கண்ணனின் குடை நிழலில்
மாயமான காளைகள்.
கவலையோடு (பசு)மாடுகள்
கலவி மறந்த மாடுகள்
விந்தில் எத்தனை நாடுகள்
ஆயர்பாடியில் உலக ஊசிகள்
விளைச்சல் மறந்த மேய்நிலம்
பால் பெருக்கும் தீ-வனம்
கறவை மறந்த காம்புகள்
காம்பை கசக்கும் எந்திரங்கள்
ரத்தமும் நிணமும் நித்தமும்
கலந்திடும் ஊற்றாய் பால்மடி
கலப்பின ஊற்றாய் பால்மடி
பாலும் நீரும் கலந்தாடி
சிலுப்பிய மத்தில் சிக்காமல்
மாயமாய் மறைந்த(து) வெண்ணெய்ப்பந்து
திகைத்த மாயவன் சினம்கொண்டு
கம்சனை அழித்த சக்திகொண்டு
உறக்கம் தவிர்த்து தேடுகிறான்
ஆயர்பாடிநாட்டின தூய மாடொன்று
அதுவரை உண்ணேன் வெண்ணெயென்று
'மா'வென்றிரைந்தது கன்று ஒன்று
தாய்க்காம்பு அறியாத தவிப்போடு!
பெருந்தவிப்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு:
நாட்டு காளைகளை நிலங்களில் இருந்து வெளியேற்றி, இனப்பெருக்கத்துக்கு வேற்று நாட்டு காளைகளின் விந்தை ஊசி மூலம் செலுத்தி, பிறப்பதெல்லாம் பசுங்கன்றாக மட்டுமே இருக்கவேண்டுமென (காளைகளால் நம் நாட்டின் பொருளாதார உயர்வுக்கு பயனில்லை என) அரசுகள் அமலாக்கம் செய்யத்துடிக்கின்றன.
பால் உற்பத்தியும் பால் மூலம் மட்டுமே வருமானம் என்பதும் நம் மரபு அறிந்திராத, பழகியிராத வணிகம். 300 வருட வெள்ளையர் ஆட்சியலும் இது மாறாதிருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில் முப்பதே ஆண்டுகளில் மாறிப்போனது...
இந்த செயல்களின் கொடும் பாதிப்புகள் கண்ணன் அறியாததா? தொடரும் விவசாயிகளின் வறுமையும் கண்ணன் அறியாததா?
தண்ணீர் விட்டா வளர்தோம் இப்பயிரை?
கண்ணீரால் காத்தோம்.
நம் நாட்டின மாடுகளின் கருணையினால் காத்தோம். கருகத்திருவுளமோ கண்ணா?!
கருத்துகள்
கருத்துரையிடுக