முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆய்!

எச்சரிக்கை 1: நீள்பதிவு.

எச்சரிக்கை 2: ரத்த அழுத்தம் உள்ளவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இப்பதிவை தவிர்த்துவிடுங்கள்!

ஒரு நகரம் தன் சுத்தத்திற்கு தரும் விலை என்ன தெரியுமா?

சுத்தம் செய்வோர்தான் யார் என்றாவது நாம் அறிவோமா?

இன்றுவரை, சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டு வரலாற்றில், இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாதது இங்கு மட்டுமே என்றாவது தெரியுமா?

சென்னையில் ஒரு அதிகாலையில் பல புற நகர் பகுதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் குளித்து உடை உடுத்தி வேலைக்கு கிளம்பும் தகப்பன்மார், தாய்மார், இளைஞர்கள், அருகிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பெயரேட்டில் கையெழுத்திட்டு, தம் தளவாடங்களை சுமந்துகொண்டு குப்பை இருக்கும் இடம் தேடி விரைவர்.

6 முதல் 11 வரை பணி நேரம்.

வாரக்கணக்கில் நாறிக்கொண்டிருக்கும் குழம்பு, கறிசோறு முதல் நிறைந்த டயாப்பர், நாப்கின்கள் வரை... கைகளில் உறை கிடையாது, முகத்தில் சுவாசத்தடுப்பு கிடையாது. மரியாதை... சுத்தமாய் கிடையாது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்பவருக்கும் இவர்களுக்கும் ஏன் இந்த பேதம்.சிறு குடலை கீறி தையலிட்டு மூடுபவர்க்கு கிட்டும் பாதுகாப்பு, நம் நகரங்களின் நாசமாய்ப்போன பெருங்குடல்களை கீறி தினமும் தூர்வாரும் இவர்களுக்கு ஏன் கிட்டுவதில்லை?

11 மணிக்கு வேலை முடிந்து, அவமானப்படாமல்* வீடு திரும்புவோர்
தம் நெரிசலான வீதிகளில் கேரம் போர்டுகளை எடுத்து வைத்து இருட்டும் வரை விளையாடுகிறார்கள், சிலர் போதைப்பொருள் விற்கிறார்கள், பலர் அதனாலோ அல்லது ஏதாவது பொய்வழக்கிலோ கைதாகிறார்கள், கட்டப்பஞ்சாயத்து மூலம் வெளி வருகிறார்கள், தம் பணி தொடர்கிறார்கள்.

இவர்களை சந்திக்க கட்டுக்கடங்காத ஆவலுடன் இக்குடியிருப்புகளை சுற்றி வரும் பணக்கார இளைஞர்களும் இவர்களது பன்னாட்டு வாகனங்களும், போதை சமத்துவம்! ('கஸ்மாலம், வூட்டாண்ட வராத, இஸ்கூலுகிட்டயே.. ன்னு எத்தன தபா சொன்னாலும்... அண்ணன்ட்ட சொல்லிவை, போலீசு புட்ச்சா ஒரு போன் போடுன்னு')

இவர்களது சொந்த பந்தங்கள் அள்ளுவதால்தான் நம் நகரின் மலக்குழிகளும் சுத்தமாகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஏன் இந்த வேலைக்கு வேறு யாரும் போட்டி போடுவதில்லை?

ஏன் இவர்களுக்கு பணிக்கான அடிப்படை சுகாதார பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதில்லை?

(வாழ்வுரிமை மறுக்கப்பட்ட இவர்களை 'உங்கள் பாவங்களை நாங்கள் கழுவுகிறோம்' என்றோ 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்றோ கனிவாய் யார் அணுகி ஏய்த்தாலும் அவர்களையும் நம்பி இந்த நசிந்த இனம் அவர்களது வழிபாட்டுத்தலங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறது. 'நம் வழிபாட்டுத்தலங்களில்?' என்கிறீர்களா, அங்குதான் உள்ளேயே அனுமதிக்கமாட்டோமே!).

கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியவர்களுக்கும், செவ்வாய்க்கு கோள் ஏவுபவர்களுக்கும் ஏன் இந்த கழிவை கையாளும் வேலைகளை, மலம் அள்ளும் வேலைகளை, போர்க்கால வேகத்தோடு எந்திரமயமாக்க முனையவில்லை?

