இரு ஜோடி காக்கைக்கண்கள்.
ஒயிலாய் நடைபோடும் தோகைநீண்ட மயில்.
டொட்டொட்டொட்டொட்டொட்டென சிவப்புக்கொண்டையை ஆட்டியபடி மரம்கொத்தும் குருவி.
'அப்ப்பா! என்ன ஒரு சத்தம்!!' என உடல் குளுக்கி செய்தி பறிமாறும் சாம்பல் குருவிகள்.
மலரிலிருந்து வண்ணம் பிரிந்தது போல் அகலும் வண்ணப்பூச்சி, இன்னொரு மலரில் தம் வண்ணம் சேர்க்கும், மீண்டும் மீண்டும்.
நூறு கால் கொண்டு சிற்றிடம் தாண்டும் சிவப்பு இரயில் மரவட்டை.
சிறு குளத்தில் வாலாட்டும் வண்ண மீன்கள்.
பஞ்சுப்பொதியும் முதுகுக்கூடுமாய் அருகில் மிதக்கும் நத்தைகள்.
இது இரவா பகலா என கிளையிலமர்ந்து விழிக்கும் ஆந்தைகள்.
குளிருக்கு இதமாய் கம்பளி போர்த்தி இலை மேயும் பூச்சிகள்.
புல்லின் நுனி தீண்டும் ஆவலில் விரைந்தேறும் கருப்பு சிவப்பு வண்டுகள்.
மெலிதான காற்றில் ஆடி மெல்லத்தரையிறங்கும் விடுபட்ட கொடிமலர்.
இத்தனையும் என் மனதில் எழுப்பிய வண்ணங்கள் போதாதென மென்மேலும் வண்ணங்கள் சேர்த்து கழுவிச்செல்லும் மழைச்சாரல்...
சாரலால் காதலால் தளும்பும் மனதின் அடியூற்றிலிருந்து உற்சாகக் கூவல்,
"நான் நேசிக்கிறேன்! ஐ லவ் நேச்சர்!'
பழகிப்போன கூவலால் வண்ணம் கலையாமல் உயிரனைத்தும் தம் இயல்பில் திளைக்க, அனைத்தையும் நனைக்கும், தொடர்ந்து பெருமழை.
ஒவ்வொரு துளியிலும் கரைந்து மறைந்து முகிழ்த்து துளிர்த்து... வண்ணம் குறையாமல் நான், வண்ணம் மெருகேறி நான்...
மழை தீண்டிய 'வண்ண'மும் செழிக்கும்!
கரைத்தது கரைந்தது, கரைந்தது சேர்ந்தது, சேர்ந்தது மறைந்தது, இந்த ஓவியத்தின் வண்ணத்துளிகளுள் ஒன்றாக, பலவாக...
நானும் மழையானேன்...
கருத்துகள்
கருத்துரையிடுக