வீரிய விதைகளும் மலட்டு தேசங்களும்
வீரிய விதை - விளைச்சல் பெருக்கும். மறுபடி ஊன்றினால் முளைக்காது!
ஒரு பழத்தில் அடங்கியுள்ள விதைகளை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு விதையில் அடங்கியுள்ள பழங்களை எண்ணவே முடியாதென்பது முதுமொழி; அனுபவ மொழி.
ஒரு பருவத்தின் விளைச்சல், எண்ணற்ற சூழலியல் காரணிகளால் முடிவு செய்யப்படுகிறது; விதைகளால் மட்டுமே அல்ல.
விதையின் மரபோ தொன்மையோ அறியாத நவீன அறிவியலாளர்கள், ஒரு குறுகிய கால விளைச்சல் விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, 'பார்! இந்த விதையின் விளைச்சல் சரிவோ சரிவு. நாங்கள் இதை நவீன 'மருத்துவமனைகளில் வாளால் அறுத்துச்சுட்டு' விளைச்சல் பெருக்கிவிட்டோம் என மார்தட்ட, அவர்களுக்கு 'படியளக்கும்' பேராசை பெருவணிக நிறுவனங்கள், இந்த விதைகளை சந்தைப்படுத்தி ஒரு புறம் பணம் அள்ள, மறுபுறம் இந்த புதிய விதைகளின் வீரியத்தை பல்லுயிரும் பதம் பார்க்க, தொடங்குது முடிவற்ற யுத்தம்...
கடுமையாய் தாக்குவது 'அ' பூச்சிதான் என ஆய்வு செய்து, இந்த முறை இன்னும் வீரியம் + 'அ' பூச்சியின் தாக்குதலை தாங்கி வளரும்; விலை சற்றே அதிகம் என அதே நிறுவனங்கள் பணம் பறிக்கும்.
'ஹா! நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன்!' என 'அ' பூச்சி கெத்து காட்டி ஆர்வமாய் உண்டு அழிக்க, தலை சொரியும் நிறுவனங்கள் ஏவும் பிரம்மாஸ்திரம் 'உயிர்க்கொல்லி, அ பூச்சியை அழிக்க! எங்கள் வீரிய விதையோடு பயன்படுத்தி விளைச்சல் பெருக்குவீர்! பென்ஸ் கார் வாங்குமளவு லாபம் சேரும்!!' என அடுத்த கட்டம்.
இதற்குள்ளே கடனாளியான ஏமாளி வேளாளர்கள் 'ஆஹா, இந்த முறை விளைச்சல் பொங்கும். கடனெல்லாம் அடச்சி காரு பங்களா வாங்கிடலாம்!' என மேலும் கடன்பட்டு இந்த விதை வாங்கி, அவர்களிடமே உயிர்க்கொல்லியையும் வாங்கி தெளிக்க, 'அ' பூச்சி தெரித்தோட, சற்று காலம் கழித்து 'ஆ' பூச்சியின் அதிரடி தாக்குதல்!
சமாளிக்க முடியாமல் வேளாளர் கயிற்றில் தொங்க, "புதிய வெளியீடு! 'அ' 'ஆ' பூச்சிகளை தாங்கி வளரும் வீரிய விதை இதோ, உங்களுக்காகவே!" என அடுத்த வேளாளனின் 'கழுத்துக்கயிற்றின் அளவெடுக்கும்' இந்நிறுவனங்கள்...
தற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம். அவன் தொங்கிவிட்டதால் சட்டம் செல்லாது.
தற்கொலைக்கு தூண்டுவதும் சட்டப்படி குற்றம்; பேராசை பெருவணிகத்திடமும் சட்டம் செல்லாது...
பருவத்தே பயிர் செய், பருவம் அறிந்து பயிர் செய். விளைச்சல் வணிகமல்ல, வாழ்வாதாரம் என்பதெல்லாம் உணர்வில் உயிரில் ஊறிய நம் பாட்டன் முப்பாட்டன் வீடுகளில் பத்து பதினைந்து வாரிசுகள். தம் வேலைகளை தாமே செய்து பயிர் வளர்த்து உயிர் வளர்த்து பகிர்ந்து மேலும் உயிர் வளர்த்து என தெளிந்த நீரோடை போன்ற வாழ்வில் 'அறிவியல் வீரியம்' கலந்த இரண்டே தலைமுறைகளில் 'குழந்தையின்மை / கருத்தரிப்பில் சிக்கல்' என இன்று உலக வணிகத்தின் வேர்களால் எதிர்காலம் சூழப்பட்டு... தேசங்கள் மலடாகிக்கொண்டிருக்கின்றன.
உணவே மருந்து என வாழ்ந்த நம் நாட்டில் மட்டுமே மரபு விதைகளை மீட்டெடுக்கும் வேலைகள் தன்னார்வலர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இழந்தவற்றை மீட்க இவர்கள் காட்டும் ஆர்வம் ஏனோ நம் அரசுகள் காட்டுவதில்லை....
மரபு விதைகளை மீட்டு பகிர்ந்து வளர்த்து பெருக்கி பகிர்ந்து என நம் பண்டைய வாழ்வியல் நோக்கி திரும்பினால் மட்டுமே நம் தேசம் இழந்த ஆண்மையை திரும்பப்பெற முடியும். உடும்புக்கறியும் உதவாது :-)
பின்குறிப்பு:
ஒரு திரைப்படத்தில் புலி கோவிந்தன் / கவுண்டமணி. வீடெங்கும் புலி வேட்டை புகைப்படங்கள், வேட்டைத்துப்பாக்கிகள். உண்பது, உறங்குவது அனைத்தும் புலிப்பாணி. ஊரே நடுங்கும் இவரது கீர்த்தியால்.
புலி கோவிந்தன. ஒரு நாள் சட்டியிலிருந்து தண்ணீரை புலி போல உறிஞ்சிக்கொண்டிருக்கையில் ஒரு பொடியன் 'அம்மா, மேலத்தெருல புளிம்மா' என கூவிக்கொண்டே ஓடுகிறான்.
நம் புலி கோவிந்தன் துப்பாக்கி சகிதம் உடனே புலி வேட்டைக்கு விரைகிறார். புலி வந்தே விட்டதே ஊருக்குள்!
மேலத்தெருவில் சைக்கிளில் ஒருவன் புளி விற்று கூவிக்கொண்டே செல்கிறான் 'புளி வாங்கலியோ புளீஈஈ'.
அவனை துப்பாக்கி முனையில் சினந்து நிறுத்துகிறார் புலி கோவிந்தன்; 'ஏண்டா, என்ன தைரியம் இருந்தா புலிய கொண்ணு கூறு போட்டு ஊருக்குள்ளயே கூவிக்கூவி விப்ப??!!!!'
சைக்கிள்காரன் மரண பயத்தில் உளறுகிறான்; 'ஆமாங்க... வந்துங்க... கொட்டை எடுத்த புளிங்க...'
கோவிந்தனின் கோபம் உச்சம் தொடுகிறது; 'அடப்பாவிகளா! அதையும் எடுத்திட்டிங்களாடா!!!!!!!!!' என.
நாம்தான் (கேள்வி) கேட்காமலே கொடுத்துவிட்டோமே!
கருத்துகள்
கருத்துரையிடுக