காந்தி, நம் தேசத்தின் தந்தையாக 78 ஆண்டுகள் ஆனது.
அப்படியானால் ஒருவர் பூமிக்கே தந்தையாக எத்தனை காலம் ஆகும்?
25 ஆண்டுகள் போதும் என வாழ்ந்து காட்டி, சென்றான் என் சக மனிதன் ஒருவன். பூமியை நேசித்தவன், காந்திக்கு ஆறு வருடம் பின்னால் பிறந்தவன்...
நல்ல படிப்பு படிக்கணுமா? கிறிஸ்துவனாய் மாறு என மத மாற்றம் செய்யப்பட்டு கான்வென்டில் கல்வி பயின்ற ஆதிவாசி சிறுவன்.
இன மரியாதையை விற்று கல்வி வேண்டுமா என்ற கேள்வி எழ, வெளியேறினான், கானகம் நோக்கி.
பிரிட்டிஷ் அரசு, உள்ளூர் நில முதலாளிகள், கந்துவட்டிக்காரர்கள் மூலம் கானகங்களையும் வளைக்கத்தொடங்கியிருந்த காலம்...
'ஆதிவாசிகள் கானகத்தில் வாடகைக்கு வசிப்பவர்கள். கானகமோ ஆங்கில அரசின் சொத்து. எனவே வாடகை செலுத்தவேண்டும் (!) ஏதேனும் விளைவித்தால் அதற்கும் வரி கட்டவேண்டும்' என வந்த அரசாசணை அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை. பூமி தோன்றிய நாள் முதலாய் அக்கானகத்தில் வசிக்கும் குடி அவனது. இன்று ஏன் வாடகை, வரி? என கேள்வியெழுப்பி, தன் இன மக்களை ஒன்று திரட்டி அற வழியில் போராடி நீதி கிட்டாது, ஆயுதம் தரித்து தாக்குதல் தொடங்கினான். தாக்குதலுக்கு வில், விஷ அம்புகளை ஆயுதமாக்கியவன், மத உணர்வையே ஆயுதமாக்கி ஆதிவாசிகளை ஒன்றுசேர்த்தான். தன்னை கடவுள் என்று அறிவித்து அவன் சில அற்புதங்களை செய்யவும் கூட்டம் சேரத்தொடங்கியது (தீராத வியாதி காணாமல் போச்சே அவன் கை பட்டதும்!; கானக வாழ்வின் மூலிகை நுட்பம் அவனுக்கு உதவியிருக்கலாம்...).
பிர்சாயைத் எனும் புதிய மதம் வழியே ஆதிவாசிகளை ஒன்று சேர்த்து, நில உடைமையாளர்கள், மதமாற்றம் செய்யும் குழுவினர், கந்துவட்டிக்காரர்கள், பிரிட்டிஷ் அரசு என பல முனைத்தாக்குதல்களில் இருந்து ஆதிவாசிகளைக்காத்து அவர்களின் பழமையான வழிபாட்டு, வாழ்வியல் முறைகளுக்கு மீண்டும் மாற ஊக்குவித்ததால் இன்றும் கூட தென்னக ஆதிவாசிகளும்கூட வணங்கும் உயரத்துக்கு வளர்ந்தான். (ஒரு கடவுள், பல கடவுள்களுக்கு வழிகாட்டியது மனித வரலாற்றில் இதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த்தில்லை!).
பிர்சாயத்துகள் போர்ப்பயிற்சியும் பெற்றனர். தாக்குதல்கள் தொடங்கின, தொடர்ந்தன. காட்டுத்தீயாய் 550 சதுர கி.மீ பரப்புக்கு பரவின.
சில பல வெற்றிகள், முன்னேற்றங்கள் என ஆங்கிலேய அரசை நெருக்கியவன் ஒரு நாள் கானகத்தில தன் கொரில்லா தாக்குதல் படையுடன் தூங்குகையில் கைது செய்யப்பட்டான் (இவன் காட்டில், செகுவேரா கைது செய்யப்பட்டது ஒரு பள்ளியில். செகுவேராவை அறிந்த பலருக்கும் இவனைப்பற்றி தெரிந்திருக்காது!). அவனை அணுக, பிரிட்டிஷ் ராணுவம் 400 பிர்சாயத்துகளை கொன்று குவிக்க வேண்டியதாயிற்று...
(சித்ரவதை செய்து கொன்ற ஆங்கில அரசு, 'காலராவால் இறந்தான்' என கதை சொன்னது. ஆனால் அவன் பற்ற வைத்த பொரியை அணைக்க இயலாது பழங்குடிகள் பாதுகாப்பு சட்டமும் இயற்றியது. இன்றளவும் நம் காடுகள் ஓரளவேனும் 'முன்னேற்ற' வெறியில் இருந்து தப்பித்திருக்க அவற்றுள் வாழும் ஆதிவாசிகளே காரணம் என்றால் அது மிகையல்ல.)
இத்தனையும் செய்ய அவனுக்கு தேவைப்பட்டது வெறும் 25 ஆண்டுகள்...
ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையான அரசு / பொது கட்டிடங்கள் மற்றும் அமைப்புகள் இன்னும் இந்த மண்ணின் மைந்தன் பெயரை சூடி அவன் வாழ்வை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன.
பிர்சா முண்டா என்கிற ஆதிவாசி "பூமியின் தந்தை" என மக்களால் அழைக்கப்பட்ட கதை இதுதான். (பிர்சா டேவிட், பிர்சா தாவூத் என சில பெயர்களிலும்கூட - அன்பு கூட மதங்கள் வழியே பெயர்களாச்சு போல!).
நன்கு கவனியுங்கள்; அவனது போராட்டம் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கோ அரசுக்கோ எதிரானதல்ல. அவன் தன் பூமியை காக்கவே போராடினான். அவனது பூமி அவன் வாழ்ந்த காடு!, வேறு எந்த புவியியல் அரசியல் சமூகவியல் பெயர்களும் உள்நுழையமுடியாத பரப்பு அது. காடு என்பது உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இன்றளவும் காடென்றே அறியப்படும்!
கருத்துகள்
கருத்துரையிடுக