தினமலர் நாளிதழில் வித்தியாசமான விளம்பரம், 'குழந்தைகளுக்கு கதைகள் கூற ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்' என ஒரு அறக்கட்டளை விளம்பரம். என் கண்ணில் பட்டதும் தொடர்பு கொண்டேன்.
'நேரில் வாங்களேன், பேசுவோம்' என்றார்.
பேசினோம், ஒரு அமைப்பு உருவானது. நகர் முழுதும் 8 இடங்களில் கதைகூறும் மையங்கள். தன்னார்வலர்கள் கதை சொல்ல, குழந்தைகள் கேட்க, வாரத்தில் சில மணி நேரங்கள் மட்டும்.
வணிகம் ஒரு புறம், அறக்கட்டளை ஒரு புறம் என சிரித்த முகத்துடன், சீரிய எண்ணங்களுடன் இவரது வழி நடத்தலில் இன்று ஐந்தாவது ஆண்டு. வருடந்தோறும் ஒரு பெரிய நிகழ்வு, கதை / கட்டுரை / நாட்டுப்புறப்பாட்டு போட்டிகள் என... ஐந்து வருடங்கள் பகுதி நேர தன்னார்வலர்களின் சிறு குழு மூலம் இவரது முயற்சியில் மகிழ்ந்த குழந்தைகள் ஆயிரத்துக்கும் மேல்.
இவ்வளவு குழந்தைகளை மகிழ்வித்தவர், தன் சொந்தக்குழந்தைகளையும், உற்றாரையும், உறவினரையும், நண்பர்களையும் தவிக்கவிட்டு சில தினங்கள் முன்பு விடைபெறாமலே விடைபெற்றார்...
காலனுடன் கூட பிணக்கின்றி ஒத்துழைத்து...
அதற்கு இரு நாட்களுக்கு முன் மாம்பழங்கள் அனுப்பியிருந்தேன். புதிய கட்டிடத்திற்கு வாழ்த்தும் அனுப்பியிருந்தேன். மகிழ்வாய் பதில் அனுப்பியிருந்தார்...
அவரது வீட்டு அழைப்பறையில் அவரது தந்தை, முதிய பெரியவர், ஒரு குற்ற உணர்ச்சியுடன் அமர்ந்திருந்ததாக தோன்றியது... (மக்கள் மரிப்பதை காணும் பெற்றோரின் மனநிலை, 'எங்களை எடுத்துக்கொண்டிருக்கலாமே' என்பதாகத்தான்).
அவரது இளைய மகள் சிறகறுந்த சிறு பறவைபோல் கதறி அழுததை தாங்கும் சக்தியற்று ஓடி வெளியேறினேன்... அந்தச்சிறுமி வயதில் எனக்கும் மகளுண்டு. தகப்பனிழந்த மக்களின் துயர், பெருந்துயர். நாளை நான் விடைபெற்றால் என் மக்களும் இப்படித்தானே என்ற எண்ணம் என்னென்னவோ செய்கிறது...
வாழும் வரையில் நம் தினங்களை பகிர்பவர்களுடன் அன்பை பகிர்வோம்.
உடல்தலனில் கூடுதல் கவனம் செலுத்தி, நம் மக்களுக்காக நாம் நலமுடன் வாழ்ந்தாகவேண்டும் என தோழமைகளை வேண்டுகிறேன்.
நல்ல ஆன்மாக்களால் நிறைந்த நம் உலகில் அவரும் நம்மை வழி நடத்தும் பிரபஞ்ச சக்தியாக இருப்பார்.
இறுதி அஞ்சலி முடிந்தபின் சமிதி ஒருங்கிணைப்பாளருடமிருந்து தகவல் 'மாம்பழத்திற்கு சார் பணம் கொடுத்துள்ளார். உங்களிடம் சேர்க்க'...
அவர் அந்த பழங்களை உண்டிருப்பார் என்ற நினைவு தரும் சிறு நிறைவில், நான்.
கருத்துகள்
கருத்துரையிடுக