முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேய்மழை, நிற்கவில்லை இன்னும்.


ஒரு பெருமழைக்காலத்தின் முதல் நாளில் மரித்துப்போனான்.

அதற்கு முந்தைய நாட்கள் விரைவாகவே, அடர்த்தியான வேலைகள் கொண்டதாகவே அமைத்துக்கொண்டான்.

பேர் தெரிந்த தெரியாத செடி கொடிகள் புல் பூண்டுகள் குட்டை மரங்கள் நெட்டை மரங்கள், வாத்துகள், கோழிகள், புறாக்கள், ஆடுகள், மாடுகள், கிளிகள், அணில்கள்...
காக்கை, குருவி, வண்ணப்பூச்சி, செம்போத்து, மயில், மரங்கொத்தி, இரட்டைவால் குருவி, தவிட்டுக்குருவி, தேன்சிட்டு, கொசுத்தேனி, கொட்டும் தேனி, மரவட்டை, வெட்டுக்கிளி, இலையுண்ணும் கம்பளிப்பூச்சி, பழந்திண்ணி வவ்வால், கும்பிடு பூச்சி, தாழப்பறந்த தட்டான்கள், கறுப்பெறும்புகள், வண்டுகள் என தன் வாழ்வை மகிழ்வித்த அனைத்துயிரிடமும் உரையாடிய வண்ணமே அப்பொழுதுகள் கழிந்தன. 


'நீங்கள் பறந்து, ஊர்ந்த காடுகளை நான் காணுவது சாத்தியமில்லை. உங்கள் இறகின் நிழல் பட்ட மலைகள் அனைத்தையும் நான் கண்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் விதைகள் பயணம் செய்த பாதைகளை நான் கற்பனையில்கூட பார்த்ததில்லை...

மரித்தபின் புதைக்கச்சொல்லியுள்ளேன். என் இனத்தில் சிலராவது, எனது ஆன்மாவிற்கு அருகிலிருப்பவர்களாவது அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். என்னைச்சுற்றி ஏராளமான தானிய விதைகள், செடி, கொடி, மர விதைகள் விதைக்கச்சொல்லியுள்ளேன். என்னையே  உரமாய் கொண்டு் இவையனைத்தும் தழைக்கும், பல்கும், பெருகும். அப்பொழுது நீங்கள் செய்யவேண்டி நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்... உங்கள் சுவடுகள் / நிழல்கள் படிந்த மேற்சொன்ன இடங்களில் எல்லாம் என்னை கொண்டு சேர்ப்பீர்களா?'

மகிழ்வாய் தலையாட்டின மரங்கள், செடிகள் தவிர்த்த ஏனைய உயிரனைத்தும்.

'எங்களை ஏன் நண்பா விட்டுவிட்டாய்?' என விடுபட்டவை கேட்க, நெகிழ்வாய் மொழிந்தான், 'என் வேரல்லவா நீங்கள்? நான் மரித்தபின்னும் என்னை தாங்கியது போல உம்மிடம் தங்க வரும் உயிரனைத்தும் தாங்கி, உறையுளாய் நீவிர் இருப்பீர். இதைத்தாண்டி வேறென்ன கேட்பது?'

மகிர்வோடு பூச்சொரிந்தன மரங்கள், ஒத்திசைந்தன செடிகள், பயிர்கள், புல்லினங்கள்.


காற்றின் முறை. 'நண்பா, எனை ஏன் விடுத்தனை?' என துயருற்று காற்று கேட்க, 'நானெங்கு விடுத்தேன்? நீயல்லவா எனைவிட்டு நீங்கப்போகிறாய்?! நட்பே, உன் துணையன்றி மரித்தபின் என் பயணம் எங்கணம் நீளும் நீயே என் நீட்சி!' என்றான்.

சிரம் தடவிச்சென்றது காற்று.



'என் மீது நின்று பலரிடமும் வேண்டுகிறாய், என்னிடம் எதுவும் கேட்கவில்லையே' என வருந்தி நிலம் வினவ 'பத்திரமாய், பொக்கிஷமாய் எனை உன்னுள் காத்து, உரமாய் மாற்றி, பக்குவமாய் வழங்குவாய் என் பயணம் தொடர உதவப்போகும் தோழமைக்கு' என கனிவாய் பதில் தந்தான். 

அவன் காலடி நிலம் குளிர்ந்து புதிதாய் ஒற்றை இலை துளிர்த்தது.

'உனக்கும் நீ விரும்பும் அனைத்துக்கும் ஆக்கம் தந்த எனை ஏன் விடுத்தனை?' என ஒளி கேட்க, 'விட்டு விலக முடியாது தொட்டுத்தழுவும் பந்தம் நீ. உன்னிடம் சொல்லாமலா? இந்த உலகனைத்தும் என்னை நட்புகள் பரப்பியபின் உன் தழுவலில் மீண்டும் தழைப்பேனே. நானெங்கு  உனை நீங்குவது?' என்றான்.

'நிலத்தின் மேலிருக்கும் உன்னை மட்டும்தானே என்னால் காணமுடியும். உன் சில பகுதிகளாவது வேராக மண்ணடியில் இருக்குமே?' என ஒளி மீண்டும் வினவ, மழையை துணைக்கழைத்தான்; 'தொட்டது செழிக்க, வாழ்வு வளர்க்க உன் வருகைக்காக ஆவலோடு காத்திருந்த நான் உன்னிடம் சொல்ல தனிச்செய்தி ஒன்று உண்டு. எப்பொழுதெல்லாம் நான் சோர்ந்தேனோ, துவண்டேனோ, அப்பொழுதெல்லாம் என் வேர் நனைத்து உயிர் வளர்த்தாய். ஒளியின்றி உன் பயணமும் இல்லையல்லவா? ஒளி தொடாத என்னை(வேர்களை) நீ எப்போதும் நனைத்திருப்பாய் என வாக்கு தா நண்பா, ஒளியிடம்' என்றான்.


ஒளியின் கையில் மழை சத்தியம் செய்து காற்றில் மறைந்தது. ஒளி கனிந்தது.

'இந்தப்புவி முழுதையும் என் பேரன்பால் அணைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது' என புன்னகையுடன் ஒரு பெருமழைக்காலத்தின் முதல்நாளில் மரித்துப்போனான். 

பேய்மழை நிற்கவில்லை இன்னும்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...