இவர்கள் இப்படி வாழ்ந்தால்தான் நாம் நாற்றமின்றி வாழமுடியும் என்பது என்னமாதிரியான சிந்தனை?

'ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி' என்பதை இன்றும் நாம் தவறாய் பயன்படுத்தலாகுமா?

தேசப்பற்று என்பதை பெரும்பான்மையினர் தவறாக, ஒரு மதம் சார்ந்ததாக, அல்லது அந்த நிலைப்பாட்டை எதிர்ப்பதாகவே அணுகுகிறார்கள். அதிலும் நடுநிலை தாண்டி 'தனி மத/கட்சி/மொழி/மனித விசிறி' என்ற நிலையில் அநேகர், காதலியின் கையில் நீர்த்திவலையாய்...

உண்மையான தேசப்பற்று என்பது நம் மண்ணின், மொழியின், மக்களின் வாழ்வாதரங்களின்மீதான பற்று... வேற்று மண்ணை / மொழியை / சிந்தனைகளை ஒருபோதும் புறம் தள்ளாது.

ஆள்பவர் யாராயினும் நம் வாழ்வியலுக்கு நல்லது செய்தால் ஆதரிப்பதும் அல்லது செய்ய முயன்றால் செய்யவிடாது சுட்டி தடுப்பதுமே உண்மையான தேசப்பற்று...

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் 'பூட்டப்பட்ட பாம்பே டைப் கழிவறைக்குள் (சிமெண்ட் தளத்தில் மலம் கீழே செல்ல ஒரு குழி, அவ்வளவே) மாட்டிக்கொண்ட சிறுவன், அருகில் விஜயம் செய்திருக்கும் ஒரு சினிமா நாயகனை, தன் ஆதர்ச ஆளுமையை, எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற வெறியில் அந்த மலக்குழியில் குதித்து அதன்வழியே வெளியேறி, உடல் முழுதும் மலம் வழிய விரைந்தோடி தன் நாயகனை கண்டு  கையெழுத்து வாங்கி ஜன்ம சாபல்யம் அடைவது போல், நாமும், நம்முடைய ஆதர்சங்கள் அனுதினமும் மாறிக்கொண்டிருந்தாலும்.


நாம் நுகர்ந்தபின் வெளியே வீசும் அனைத்தும் மலம்தான், இயற்கை தந்தது தவிர. உடலுக்கு ஒன்பது வாசல், மலத்துக்கு எண்பது வாசல்.

'அந்த ஃபாரின் செண்ட்டுல gas ஏ இல்லயாம். அப்டியே மணக்குமாம். செலவும் மிச்சமாம்'
...

கவலை வேண்டாம், பூமியின் நாசித்துவாரங்களை நாம் என்றோ மலம்கொண்டு அடைத்துவிட்டோம். 

அதனோடு நம் இனத்தின் ஒரு சிறு கூட்டத்தை பிணைத்துவிட்டோம்.

நம் கடன் மலம் செய்து கிடப்பதே!


(ஒரு ஆளுமையை வாழ்த்துபவரை கட்டிப்பிடித்து கரம் குலுக்குபவரும், எதிர்ப்பவரை அடித்துத்துன்புறுத்துவோரும் தம் பெற்றோரை மறந்தவர்கள்! சின்ன வயதில் நம் பெற்றோரால் ஆகாதது எதுவுமில்லை என இறுமாந்து, வளரும்போது அவர்களது அக்கறையை விமர்சித்து, முதிரும்போது அவர்கள் அருகிலிருந்தால் தெம்பாயிருக்குமே என ஏங்குவதும் ஏன் தெரியுமா? என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் பெற்றோர் பெற்றோர்தான். நம்மை ஆள்பவர்கள் அப்படி இல்லையே!).

*

மணி என்பது இவரது பெயர். பெருநகர துப்புறவு தோழிலாளி. குப்பை டிராக்டர் ஓட்டுநர்.

மேட்டுக்குடி ஒருவர் குப்பைகளை குப்பைத்தொட்டிக்கு வெளியே இறைத்திருந்த விதத்தை விமரிசிக்கவும், அந்த மேட்டுக்குடியிடம் சரமாரியாக செருப்படி வாங்கி வீடு திரும்பினார். சில மாதங்களுக்குள் மன உளைச்சலால் மாரடைத்து நேற்று மரணமடைந்தார்.

என்ன தேசமிது? என்ன இனமிது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...