எல்லைக்கு இருபுறமும் இஸ்லாம். சுட்டது இஸ்லாம், சுடப்பட்டது இஸ்லாம். மரித்தது மனிதம். சிந்தியது என் ரத்தம். நம் ரத்தம். நாடு என்ற நிலப்பரப்பில் ஊடாடும் கோட்டுக்கு இருபுறமும், இடையறாமல்.
என் பாதுகாப்புக்கு, பல நூறு கோடி மக்களின் பாதுகாப்புக்கு, அரவான் களப்பலி மட்டும் நித்தம்.
கொட்டிய குருதியில் உன் குருதி எது? என்னது எது?
ஆளும் கட்சி எதிர்கட்சி பூசல், கிரிக்கெட், பெற்றோர் உற்றாரை காணப்போகும் மகிழ்ச்சி, பண்டிகை நினைவுகள், எதிர்காலம் பற்றிய ஆசைகள், கவலைகள்... எல்லாவிதத்திலும் நீயும் எங்களுள் ஒருவன்தானே?
உன்னை கடத்தி நெற்றியிலும் கழுத்திலும் சுட்டவனும் எங்களுள் ஒருவன்தானே?
நிலக்கோடுகள் மனிதர்களை பிரிக்கலாம், ஆனால் மனித உணர்வுகளை மாற்றும் ஆற்றல் பெற்றவை அல்ல. கோட்டுக்கு அப்புறமும் உனக்காக கண்ணீர் துளிகள் தரையிறங்கும்.
பண்டிகை கொண்டாட்டத்திற்கு விடுப்பில் கிளம்பிய நண்பா, உன்னை சுட்டவனும் இன்று கொண்டாடுவான்; இறை ஏற்குமா?
உண்ட சோறு செரிக்கவில்லை. நினைவில் உன் கிராமத்து வீட்டின் மரண ஓலம்... என்னுள் விழுந்த எத்தனையோ விதைகளில் நீயும் ஒருவன்; என் சிந்தனை வழியே என்றாவது உன்னை நீட்டிப்பேன்...
சுட்டவனும் உன் இடம் தேடி வருவான் பின்னொரு நாளில். அங்காவது வன்முறை நிகழாமல் இருக்க எந்த இறையை இறைஞ்சுவது என்று தெரியவில்லை...
இதை எழுதி முடிப்பதற்குள் பிகாஸ் குருங் எனும் நண்பன் நீ இருக்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறான்...
மதங்கள் தோன்றிய நாள் முதலாய் அவை அனைத்தும் கதறிக்கதறி சொல்லிக்கொண்டிருக்கும் ஒற்றை செய்தி "அனைத்துயிரிடமும் அன்பு செய். அன்பே இறை"
இது ஏன் இன்னும் நமக்குப்புரியாமலே இருக்கிறது? காதுகள் அடைபட்டாலும், கண்கள் கட்டப்பட்டாலும் குருதி வாசம் உணராதவையா நம் நாசிகள்?
என்று தணியும் இந்த குருதித்தாகம்?
(இது என் நீத்தார் நினைவுக்கடன். தயதயவு செய்து பின்னூட்டம் தவிருங்கள். எதற்கென்று தெரியாமலே இறந்து போன இந்த நண்பனுக்காக, யுத்தங்கள் இல்லாத, மதங்கள் அல்லாத எதிர்கால நல் நிலப்பரப்பில் நம் சந்ததியினர் இணக்கமுடன் வாழ உங்கள் எண்ணங்களில் விதையுங்கள். மானுடம் தழைக்கட்டும்)
கருத்துகள்
கருத்துரையிடுக