மரங்கள் இலையுதிர்க்கும்
பூவுதிர்க்கும் கனியுதிர்க்கும்
கனி விதையாகும்
விதை துளிராகும்
துளிர் மரமாகும்
பல்லுயிர் வளர்க்கும்.
பறவைகள் இறகு(உ)திர்க்கும்
மீண்டும் வளரும்
வலிவுகூட்டி பறக்கும்
பழம்தேடி உண்ணும்
எச்சமிட்டு வாழ்த்தும்
காடு வளர்க்கும்.
விலங்குகள் மயிருதிர்க்கும்
மீண்டும் வளரும்
பருவத்தோடு ஒத்தோடி,
ஓடுமிடமெல்லாம் வயிற்றில்
காடுசுமந்து கழித்து
கழித்தது முளைக்கும்.
மனிதர்கள் மயிருதிர்ப்பர்
மயிர்போல் பண்பு(உ)திர்ப்பர்
அன்புதிர்ப்பர் ஏனைய
அனைத்தும் உதிர்ப்பர்
பேராசை பெருநுகர்வு
கடவுளரின் காலடியில்.
பூமியின் ஓட்டில்
அனைத்தையும் உதிர்த்ததும்
கடவுளர் குளிர்ந்து
உதிர்த்தது ஒன்றேனும்
திரும்பப்பெற வரம்
தரலாமென இறைவிரும்பி
மகிழ்ந்து வினவ
...
மயிர் கேட்பர்
...
மயிர்மட்டுமே கேட்பர்!
(உணவுப்பயிர் காக்க நஞ்சு கலந்து, உணவையே நோயூக்கியாக மாற்றி விளைச்சல் அபாரம் அற்புதம் என மார்தட்டி ஏறு நடை போடும் நம் பேராசையில் நசுங்கும் இந்தக்குழந்தைகள், நம் நிலங்களில் 'நம் உணவு நமக்கு மட்டுமே' என பிறவுயிர் அழிக்க நாம் தினம் இட்ட என்டோசல்பான் நஞ்சு சுட்ட நம் பிஞ்சுகள்...)
(என்டோசல்பான் என்பது உலகளவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட உயிர்க்கொல்லி. நாம் சந்தையில் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களெல்லாம் இந்த உயர்க்கொல்லி குடும்பத்தின் ஏதேனும் ஒரு உறுப்பினரால் ஆசீர்வதிக்கப்பட்டவையே ).
மயிரு என்பது நல்ல சொல்தான்; நாம்தான் அதையும் கெடுத்துவிட்டோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக