தேன் ஈக்கள் இயற்கையின் இயக்கத்துக்கு தம் சிறகசைவால் வலு சேர்க்கும் உன்னதங்கள்.
மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை என காதலி காதலனிடம் சொல்கிறாளென்றால் அது இவர்கள் இனத்தின் உரையாடலாகவே இருக்கும். வசந்தத்திற்கு சிட்டுக்குருவிகள் வண்ணம் சேர்ப்பது போல, தேனீக்கள் நம் உணவுக்கு வண்ணம் சேர்ப்பவை.
ஒரு மிக முன்னேற்றமடைந்த சமுதாய கட்டமைப்பு, பணிப்பகிர்வு, தொலைநோக்குப்பார்வை, உணவு சேமிப்பு... இவையத்தனையையும் ஒரு மரக்கிளையில் காற்றில் ஊசலாடியவண்ணம் நிகழ்த்தமுடியுமா நம்மால்? இச்சிறுபூச்சிகள் அற்புதத்தின் பெருவடிவு அல்லவா!
இரு வேறு தேனீ கூட்டங்கள், உணவுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ என்றாவது, எங்காவது சண்டையிட்டதுண்டா?
நம் வீடழித்து கூடு கட்டியதுண்டா?
காடழித்து கழனியமைத்ததுதான் உண்டா?
தேனீக்கள் ஓரிடத்தில் கூடு கட்டினால், அந்த இடம் அமைதியான, நஞ்சற்ற, பாதுகாப்பான இடம் என்று பொருள். இன்று மலைகளில் / காடுகளில் மட்டுமே அவை கூடு கட்டுவது இதனால்தான்.
நகருள் இப்படி ஒரு சூழல் அபூர்வமாக அமையுமானால் அங்கும் இவை கூடு கட்டும்.
அந்தக்கூடு மனிதர் கண்ணில் பட்டதும் சூழல் மாறும். 'கொட்டுமே' என பலரும், 'புகை போட்டு கலச்சிடலாம்' என சிலரும்...
முடிவெடுக்குமுன்பே இரவோடிரவாய் எவனோ ஒருவன் அறுத்து பிழிந்து குடித்து... வீசிச்செல்வான்.
வந்தாரை வாழ வைக்கும் நம் மண்ணில் உணவு தேடி வரும் (நமக்கு உணவை வழங்க வரும்!) சிறு பூச்சிகளுக்கு ஏனோ இன்று இடமில்லை...
நகரங்களில் இப்படியென்றால் வேளாண்மை வாழும் சிற்றூரில்... பூக்களும் நஞ்சாச்சு, அவை தீண்டிய தேனீக்களும் மாண்டாச்சு...
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது முதுமொழி.
தேனீக்கள் இல்லா ஊரில் பூ காயாகாது, தாவரம் தழைக்காது, வாழ்வு நோயில் வீழும் என உணர்ந்தவர் கோயில்தோறும் நந்தவனம் அமைத்து பூக்கள் வளர்த்து தேனீக்களை வரவேற்கவும், அந்த ஊரில் தொட்டது துலங்கி நட்டது தழைந்து விளைச்சல் பெருகும், மகரந்த சேர்க்கையால். இதனால்தான் கோயில் இருக்கும் ஊர் தழைந்தது.
இன்று கோயில்களில் தரையனைத்தையும் பூசி மெழுகி, நந்தவனங்களை மனிதர் வசிப்பிடமாய் மாற்றி, விவசாயம்/விளைச்சல் நொடித்ததென செயற்கை உரம் கொட்டி செயற்கை உணவு வளர்த்து. 'இந்த நஞ்சுணவு எனக்கு மட்டுமே' என ரவுண்டப் தெளித்து ஏனைய உயிரனைத்தையும் கொன்று, நம் நஞ்சுணவு நம்மை கொல்லத்தொடங்க பதறி மருத்துவம் தேடி ஓடி, அவர்கள் கைவிரித்தபின் இயற்கையிடம் தீர்வு வேண்டி புல்லையும் கிழங்கையும் உண்டும் மருகி மாயும் பெருங்கூட்டமாய் நாம்.
செயற்கையாய் பெட்டிகளில் தேனீக்கள் (கூடு) வளர்த்து, அவற்றின் உணவை கொள்ளையடித்து, விற்று என நாம் நவீன வணிகம் பெருக்க, நாமனைவருமே ஏதோவொரு 'பேராசைப்பெருவணிக'த்தின் செயற்கைக்கூடுகளில் அவர்களுக்காக திரவியம் சேமிக்கும் தேனீக்கள் என்பதை யார் சொன்னால் கேட்போம்?
கருத்துகள்
கருத்துரையிடுக