போராடுவோம் போராடுவோம்!
'அம்மா, மூச்சு விட சிரமமா இருக்கு'
அறுபது வயதை கடந்தவர் மட்டுமல்ல, ஆறு வயதை கடந்தவர்க்கும் இதே.
இத்தனைக்கும் இருப்பதென்னவோ பெரு நகரில் ஏராளமாய் மரங்கள் சூழ்ந்த Gated Communities எனப்படும் 'மதில் சூழ்ந்த குடியிருப்புக்களில்.
பாதிக்கப்பட்டவர் பலர் சமுதாயத்தில் மேல்-மத்திய மற்றும் மேல்தட்டு குடும்பங்கள்...
'டாக்டர், வாக்கிங், ஸ்விம்மிங், விளையாட்டு எல்லாம் பண்றோம், பசுமையான சூழல்ல. ஆனாலும் மூச்சு முட்டுது'.
ஆராய்ச்சிகள் பல செய்து அநேக டாக்டர்கள் எழுதித்தருவது ஆன்டி அலர்ஜிக் மருந்துகள். இதிலும் ஆங்கில மருந்துகள் மற்றும் நாட்டு மருந்துகள் வித்தியாசம் உண்டு.
ஐயன் என்ன சொன்னார்? 'நோய் நாடி நோய் முதல்நாடி தேடு' என்றார். ஆனால் மருத்துவர்கள் நாட முயல்வதில்லை. ஏனெனில் இந்த நோயின் இன்றைய முதல்நாடி அவர்களின் கண்களில் பட்டாலும் சிந்தனையில் படிவதில்லை!
Gated Communities, பசுமை சூழலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என கடந்த பத்தாண்டுகளில் உருவானவை அனைத்திலும் காணப்படுவன வரிசை வரிசையாய் செழித்து வளர்ந்து நிற்கும் 'அழகுப்பனை' மரங்கள். பெரும்பாலும் ஆண் மரங்கள்...
மகரந்தம் சேர்ந்ததும் வர வேண்டிய தேனீக்கள் எவ்வளவு வேகமாய் வந்தாலும் எத்தனை தொலைவு பறந்தாலும் பெண் இணை-பனை மரங்கள் இல்லாமல் இயல்பாய் நடக்கவேண்டிய மகரந்தச்சேர்க்கை நிகழ்வது தடைபடுகிறது. அவை தம் கால்களி்ல் சுமக்கும் மகரந்தங்கள் 'எதிலும் சேராமல்' உதிர்ந்து காற்றில் பரவி அடைக்கலமாவது நாசி வழியே நம் நுரையீரலில்!
அழகுப்பனை மரங்களை அடியோடு தவிர்த்து பல்வகை உள்ளூர் மரங்கள் நட்டு வளர்த்தால் மட்டுமே நம் நுரையீரல் நிம்மதியாய் மூச்சுவிடும்!! அதுவரை ஆன்டி அலர்ஜி மருந்துகளோடு போராடுவோம்ல!
'அடுத்த வாரம் அபார்ட்மென்ட் ஓபனிங். இருநூறு ஆர்னமென்டல் பால்ம் சொல்லருக்கேன். ஒன்னொன்னும் 12 அடி யு நோ? பாக்கவே வரிசை வரிசையா அவ்ளோ அழகா இருக்கும். வீட்டுக்கு ஒரு லட்சம் சேத்து கேட்டாலும் தே டோன்ட் மைன்ட்!'
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பின்குறிப்பு: இதைப்படித்தபின்பாவது உங்கள் வீட்டில் / அருகில் இருக்கும் அழகுப்பனைகளில் பறவைகள் பூச்சிகள் ஏதேனும் உணவு தேடி என்றாவது வருகிறதா? அமர்கிறதா? என கொஞ்சமாவது கவனியுங்களேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக