"
அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.
சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா?
"
1984 ஆம் ஆண்டு.
கோடை விடுமுறை.
கிராமத்து வீடு.
மதியம் வரும் ஒற்றை நாளிதழ், தினமணி.
ஞாயிறானால் மகிழ்வாக தயாராவோம்; தினமணியில் 'கதிர்' வரும் நாள்.
பதின்ம வயதில் அந்த ஞாயிறு இதழின் சில பக்கங்களை, சக வயது உறவுகளுக்கு முன்பு 'கிழித்துச்சென்று' வாசிக்கும் அளவுக்கு என் கால்களை நனைத்த, என்னை மூழ்கடித்த (எழுத்து) நதி, சிந்தாநதி!
சொல்லிப்பார்க்கையி்லேயே ஒரு விசித்திரம் பிடிபடும். 'இது நதியின் பெயர்... இல்லையல்லை, பெயரற்ற 'சிந்தாத நதி'... இல்லையில்லை, இது வேறு எதுவோ' என விசித்திரம் மீண்டும் விசித்திரமாகும்.
'சிந்தாநதி ஓட்டத்தில் துள்ளு மீன்' என்ற கடைசி வரி படிக்கையில் அந்த சிறு மனதிலும் மீன் உதறிய நீர்த்திவலையின் சாரல் தெரிக்கும். அப்பொழுது எனக்கு இவர் யாரென்று தெரியாது.
இன்னொரு வார சிந்தாநதியில் பீரோவில் அம்மா தன்னிடமிருந்து பெற்ற பணத்தை வைத்ததாக நினைவில் பிள்ளை அதை கேட்க, அம்மா இல்லையே எனவும் பொய் சொல்லாதேம்மா என்பான். அந்த சொல் கேட்டதுமே மரித்துப்போவாள் அம்மா. (சிந்தாநதியில் ஒரு கூழாங்கல் என்று கடைசி வரி... என்று தினைக்கிறேன்). 'சொல்லுக்கு இவ்வளவு சக்தியா, எழுத்துக்கு இவ்வளவு சக்தியா?!' என அதிர்ந்த அந்த நாளிலும் எனக்கு இவர் யாரென்று தெரியாது.
பின்னர் உள்ளூர் நூலகத்தில் தேடித்தேடி படித்தாலும் பலது புரியவில்லை என ஒதுங்கியபோதும் எனக்கு இவர் யாரென்று தெரியாது.
சில வருடங்களுக்கு முன் 'ஜன்னல்' என்ற நூலில் இவருடைய நேர்முகம் படிக்கையில் ஆங்கிலமும் தமிழும் சரளமாட ஒரு வசீகரமான எழுத்தாளர் என்ற எண்ணம் தோன்றியது.
அதற்கு முன்னரே அவரது சில நாவல்கள் 'த்வனி, புத்ர' போன்றவை பிரமிப்பு தந்திருந்தன. 'கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி' இவருக்கு கேட்பதை 'எல் எஸ் டி' ரகம் என வாத்யார் (சுஜாதா) எழுதியிருந்தாலும் வியப்பு குறையவில்லை. அந்த வரிகளை படிக்கும்வரை அப்படியான ஓசை ஒன்றை என்னால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது.
யாருடைய பரிந்துரையுமின்றி 'அபிதா'...
(என் வயதினர் அநேகருக்கு இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!)
தி. ஜாவின் பாயாசம் கதை வர்ணனை ஒருவிதம் என்றால் தன் காதலி போலவே இளம் வயது நகலை பார்த்ததும் மனதில் தெறிக்கும் எண்ணங்களை, இயலாமையை, அந்த 'விபத்தை'...
கடவுளே! தமிழ் சொற்களுக்கு இவவ்வ்வளவு வலிமையா என மனது தூக்கிப்போட்டது (நெபாகோவின் லோலிடா நாவலில் 'stream of consciousness' வகையில் விசைகூட்டி விழுந்த ஆங்கில சொற்றொடரை படித்தபோது அந்த மொழி மீது ஏற்பட்ட வியப்பைவிட பன்மடங்கு அபிதா வாசிக்கையில்)...
அதன் பின் சௌந்தர்ய, புத்ர என மறுபடி மறுபடி படிக்கையிலும் எனக்கு இவர் யார் என்று புரியவில்லை.
சென்ற நூறாண்டின் தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்தவர்களில் தனிப்பிறவி இவர் எழுத்து.
ஒரு நூலேனும் வாசித்துதான் பாருங்களேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக