களவையே தொழிலாய், அதிலும் நேர்மையாய் (களவாண்ட பொருள் கோடி பெருமானமென்றாலும் இவர்கள் கள்ளப்பொருள் வாங்குபவனிடம் கொடுத்து கேட்டு வாங்கிக்கொள்வது உணவு தானியங்கள் மட்டுமே, வயிறு வளர்க்க மட்டுமே).
மூன்று கிராமங்கள், கொம்பூதி - களவுக்கூட்டம், பெரும்பச்சேரி - உழவுக்கூட்டம், பெருநாழி - மேட்டுக்குடி கூட்டம்.
களவாணிகள் அருகில் உள்ள கிராமங்களில் களவு செய்து (செய்வது யாரென களவு கொடுத்தவருக்குத்தெரிந்தாலும் எதற்கு இந்தக்கூட்டத்திடம் வம்பு என சகஜமாய் பழகும் அளவு களவிலும் ஒழுக்கம், எவர்க்கும் அஞ்சாத வீரம்) மேட்டுக்குடி வணிகரிடம் பண்டமாற்றாய் தானியங்கள் பெற்று, தம் போலவே ஒடுக்கப்பட்ட உழவுக்கூட்டத்துடன் இணக்கமாய், வாழ்வு இரவொரு களவும் நாளொரு பொழுதுமாய் செவ்வனே நகர்கிறது.
தண்ணீர் பஞ்சத்தில் (உழவுக்கூட்டம் குடியமர்த்தப்பட்ட ஊரில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்), பச்சைப்பிள்ளைக்காரி ஒருத்தி கட்டுப்பாடுகள் நிறைந்த மேட்டுக்குடி எஸ்டேட் கிணற்றில் (ஒவ்வொரு மேட்டிமை பெண்ணின் குடம் நிரம்புகையிலும் ஒரே ஒரு வாளி தண்ணீர் மட்டும் காத்திருக்கும் உழவுப்பானையில் விழும். பத்து வாளி கொள்ளும் பானை நிறைய அது பத்து மேட்டிமை பானைகள் நிறையும் வரை தவமிருக்கவேண்டும். யாரும் வரவில்லையென்றாலும் தண்ணீர் சேந்த உரிமையில்லை இந்தப்பானைக்கு) பச்சைப்பிள்ளைக்காரி, உழவுக்காரி, ஒரு பனைமட்டை வாளி நீர் யாருமில்லை என நினைத்து இறைக்க, கோள்சொல்லும் வில்லங்க மேட்டிமை பெண்ணொருத்தி கண்ணில் பட, வினை விதைக்கப்படுகிறது.
விதைத்தது வினையென்றால் அறுப்பதும் அதுதானே, ப.பிள்ளைக்காரியின் கணவன் மரத்தில் கட்டப்பட்டு செவ்வெறும்பு பிடுங்க குற்றுயிராகி, கொம்பூதியின் தலைவன் வந்து மீட்க, பகை கொழுந்து விட்டு எரிகிறது, ஒடுக்கப்பட்ட கூட்டம் குடிநீர் உரிமை 'கேட்க', கிணற்று குடிநீரில் சாதி வெறியின் மலம் மிதக்கிறது...
குற்றங்களை சட்டம்கொண்டு அடக்க பிரிட்டிஜ் அரசு எந்திரமும் விரைய, சமீபத்தில் அங்கு அவர்கள் நிறுவிய "கச்சேரி" (காவல் நிலையம்) கதையின் வெந்த கலனாகிறது.
ஏராளமான போலீஸ்காரர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தை உயர்த்திப்பிடித்து கொம்பூதி கூட்டத்தை வளைத்து கட்டி அடுத்து கைரேகை பதியவைத்து, தினமும் இரவில் கச்சேரியில் கைரேகை உருட்டி 'கல்யாண மாப்பிள்ளையானாலும் முதலிரவின் ராத்தங்கலும் கச்சேரியில்தான்' என வரையறை செய்து அமுல்படுத்த குலுங்குது கொம்பூதிக்கூட்டமும் சுற்றியிருக்கும் வாழ்வியல் களங்களும்.
இந்த மாதிரி ஒரு கதை, தமிழுக்கு மிக மிக அவசியம்.
கதை மாந்தர்கள், வாழ்வு முறைகள், வெள்ளையரின் அணுகுமுறை, தமிழ் நண்டுகளின் நண்டுபிடி உள்குத்துகள் என 1920களின் கமுதி நிலப்பரப்பை, மனிதர்களை நம்மிடையே ரத்தமும் சதையுமாய், முள் புதர்களும் கல் வீடுகளுமாய், உணர்வு துளியும் குன்றாமல் கட்டி எழுப்பிய விதம், அற்புதம்.
சினிமாவிற்கான கதை போல காட்சிகளை வெட்டி விரித்து சேர்த்து நகர்த்துவது, நம்ப முடியாத மேஜர் (போலீஸ்) ட்விஸ்ட், மெக்சிகோவின் காப்ரியேலா கார்சியா மார்க்குவெஸ்ஸின் மேஜிக்கல் ரியலிச பாணியில் இவர் முயன்றிருக்கும் கதையுடன் ஒட்டாத நாகமுனி/ஹசார் தினார்/வஜ்ராயிணி/வேலாயுதம் (கதையுடன் ஒட்டாத) கிளைக்கதை என குறைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி ஒரு வாழ்வியல் நூலாக இதை கொண்டாடலாம்.
ஆனால், குற்றப்பரம்பரை ஏன் குற்றப்பரம்பரை ஆயிற்று என்ற வலுவான, வலி மிகுந்த காரணத்தை, முன்கதையை, ஏனோ வேல ராம்மூர்த்தி முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார் என்ற பெரியதொரு நெருடல் குறையாமல் இருளப்பசாமி துணையுடன் சற்றே தோண்டிப்பார்த்தால், இந்தப்பதிவைப்போல நீண்ட இன்னொரு பதிவிற்கான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவரது நாவல் உண்மை வரலாற்றை மட்டுமே சாராமல், சினிமாவிற்காக எழுதப்பட்டதென்ற என் ஐயமும் உறுதியானது! (பாலா இவரது கதையை படமாக்க முயல, பாரதிராஜா, நிஜத்திற்கு அருகிலான ரத்னகுமாரின் வெர்ஷனை படமாக்க பூஜை போட்டு தானே வேயன்னா கெட்டப்பில் வலம்வர, கோர்ட்டு கேசு பஞ்சாயத்து ஆகி... நாம் எல்லோரும் குற்றப்பரம்பரைதானே, இதெல்லாம் சகஜமப்பா என திரை உலகும் தரை உலகும் காத்திருப்பது, அது வேற கதைக்காக!).
அருமையான களம், வேயன்னா (வேல ராமமூர்த்தி!) ஏமாற்றிவிட்டார்!
"நிஜமான" குற்றப்பரம்பரைக்கான காரணங்களும் அவை நம் வரலாற்றிலும் வாழ்விலும் விட்டுச்சென்ற மிக கொடுமையான வடுக்களின் தீவிரத்தையும் அறிய, அடுத்த பதிவில் சந்திக்கலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக