரது வீட்டுக்குள் அவரெதிரில் ஒரு பலகையில் அமர்ந்து உரையாடினோம், மரங்களின் அவசியம் பற்றி, அவற்றோடு இணைந்த அவரது வாழ்வுப்பயணம் பற்றி...
'கல்யாணமா, பிள்ள பொறந்ததா, காது குத்தா, சடங்கா, கருமாதியா, மரம் நடு !.
காசு வேணுங்கும்போது வெட்டிக்கோ. ஆடு வளருப்பா, அது நடமாடும் வங்கி !'
இவற்றை இவர் சொல்லவில்லை, வாழ்ந்து காண்பித்தார் !
ஏராளமான சந்தன மரங்களையும் செம்மரங்களையும் எம் நிலங்களில் நடச்சொன்னார். அரசின் 'தடை செய்யப்பட்ட மரங்கள் பட்டியல்' பற்றி சொன்னோம். சன்னதம் வத்ததுபோல் பேசினார், 'என்னோட நிலத்தில நான் என்ன மரம் நடலாம், என்ன மரம் நடக்கூடாருன்னு சொல்ல வேறு யாருக்கும் உரிமையில்லை. சந்தனத்துக்கும் செம்மரத்துக்கும் சந்தை மதிப்பு நல்லா இருக்கிறப்ப அதை நட்டு வளர்ப்பதுதானே நியாயம்? அரசு புறம்போக்கு நிலங்களில் ஏற்கனவே இவற்றை வளத்தா அதுக்காக நாம யாரும் வளக்கக்கூடாதுன்னு சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன். நீங்களும் ஒத்துக்கக்கூடாது!' என்றார்.
'சரி ஐயா, கிளம்புகிறோம், உங்கள் கையால் ஏதாவதொரு விதை கொடுங்கள்' என்றேன்.
மூடிய விரல்களை வி்ரித்து என் உள்ளங்கையில் உதிர்த்தார், ஒற்றை சந்தன மர விதை! எப்போது அது அவர் கையில் வந்தது என்று இன்று வரை எனக்கு புரியவில்லை!
'கிளம்புறதுக்கு முந்தி இதுகள நட்டுட்டு போங்க' என்று சில வேம்பு கன்றுகளை காட்டினார். அவரோடு இணைந்து நட்டோம்.
அருகில் நாற்பது அடி உயர்ந்த வேம்பு ஒன்றை வாஞ்சையோடு தடவி, சொன்னார் '1984 ல நட்டது. இந்திரா இறந்தப்ப...'. அருகில் பல பெருந்தலைவர்கள் பெரு மரங்களாய் நிற்பதை அப்போதுதான் கவனித்தோம்!
இன்று அவரும் ஒரு விதையாகிவிட்டார். நாளை அவரது தோட்டத்தில் ஒரு பெரு மரமாய்... ஏன் இந்த குறுகிய சிந்தனை?!... உலகின் அனைத்து மரங்களிலும் அவரது ஆன்மாவின் சிறு துளி ஒன்று இருக்கும்!
இவரளவு மரங்களை நேசித்த மனிதரை நான் என் வாழ்நாளில் என்று காண்பேனோ...
கருத்துகள்
கருத்துரையிடுக