விவாக ரத்து - காகிதப்பூ போன்ற சொற்கள்.
காலையில் தேநீர் அருந்துதல் போல நாம் அதிர்வின்றி கடக்கும் சொற்கள்.
மண முறிவும் அதற்கு காரணமான / அதனால் ஏற்படும் மன முறிவும் - நம் காலடியில் வெடிகுண்டு போல; பதட்டம் தருபவை.
இதுவும் கடந்துபோகும் என்பதாகவே சொற்களும் வலுவிழந்து போகின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து செம்புலப்பெயல் நீராய் கலந்தது காப்பியங்களில் மட்டுமே.
1990s, 2000 வரை பல பொருத்தம் பார்த்து பண்ணிய கல்யாணங்களும், அதன் பின் ஐ.டி யின் கலாசார புரட்சியால் இன்றுவரை நிகழும் பல கல்யாணங்களும் ஆண், பெண் இருவரது (ஆண்) சமுதாய கட்டமைப்பு சார்ந்த வேறுபாடுகளினால் மட்டுமே முறிந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் வாழ்வியல் முறைக்கு ஒவ்வாத வேறு நாடுகளின் கலாச்சாரங்களின் எச்சங்கள் நம் மீது தெறித்து தெறித்து நம் வண்ணங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் நாம் முழுதாக அறிந்து/புரிந்து கொள்ளாத நம் 'சமுதாயம் சார்ந்த' நெறிகள்; மறுபுறம் கட்டற்ற தனி மனித சுதந்திரம் என்பதாக ஊடகங்கள் காண்பிக்கும் கனவுக்குமிழ்கள்... நம் சமுதாயம் தடம் மாறிக்கொண்டிருப்பதால் இன்று மண முறிவு பெற்றுத்தரும் இடங்களில் அலைமோதும் கூட்டம், டாஸ்மாக் கடைகளை விட அதிகமாய்!
பெண்ணை தோழமையாய் பாவிக்க தவறுவதே அடிப்படை சிக்கல். ஒரு புகழ்பெற்ற கானகப்பழமொழி இது 'வேட்டையாடப்படும் விலங்கு தப்பிக்க வழியேயில்லாதபோது வேட்டைக்காரனையே வேட்டையாடும்'!. பெண்ணை விலங்காய் அணுகுபவர்...வேட்டையாடப்படுகின்றனர்.
பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...
உன்னைப்போலே யெந்தன் உள்ளம் ஆடுது...
புது தாளம் தொட்டு...ஓ....
புது ராக மெட்டு...
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ...
இது யார் பாவம்...
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதர்கென்று பெண்ணினமோ...
இது யார் சாபம்...
ந்யாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது....
(பன்னீர்)
பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை...
நிஜ வாழ்க்கையிலே...
பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே...
ந்யாயங்களோ பொதுவானது...
புரியாமல் போனது...
பன்னீர் புஷ்பங்களே...
கானம் பாடு...
40 ஆண்டுகளுக்கு முந்தைய நிஜம் இன்றும் நிஜமாக இருப்பதால் வரும் சிக்கல்.
பெண்களின் பொருளாதார சுதந்திரம், ஆண்களே தேவையற்ற ஒரு உலகை நோக்கி அவர்களை நகர்த்துகிறது (கரு முட்டை வங்கிகள், விந்து வங்கிகள், ஒரு பால் மணம் etc).
சுதந்திரம் ஏராளமான பொறுப்புகளை உள்ளடக்கியது (freedom means immense responsibility) என்றும், ஆணும் பெண்ணும் சமமல்ல, இரு வேறு உயிரினங்கள்; ஒத்திசைவது மட்டுமே நல்லிசைக்கு அழகு என்றும் இளையவர்களுக்கு 'வாழ்ந்து காட்ட' பல்லாண்டு மணமானோர்க்கும் நேரமும் ஆர்வமும் இல்லை.
சொல்லித்தெரிவதில்லை இக்கலை! நாம் வாழ்ந்து வழி காட்டவேண்டியது...
எத்தனை கோடி முகம், எத்தனை செப்பு மொழிகள் இருந்தாலும் சிந்தனை மட்டும் மேற்சுட்டிய இரண்டுமாயிருந்தால் மண வாழ்வு மேம்படும், நமக்கும் நம்மைப் 'பார்த்து' வளர்பவர்களுக்கும்.
ஆண்களால் உருவாக்கப்பட்ட சமுதாய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகவே தம்மை குறுக்கி வாழ்ந்தவர்கள் தனி மனித தேவைளும் ஆசைகளுமே வேண்டும் என வேறு தடம் தேடி பயணம் தொடங்கியாச்சு. உணர்ந்து, புரிந்து வழிகாட்டும் கடமை நமக்கு உண்டு. இந்த பயணம் தவிர்க்க இயலாதது.
(பின்குறிப்பு : இணைத்துள்ள படங்களை மூன்றாவதிலிருந்து முதல் வரை வரிசைப்படுத்தினால் பழமையிலிருந்து புதுமைக்கான கரு கிடைக்கும். இதில் புதுமை என்பது ஆதிப்பழசு; சிவனார் வாழ்ந்தது!)
கருத்துகள்
கருத்துரையிடுக