இது வலிக்கும் நிஜம்... |
உரிமைகளுக்காக நம் குரல் ஓங்கி ஒலிப்பது நம் இனத்தின் அடிப்படை குணங்களுள் ஒன்றல்லவா?
அந்தக்குரல் எழுப்புவது சத்தமா சங்கீதமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
நேற்று ஆடி முதல் நாள். பழமைமிகு நம் மரபில் (ஆதியில் அனைவரின் மரபும் ஒன்றாய்தான் இருந்தது) இது வேளாண் பணிகளை இறை வேண்டி துவங்கும் பெருநாள்.
இந்த ஆடி மாத உழைப்புதான் வரும் மாதங்களில் சோறு போடக்கூடிய விதைப்பு என்பதால், புது இணை மோகம்கூட குறுக்கிடக்கூடாதென்று ஆடியில் கணவன்-மனைவி பிரிந்திருப்பது இதற்காகவேதான் (ஆடியில் கரு உருவானால் கோடையில் பிரசவம். தவிர்க்கவே பிரிவு என்பது பின்னாளில் வந்தது).
நாம் ஆடிப்பிரிவை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது போல் நம்முடனே வாழ்ந்து அடிப்படை வாய்ப்புகள் / உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், எந்த வேற்று மதக்கதவுகளை தட்டி அடைக்கலமானாலும், இந்த ஆடி முதல் தினத்தை இன்றுவரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், மாரியம்மனுக்கு / மேரியம்மனுக்கு கூழ் காய்ச்சி. (ஆடியில் தொடங்கும் வேளாண் பணிகள், அவர்கள் வீட்டிலும் வரும் மாதங்களில் உலை கொதிக்க உதவும்!).
மத மாற்றம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்க்கு வடிகால் போல தோற்றமாயை தரும் ஒரு exploitation channel. அவ்வளவுதான். வடகிழக்கு மாநில மக்களை நம் வணிக நிறுவனங்கள் 'பயன்படுத்திக்கொள்வது' போல.
இப்படி, நம் மரபின் எச்சங்களான நாம் அனைவரும் எந்த எச்சம் பெரிது என இந்த தளத்திலும் முஷ்டி மடக்குவது, வெறுப்பு உமிழ்வது, சத்தமா சங்கீதமா?
சிக்கலின் நுனி கண்டுபிடித்து அவிழ்க்கவேண்டிய நாம், எந்த பேன்ட் எய்ட் நல்லது / உசத்தி என திசை மாறி...
கேபிடலிச கடவுள் ஒருவர் மட்டுமே சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள், உயர்வு தாழ்வுகள் பார்ப்பதில்லை.
உலகின் அனைத்து மதங்களும் போதிக்க போராடும் செய்தி 'அனைத்துயிரிடமும் அன்பு செய்'!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் எல்லா கடவுள்களும் சொல்லும் இந்த எளிய செய்தி, ஏனோ மேலான வாழ்வு வாழும் மனிதகுலத்திற்கு இன்றுவரை புரியவில்லை.
குறுகிய வட்டம் விட்டு வெளியே வந்து எல்லையற்ற வானில் பறக்கத்தொடங்குங்கள். உங்கள் அனைவரின் வாழ்வு, வரம்.
கடவுளரின் எளிய செய்தி உங்கள் வாழ்வின்வழி பரவட்டுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக