அவன் அதிகம் பேசி யாரும் பார்த்ததில்லை.
பயித்தியம் மாதிரி தோற்றம்; யார் பார்ப்பார் அவனை?
அவன் கண்ணுக்கு மட்டும் நிலமெங்கும் கண்ணில் தென்படும் அரிய மூலிகைகள்... முடக்குவாதம் முதல் முக வாதம் வரை அவன் தரும் மூலிகைச்சாறில் குணமானோர் ஏராளம்.
எழுதப்படிக்கத்தெரியாத இவனோடு தைரியமாய் பழகும் சிலர் எப்போதாவது 'எப்படி இதெல்லாம் தெரியுது?!' என வியந்து கேட்டால் எங்கோ நிலைத்த பார்வையுடன் 'தோணிச்சு...தோணிச்சு' என்பான்.
ஒருமுறை ஒரு இளைஞனை அழைத்து கையில் ஒரு கொத்து தழையை கொடுத்து கசக்கச்சொன்னான். அவன் கையில் இன்னொரு வகை தழை.
கசக்கிய இரு தழை சாறுகளையும் ஒரே நேரத்தில் தனித்தனியே ஒரே குதிரை லாடத்தில் ஊற்ற, கரைந்தது இரும்பு!!!!!!
எந்த வைத்தியத்துக்கும் ஒரு வேட்டி, துண்டு மட்டுமே பெற்றுக்கொள்வான். ஓயாமல் வம்பிழுத்து தூற்றிய ஊர்ப்பெருசு ஒன்றுக்கு அவன் எதையோ வெற்றிலையில் தடவிக்கொடுக்க அவர் இரண்டாம் நாளிலிருந்து தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் 'கிடா'ப்பாய்ச்சல் காட்டி ஊராரிடம் அடி வாங்கும்போது அவன் நிலைத்த பார்வையுடன் சிரித்துக்கொண்டிருந்தான்! இது நடந்தது வயாகரா வருவதற்கு முப்பது ஆண்டுகள் முன்னர்!
அய்யாவு இன்று இல்லை. அவன் தூங்க பயன்படுத்திய வெட்டவெளி மட்டும் 'அய்யாவு மேடு' என இன்றளவும் அந்த ஊரில் அறியப்படுகிறது. எந்த கல்வியறிவும் இன்றி அவன் பயன்படுத்திய அரிய மூலிகைகள் இன்றும் நம் காலடியில். அவை நமக்கு 'தோணுவ'தெப்போ, நாம் காணுவதெப்போ?!
'உலகில் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்' என ஒரு புகழ்பெற்ற வாசகம்.
நம் அடுத்த அடியில் (காலடியில்) ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும்தான்!
கருத்துகள்
கருத்துரையிடுக